

நாக சைதன்யா நடித்துள்ள தெலுங்கு வெப் சீரிஸான ‘தூதா’ (Dhootha) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விருதைப் பெற்ற இயக்குநர் விக்ரம் குமார் கடைசியாக நாக சைதன்யாவை வைத்து ‘தேங்க் யூ’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றதால் பாக்ஸ் ஆஃபீஸில் சோபிக்கவில்லை. இந்நிலையில், விக்ரம் குமார் அடுத்ததாக ‘தூதா’ என்ற தெலுங்கு வெப் சீரிஸை இயக்கியுள்ளார். நாக சைதன்யா, ப்ரியா பவானி சங்கர், பார்வதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூப்பர் நேச்சூரல் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் தொடரை நார்த்ஸ்டார் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
பத்திரிகையாளரான நாக சைதன்யா தன்னைச் சுற்றி நடக்கும் மர்மமான நிகழ்வுகள் மற்றும் கொடூர மரணங்களை எப்படி கண்டறிகிறார் என்பது இந்தத் தொடரின் ஒன்லைன். இந்தத் தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகிறது. மேலும், தொடரை தெலுங்கு, தமிழ், கன்னடம் மலையாளம் மற்றும் இந்தியில் காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.