மம்மூட்டியின் ‘கண்ணூர் ஸ்குவாட்’ நவ.17-ல் ஓடிடியில் ரிலீஸ் 

மம்மூட்டியின் ‘கண்ணூர் ஸ்குவாட்’ நவ.17-ல் ஓடிடியில் ரிலீஸ் 

Published on

மம்மூட்டி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘கண்ணூர் ஸ்குவாட்’ மலையாள படம் இம்மாதம் 17-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிஷோர், ரோனி டேவிட் ராஜ், ஷபரீஷ் வர்மா, அஜீஸ், ஷைன் டாம் சாக்கோ, சன்னி வெயின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ‘கும்பளாங்கி நைட்ஸ்’ புகழ் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். மம்மூட்டி தயாரித்துள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.60 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

இந்த ஆண்டில் வெளியான ‘2018’ படத்துக்குப் பிறகு அதிக வசூலை குவித்த மலையாள படம் என்ற பெருமையை ‘கண்ணூர் ஸ்குவாட்’ பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் நவம்பர் 17-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மம்மூட்டி நடிப்பில் அடுத்ததாக ‘காதல் தி கோர்’ திரைப்படம் நவம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in