Last Updated : 09 Oct, 2022 07:16 PM

 

Published : 09 Oct 2022 07:16 PM
Last Updated : 09 Oct 2022 07:16 PM

ஓடிடி களம் |  The Call of the Wild: தங்க வேட்டை பயணத்திற்கு உதவும் நாய்கள்

தி கால் ஆஃப் தி வைல்டு

2020ல் வெளியான 'தி கால் ஆப் தி வைல்ட்' திரைப்படம் தற்போது ஓடிடியிலும் காணக்கிடைக்கிறது. வடமேற்கு அமெரிக்காவின் அலாஸ்கா தீவுகளில் தங்க வேட்டைக்காக துணைக்கழைத்துச் செல்லப்படும் நாய்களைப் பற்றிய கதை இது. அதேநேரம் ஒரு மனிதனுக்கும் ஒரு ஸ்காட்ச் ஷெப்பர்ட் நாய்க்கும் உள்ள நட்பையும் பேசுகிறது தி கால் ஆப் தி வைல்ட்.

அமெரிக்காவில் தங்க வேட்டையைப் பற்றிச் சொல்லும் இக்கதை தமிழில் 50 களிலேயே மொழியாக்கம் செய்யப்பட்டு 'கானகத்தின் குரல்' என்ற பெயரில் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானதுதான். நாற்பது ஆண்டுகளே வாழ்ந்த அமெரிக்க நாவலாசிரயர் ஜாக் லண்டன் 1903ல் பக் என்ற பிரதான கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தி இக்கதையை எழுதினார்.

1890களில் கனடாவின் யூகோன் படுகையில் பணியாற்றிய சுரங்கத் தொழிலாளர்கள் கைகளுக்கு கொஞ்சம் தங்கம் கிடைத்ததென்னவோ உண்மைதான். தங்கம் கிடைத்த செய்தி காட்டுத்தீயாக அமெரிக்காவில் பரவ லட்சக்கணக்கான மக்கள் அங்கு பயணம் மேற்கொண்டனர். அதில் சிலர் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே அடைந்தனர். ஆனால் பலரோ பனி பிரதேச வாழ்க்கையில் தங்கம் கிடைக்காமல் ஏமாந்து உயிரை விட்டனர். மீதி பலரும் வெறுங்கையோடு ஊர் திரும்பினர். ஆனால் இதனால் உண்மையில் பயன் அடைந்தவர்கள் நாவலாசிரியர்களும், சினிமா தயாரிப்பாளர்களும்தான். இந்தக் கதையை வைத்து 923,000 டாலரில் எடுக்கப்பட்ட கோல்டு ரஷ் (1925) திரைப்படம் 2,5 மில்லியன் டாலர்களை ஈட்டித்தந்தது. வெறும் 7 மில்லியன் டாலரில் எடுக்கப்பட்ட மெகனாஸ் கோல்டு (1969) திரைப்படம் 41 மில்லியன் டாலரை ஈட்டியது. ஜாக் லண்டன் எழுதிய இந்த நாவல் 1 கோடி பிரதிகள் இன்றுவரை விற்றுத் தீர்ந்துள்ளன.

முழுவதுமான பனிப்பிரதேசத்தில் நடைபெறும் தி கால் ஆப் தி வைல்ட் கதைக்களனை ஹாலிவுட்டில் படமாக்க பலரும் முயன்றிருக்கிறார்கள். சிலர் அதன் சில அத்தியாயங்களை மட்டுமே முழுநீள படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் முழு நாவலும் முழு படமாக தயாரிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. 2020ல் வெளியான இப்படத்தின் இயக்குநர் கிரீஸ் சாண்டர்ஸ். நம்மால் எக்காரணம் கொண்டும் இனி இயல்பாக உருவாக்கமுடியாத ஒன்றுக்குத்தான் மோஷன் கேப்சரை பயன்படுத்த வேண்டும். ஆனால் அதை வைத்தே பொம்மைக்கதைகளை உருவாக்கி விடுகிறார்கள் பல இந்திய திரைக்கதையாசிரியர்கள்.

ஹாலிவுட்டில் நிஜமா பொய்யா என தீர்மானித்துவிடமுடியாத அனிமேஷன் அல்லாத உண்மைத்தன்மைக்காகத்தான் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் தி கால் ஆப் தி வைல்ட் மற்ற நடிகர்களைத் தவிர நாயின் கதாபாத்திரம் மட்டும் மோஷன் கேப்சர் துணையோடுதான் சில்லிட்ட அலாஸ்கா பனி மலைகளில் உருவாக்கப்பட்டுள்ளது (அதில் கூட பாதி ஸ்டூடியோ செட்) என்பதை பெட் வைத்தால்கூட நம்பமாட்டார்கள். பக் நாயாக மோஷன் கேப்சரில் தன்னைப் பொறுத்திக்கொண்டு சின்சியராக நடித்துக் கொடுத்திருப்பவர் டெரி நோட்டரி.

கலிபோர்னியாவிலிருந்து கனடாவின் யூகான் நகருக்கு கடத்தப்பட்டு அங்கு சந்தையில் விற்கப்பட்டு பின்னர் ஆர்டிக் பனிப்பிரதேசத்தற்கு செல்கிறது பக் நாய். ஒரு நீதிபதி வீட்டில் வளர்ப்பு நாயாக செல்லப்பிராணியாக வளர்ந்த பக் திடீரென திருடப்பட்டதால் அதன் வாழ்க்கை தடம் புரள்கிறது. சமீபகாலம் வரையிலான சொகுசு வாழ்க்கை நேரெதிராக மாறுகிறது. எக்கச்சக்கமாக அடிவாங்கி வழியெங்கும் துவண்டு விழுகிறது. பனிபடர்ந்த மலைப்பகுதிகளில் ஸ்லெட்ஜ் வண்டிகளை இழுப்பதற்காக நாய்கள் விற்கப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது பக். அங்கு விலைக்கு வாங்கியவர் அலாஸ்கா தீவுக்கு ஸ்லட்ஜ் வண்டி நாய்களில் ஒன்றாக பிணைக்கிறார். முதலில் துவண்டு விழும் பக்... பெறும் பனிச்சரிவு ஆபத்திலிருந்து தனது முதலாளிகளைக் காப்பாற்ற பெரும் பாய்ச்சலில் காட்டுக்குள் பாய்ந்து தப்பிக்கும் காட்சியிலேயே நாம் நிமிர்ந்து உட்கார்ந்து விடுகிறோம்.. போகப் போக கடுமையான சோதனைகளுக்குப் பிறகு அந்த நாய்களின் தலைவனாகிறது.

சோகம், தவிப்பு, நன்றி உணர்ச்சி, வீரம், சாகசம், ஆபத்தில் உயிரைப் பணயம் வைத்து உதவுவது என பக் என்ற நாய் கொடுக்கும் வேறுபட்ட வெளிப்பாடுகள் எக்கச்சக்கம். இப்படத்தில் நடித்த ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலரையும் தவிர பக் நாய் மட்டும் கேப்சரிங் என்பதை நமபத்தான் முடியவில்லை. ஆனால் பிஹைன்ட் தி சீன்ஸ் பார்த்தபோதுதான் அட பக் நாயாக தோன்றியது டெரி நோட்டரியா என சற்றே புருவத்தை உயர்த்த வேண்டியுள்ளது.

மலைவெளிகளின் திறந்தவெளி பாசறைகளில் கூடாரங்களில் அனுமதிக்கப்படாமல் வெளியே வெடவெடக்கும் பனிகளில் தங்கவைக்கப்படுகிறது. இரவு தூங்கிய பிறகு பனிமண்டிவிட காலையில் இரவு விழுந்த பனி விழுந்துமண்டிய இடத்திற்கு இடையேதான் வெளியே தலைகாட்டி எழுகிறது. அங்கு இரவு வரும் ஒரு ஓநாயுடன் ஒரு முயலுக்காக நடந்த சண்டையில் முதலில் கடும் பாதிப்புக்குள்ளான பக் பின்னர் புரிந்துகொள்கிறது.

இங்கு எதிர்த்து சண்டையிட வேண்டும் என்பதை. போராட்டத்திற்கான வலிமையை களத்திலிருந்துதான் பெற முடியும், சூழல்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டால் மட்டுமே வெற்றிக்கான வியூகத்தை வகுப்பது மட்டுமல்ல உயிர் வாழவே முடியும் என்பதை இந்த நாவல் திரைப்படம் அழுத்தமாக சொல்கிறது. எதிரி சண்டைகள், வேறுவகை ஓநாய்களுடனான மோதல்கள் என்று அலாஸ்கா பயணம் களைப்பை ஏற்படுத்திய ஒரு திருப்பத்தில் யோகான் ஆற்றிலிருந்து தங்க சில்லுகள் கிடைக்கின்றன. நாயும் சில தங்கச் சில்லுகளை தேடித்தருகிறது. எதிரியிடமிருந்து தன்னைக் காப்பாற்றிய நாயை இனியும் அடிமையாக வைத்திருக்க பக்கின் எஜமானன் விரும்பவில்லை.

வெகுதூரத்தில் தென்படும் அதன் ஓநாய், காட்டுநாய் நண்பர்களுடன் அனுப்பிவைக்கிறார். தனது இன நண்பர்கள் ஆவலோடு வரவேற்க பக் மகிழ்ச்சியோடு அவர்களுடன் சேர்ந்துகொள்கிறது. அலாஸ்கா தீவுகளின் பனி படர்ந்த பிரதேசங்களும் பல இடங்களில் கெட்டித்த பனி நதிகளும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகோடு படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. ஒருமுறையாவது நிச்சயம் கண்குளிரப் பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x