Last Updated : 23 Nov, 2022 04:10 PM

 

Published : 23 Nov 2022 04:10 PM
Last Updated : 23 Nov 2022 04:10 PM

ஓடிடி திரை அலசல் | Mr. Harrigan's Phone - இறந்தவரிடம் இருந்து மெசேஜ்கள்... ‘தத்துவார்த்த’ திகில் முயற்சி!

சமீப ஆண்டுகளில் செல்போன் தாக்கம், நமது உடலின் இன்னொரு அங்கம் போல ஆகிவிட்டது. இன்னும் சில ஆண்டுகளில் உலகின் 90 சதவீத மக்கள் செல்போனில்தான் வாழ்வின் அனைத்து பரிவர்த்தனைகளும் நடத்தப்போவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, புதிய தொழில்நுட்பகாலத்திற்குள் அடியெடுத்து வைக்கும் கிரெய்க் என்ற சிறுவனின் வித்தியாசமான அனுபவங்களை நமக்குச் சொல்கிறது ‘மிஸ்டர் மாரெகன்ஸ் போன்’ (Mr. Harrigan's Phone) திரைப்படம்.

தேவாலயங்களில் ஞாயிறுகளின் பிரார்ததனைகள் முடியுறும் தருவாயில் மதகுரு, சிறுவன் கிரெய்கை அழைத்து ஒரு பைபிள் வாசகத்தை படிக்கச் சொல்வார். அப்படித்தான் அவன் அப்பகுதி மக்களுக்கு அறிமுகம். ஆரம்ப பாடசாலையின் சின்னஞ்சிறு மாணவனான அவனது தெய்விக அசரீரி போன்ற உணர்வுபூர்வமான உச்சரிப்பு அங்குவரும் தொழிலதிபர் ஒருவருக்கும் பிடித்துப்போகிறது. அவனை தனது மாளிகைக்கு வரவழைக்கிறார். கண்பார்வை மங்கிய நிலையில் பழைய கிளாஸிக்குகளை படிக்க ஒரு ஆள் வேண்டும். அவருக்காக நேரம் ஒதுக்கி சென்று படித்துக் காட்டுகிறான். ஒரு மணி நேரதிற்கு 5 டாலர் என்ற அளவில் கிட்டத்தட்ட ஒரு வேலைவாய்ப்புதான் இது.

கிரெய்க் சிறுவனின் தந்தை ஒன்றும் ஏழை அல்ல. ஆனால், சமீபத்தில் தாயை இழந்த அவனுக்கு இந்த புதிய பிணைப்பு நல்ல மாதிரியான ஒன்றாக அமைகிறது. அவரது மாபெரும் மாளிகைக்குள் அந்த வீட்டின் ஒரு பிள்ளை போலவே ஒவ்வொரு நாளும் நுழைந்து உலகின் சிறந்த கிளாஸிக்குகளை அவருக்கு படித்துக் காட்டுகிறான். அவருடனான இந்தப் பணி நல்ல நட்பாகவும் மாறுகிறது.

இந்த உலகிற்கு ஆண்ட்ராய்டு செல்போன் அறிமுகமாகும்போது அதன் செயல்பாடுகளை அவருக்கு விளக்குகிறான். அவர் தினம் தினம் நாளிதழ்களில் தனது தொழில்ரீதியான செய்திகளை படித்து அதன்மூலம் தனது தொழில் பணிகளை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்கிறார். ஆனால், அவன் அவருக்கு அறிமுகப்படுத்தும் செல்போன் அவருக்கு தேவையான செய்திகள் வெளியான அந்தந்த நிமிடங்களிலேயே அவருக்குக் கிடைக்கும் வகையிலான செயலிகள் இருப்பதை அவருக்கு காட்டுகிறான். அதைக்கண்டு வியக்கும் அவர் அவன் தனக்கு உற்ற துணை என்றே கருதுகிறார்.

திடீரென அவர் ஒருநாள் அவர் இறந்தும் விடுகிறார். தனது தனிமைக்கு கிளாஸிக்குகளை படித்து விவாதிக்கும் சிறந்த நண்பனாக வாய்த்த சிறுவனுக்கு 8 லட்சம் டாலர்களை பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டரீதியாக ட்ரஸ்ட் செய்யப்பட்ட உயிலை முன்னதாகவே ஏற்பாடு செய்திருந்த யாரோ ஒருவர் அச்சிறுவனின் தந்தையிடம் வழங்கப்படுவது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.

கல்லறையில் அவரை புதைப்பதற்கு முன்பாக யாருக்கும் தெரியாமல் சவப்பெட்டியை திறந்து அவரது கோட் பாக்கெட்டில் அவருக்கு பயனுள்ளதாக இருந்த அந்த செல்போனை வைத்துவிடுகிறான். ஏதோ ஒரு பிரியத்தில் செய்த இந்த காரியம் அவனுக்கு மிகப் பெரிய சிக்கலாக மாறுகிறது.

இந்நேரத்தில்தான் அவன் உயர்நிலைப் பள்ளிக்கு செல்கிறான். சீனியர் ஒருவன் சதா ராகிங் செய்தவாறு இருக்கிறான். ஏதோ ஒரு ஞாபகத்தில் தனது வலிகளை வீட்டில் ஏற்கெனவே தனது மனைவியைப் பிரிந்து தனிமையில் வாடும் தன் தந்தையிடம் தனது வருத்தங்களை பகிர்ந்துகொள்ள அவனுக்கு விருப்பமில்லை. அதனால் மேல்மாடி அறைக்கு போன வேகத்தில் தனது செல்போனை எடுத்து தனது பழைய வயதான நண்பர் எண்ணுக்கு பேசத் தொடங்குகிறான். இன்னைக்கு எனக்கு நடந்த சம்பவம்... என்று தொடங்கி எங்காவது நமது மனதில் இருப்பதையெல்லாம் கொட்டுவோம் அல்லவா அதைப்போலவே பேசுகிறான். சற்று நேரத்தில் ஓகே என்பதுபோல அவனுக்கு ஒரு மெசேஜ் வருகிறது.

அதன் பிறகு அவனது நாட்களில் பல்வேறு திகிலான சம்பவங்கள்... அந்த சீனியர் மாணவன் வேகமாக சென்ற வாகனத்தில் மோதி அடிபட்டு இறந்துகிடக்கிறான் என்று அவனுக்கு தகவல் வர ஓடோடி சென்று பார்த்து அதிர்ச்சியடைகிறான். உண்மையில் அவர் இறந்துபிறகு கூட அந்தப் பெரியவர் அவனுடன் தொடர்பில் தான் இருக்கிறார்.. இது உண்மைதானா? இப்படி நடக்குமா? - இதுதான் இப்படத்தின் பின்பாதியில் நமக்கு எழும் கேள்வி.. அடுத்தடுத்த பல்வேறு சம்பவங்களிலும் இதன் தொடர்ச்சி தென்படுகிறது. அவர் அடிக்கடி அவனை இன்பாக்ஸ் வழியாக தொடர்பு கொள்கிறார்.

படத்தில் ஒரு கட்டத்தில் நமக்கே திகில் பற்றிக்கொள்கிறது. பார்வையாளர்களுக்கும் உண்டான பதற்றத்தின் அதே சந்தேகம் அவனுக்கும் ஏற்படத்தான் செய்கிறது. அவனது இந்த சந்தேகம் குறித்து ஆராயத் தொடங்குகிறான். அப்படியெல்லாம் இல்லை என்ற வகையிலான பதில்கள் அவனுக்கானதாக மட்டுமின்றி நமக்கானதாக பதிலாகவும் கிடைக்கிறது. ஆனால் அதுகூட சற்று ஆறுதல்படுத்தும் வகையில்தான்.

ஸ்டீபன் எழுதிய சிறுகதையை சறுக்கினாலும் முற்றிலும் பேய்க்கதையாக மாற்றுவதற்கான சகல வாய்ப்புகளுக்குள்ளும் நுழைந்து லாவகமாக தப்பித்துவிட்டார் இயக்குநர் ஜான் ஹீ ஹானக். இப்போல்லாம் ஹேக்கிங் செய்யறதும் யாரை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் தொந்தரவு செய்யவும் செல்போன்ல நிறைய வாய்ப்ப்பு இருக்கு என்பதை போகிற போக்கில் சொல்லிவிடுகிறார்.

ஜான் ஸ்வாட்ஜ்மேனின் ஒளிப்பதிவு ஸ்டீபன் கிங் கதைக்கான அழகியலுக்கு துருத்திக் கொண்டிராமல் மெருகூட்டியுள்ளது. அதேபோல இயக்குநர் ஹானக்கும் படம் ஒற்றைப்பாதையில் செல்வதால் அதை சேர்க்கிறேன் இதை சேர்க்கிறேன் என்று இயல்பாக உள்ள அதன் கதையோட்டத்தில் அதிகப்பிரசிங்கித்தனமான அல்லது மிகைப்படுத்தல் வேலைகள் எதையும் செயயவில்லை.

இப்படத்தின் கதை உன்னதமானது அல்ல. தனக்கு தொந்தரவு செய்பவர்களுக்கு பாடம் புகட்டலாம், ஆனால் அவர்களை முற்றிலுமாக சிதறடிக்கப்படவேண்டும் போன்ற மனதின் அடியாழத்தின் பழிவாங்கல் என்ற சராசரி மனித (மிருக) உணர்வுகளை எப்படி பாராட்ட முடியும், அவ்வகையியில் ஒரு சாதாரண கதைதான் என்றாலும் இப்படம் மனிதர்களுக்கு நேரும் தனிமை என்ற சூழ்நிலையையும் கூர்மைப்படுத்தி காட்டுகிறது.

நாயகனான அச்சிறுவன் சமீபத்தில்தான் தாயை இழந்தவன். ஒரு பெண் இல்லாத வீடு என்ற வகையில் அச்சிறுவனுக்கு தாயின் அரவணைப்பு இன்றி சற்றே தனிமையில்தான் இருக்கிறான். அதேபோல அவனது தந்தையும் தனது மனைவியை இழந்த நிலையில் தனிமையில் சற்றே துயரத்தில் வாழ்பவர்தான், உயர் நிலைப் பள்ளிக்கு சென்ற பிறகும் தனிமை, அந்த பெரியவரும் அவ்வளவு பெரிய மாளிகையில் கீழே வேலைக்காரர்கள் இருந்தாலும் மேல்மாடியில் தனியாக வசிப்பவர் போன்ற தனிமையில் வாழ்பவர்களின் சற்றே வலியான தருணங்களை கம்மிய குரலாக உணர்த்தியவகையில் உணர்வுபூர்வமானது என்பதை கவனமாக திரையாக்கியிருப்பதுதான் ஹானக்கின் தேர்ந்த இயக்கத்திற்கான சிறந்த பாணியாக அமைந்துள்ளது.

வாழ்க்கையில் சில நேரங்களில் இனம்புரியாத அச்சம் நம் மனதை பிடித்து வாட்டுவதுண்டு. அதற்கெல்லாம் ஏதாவது அர்த்தம் இருக்குமா என்றால் நிச்சயம் ஒன்றும் இல்லை. செல்போன் வந்த பிறகு நமது எண்ணங்களில் தேவையற்ற பதற்றங்களும் தேவையற்ற சிந்தனைகளும் கூட அதிகரித்துவிடுகின்றன என்பதை உணர நம்மிடம் ஏற்கெனவே இருக்கும் ஆறு அறிவே போதும் தனியா ஏழாவது, எட்டாவது அறிவுகள் தேவையில்லை என்பதை ஹாரிகன் போன் திரைப்படம் மிகச் சிறப்பாகவே நமக்கு உணர்த்திவிடுகிறது. இப்படம் நெட்ஃபிளிக்ஸில் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x