

சென்னை: வரும் 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி இந்தப் படம் திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்த திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த திரைப்படம்.
கட்சிக்குள் இருக்கும் சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை அழுத்தமாக சொன்ன திரைப்படம். பரவலான வரவேற்பை பெற்றிருந்தது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்துள்ள கடைசி திரைப்படம். 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தத் திரைப்படம் இதுவரை சுமார் 62 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இந்தச் சூழலில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் ஸ்ட்ரீம் என நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்துள்ளார்.