

மும்பை: நெட்ஃப்ளிக்ஸ் லாக்-இன் பாஸ்வேர்டை பயனர்கள் பிறரிடத்தில் பகிர்வது இந்தியாவில் முடிவுக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நெட்ஃப்ளிக்ஸ் உலகின் முன்னணி ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக திகழ்கிறது. கரோனோ காலகட்டத்துக்குப் பிறகு தனது சந்தாதாரர்களை அதிகரிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாஸ்வேர்டை பிறருடன் பயனர்கள் பகிர்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்தது. விரைவில் இது மற்ற நாடுகளுக்கும் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்தியாவிலும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் தங்களின் பாஸ்வேர்டை பிறரிடத்தில் பகிர்வது முடிவுக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நெட்ஃப்ளிக்ஸ் கணக்கு என்பது ஒரு குடும்பம் மட்டுமே பயன்படுத்தக்கூடியது. அந்த வீட்டில் வசிக்கும் அனைவரும் அவர்கள் எங்கிருந்தாலும் வீட்டில், பயணத்தில், விடுமுறையில் அந்த கணக்கை பயன்படுத்தலாம்” என்று கூறியுள்ளது. இதன்மூலம் இனி ஒரே வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் மட்டுமே ஒரு நெட்ஃப்ளிக்ஸ் கணக்கை பயன்படுத்த முடியும். வெளியாட்களுடன் பாஸ்வேர்டை பகிர்ந்தால் அதற்கென தனியாக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இதனை எப்படி அந்நிறுவனம் கண்காணிக்க உள்ளது என்பது குறித்த விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. ஐபி அட்ரஸ், டிவைஸ் ஐடி மற்றும் அக்கவுண்ட் ஆக்டிவிட்டி மூலம் இது கண்காணிக்கப்படும் எனத் தெரிகிறது.