கவனம் ஈர்க்கும் அருண்ராஜா காமராஜின் ‘லேபில்’ விளக்க வீடியோ

கவனம் ஈர்க்கும் அருண்ராஜா காமராஜின் ‘லேபில்’ விளக்க வீடியோ
Updated on
1 min read

சென்னை: அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லேபில்’ வெப்சீரிஸின் பெயர் விளக்கம் தொடர்பான வீடியோ கவனம் ஈர்த்துள்ளது.

‘கனா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு மே மாதம் வெளியான படம் ‘நெஞ்சுக்கு நீதி’. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருந்த இப்படம் இந்தியில் வெளியான ‘ஆர்டிக்கள் 15’ படத்தின் அதிகாரபூர்வ தழுவலாக வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக இணையத் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். ‘லேபில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரில் ஜெய், தன்யா ஹோப், மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் தொடருக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுத்தாளராக பங்களித்துள்ள இத்தொடருக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தத் தொடர் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரின் பெயரான ‘லேபில்’- க்கான அர்த்ததை விளக்கும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பொதுமக்களிடம் ‘லேபில்’ என்றால் என்ன என கேட்பதற்கு அவர்கள் தரும் விளக்கம் ஒருபுறமும், வட சென்னை மக்களிடம் ‘லேபில்’ குறித்த கேள்விக்கு அவர்கள் தரும் விளக்கமும் இருவேறு பரிணாமத்தை விளக்குகிறது. மேலும் வெப்சீரிஸின் அடர்த்தியை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ கவனம் பெற்று வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in