

புது டெல்லி: ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் புகையிலை எச்சரிக்கை வாசகங்கள் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் நேற்று (ஜூலை 25) இதுகுறித்து எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகல், ஓடிடி தளங்களில் புகையிலை தொடர்பான காட்சிகள் இடம்பெறும்போது, திரையின் கீழ் புகையிலை தொடர்பான எச்சரிக்கை வாசகங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மே 31ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் திருத்தவிதிகளின் படி, புகையிலை பொருட்கள் அல்லது அவற்றின் பயன்பாடு குறித்த காட்சிகளைக் கொண்ட உள்ளடங்களின் தொடக்கத்திலும் நடுவிலும் குறைந்தபட்சம் 30 வினாடிகள் புகையிலை எச்சரிக்கை தொடர்பான வீடியோ இடம்பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதனை தனது எழுத்துபூர்வ பதிலில் சுட்டிக் காட்டிய எஸ்.பி.சிங் பாகல், உள்ளடக்கத்தின் தொடக்கம் மற்றும் நடுவில் புகையிலை தீமைகளை விளக்கும் 20 வினாடி ஆடியோ - வீடியோ விசுவல்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.