Last Updated : 18 Jun, 2022 11:08 AM

 

Published : 18 Jun 2022 11:08 AM
Last Updated : 18 Jun 2022 11:08 AM

முதல் பார்வை | சுழல் - திருப்பங்களால் விறுவிறுப்பாக சுழலும் த்ரில்லிங் தொடர்!

சமூகத்தில் ஓய்வில்லாமல் தொடர்ந்து சுழன்றுகொண்டேயிருக்கும் ஓர் அவலத்தை அழுத்தமான த்ரில்லர் கதையின் மூலம் சொல்லவரும் படைப்புதான் 'சுழல்'.

கோவைக்கு அருகிலுள்ள சாம்பலூர் கிராமத்தில் சிமென்ட் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையின் தொழிலாளர் சங்கத் தலைவரான சண்முகம் (பார்த்திபன்) தலைமையில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. போராட்டம் நடந்த மறுநாள் தொழிற்சாலைக்கு தீ வைக்கப்படுகிறது. இது ஒருபுறம் நடக்க மறுபுறம், சண்முகத்தின் மகள் காணாமல் போகிறார்.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக அந்த ஊரின் காவல் ஆய்வாளர் ரெஜினா தாமஸூம் (ஸ்ரீயா ரெட்டி), உதவி காவல் ஆய்வாளர் சக்ரவர்த்தியும் (கதிர்) விசாரணையை தொடங்குகிறார்கள். இந்த விசாரணை சில திருப்பங்கள், பல குழப்பங்கள் என நீண்டுகொண்டே செல்ல, இறுதியில் இதற்கெல்லாம் யார் காரணம்? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? என பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது 'சுழல்' இணையத் தொடர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த இணையத் தொடர் 8 எபிசோட்களை கொண்டது. 'விக்ரம்- வேதா' புகழ் புஷ்கர் - காயத்ரி திரைக்கதை எழுத, பிரம்மா மற்றும் அனுசரண் இருவரும் இந்த தொடரை இயக்கியிருக்கிறார்கள்.

காவல் ஆய்வாளர் ரெஜினா தாமஸாக ஸ்ரீயா ரெட்டி. காவல் அதிகாரியாக கம்பீரமாகவும், தாயாக பாசத்துடனும், மனைவியாகவும் கவனம் பெறுகிறார். அழுகை, சிரிப்பு, கோபம், என அனைத்து உணர்ச்சிகளையும் கச்சிதமாக கடத்துகிறார். உதவி ஆய்வாளராக கதிர். கதைக்கு தேவையான சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். சித்தாந்தவாதியாக, தொழிளார்களுக்காக போராடும் யூனியர் லீடராக, அப்பாவாக, கண்ணாடியை மாட்டிக்கொண்டு அழுத்தமான நடிப்பால் ஈர்க்கிறார் பார்த்திபன்.

நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு இயல்பாக இருந்தது. எந்த இடத்திலும் அவர் மிகை நடிப்பை வெளிபடுத்தவில்லை. கோபிகா ரமேஷின் நடிப்பு அந்த கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தி போகிறது. ஹரீஷ் உத்தமன், இளங்கோ குமாரவேல், லதா ராவ், பிரசன்னா பாலச்சந்திரன், சந்தான பாரதி, நடிப்பு கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கிறது.

'சுழல்' வெப் சீரிஸை பல திருப்பங்களுடன் தன் எழுத்தில் சுழல விட்டிருக்கிறார்கள் புஷ்கர் - காயத்ரி. தொடரின் 4-வது எபிசோட்டில் கதை முடிவுக்கு வந்துவிடுகிறது. இதற்கு பிறகு கதையை எப்படி நகர்த்தப்போகிறார்கள் என ஆர்வத்தை தூண்டி, அதையொட்டி கதையை இழுத்துச் சென்ற விதம், ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கும் விதம், தொடரை தொடர்ந்து பார்க்க தூண்டுகிறது. புஷ்கரும் - காயத்ரியும் இணைந்து ஒரு உலகத்தை கட்டமைக்கிறார்கள். அந்த உலகத்தில் மாந்தர்களை அறிமுகப்படுத்துகிறார்கள். பின் நம்மை கைபிடித்து அவர்களின் உலகிற்குள் அழைத்துச் செல்கிறார்கள்.

அதனால் அந்த கதையோடு நம்மால் எளிதாக ஒன்ற முடிகிறது. பல்வேறு விஷயங்கள் குறித்து பேசும் இந்தத் தொடர், மனிதர்களை அவர்களின் இனம், மதம், மொழி, தோற்றங்களை வைத்து அவர்கள் இப்படித்தான் என முன்முடிவுக்கு வந்துவிடக்கூடாது என நெற்றிப்பொட்டில் அறைந்தார் போல கூறுகிறது. குல தெய்வ வழிபாடுடன் கதையை பொருத்தி கொண்டு சென்ற விதம் ரசிக்க வைத்தது.

தொழிலதிபராக இருக்கும் வட நாட்டு சேட்டு தொழிலாளர்களின் நலனுக்கான நபராக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார். 'நீ என்னதான் பண்ணாலும், வெளிய போனா தொழிலாளர்களின் உழைப்ப உறிஞ்சுற சேட்டு' என அவரது மகன் பேசும் காட்சிகளும், அதற்கு எதிர்மாறாக அந்த சேட்டு இருப்பதும் என பாஸிட்டிவான காட்சிகள் எதார்த்ததுக்கு நேர் எதிர் மாறாக இருப்பது நெருடல். விவசாய நிலங்களில் தொழிற்சாலைகளால் ஆபத்து என பேசிவரும் அந்த ஊர்க்காரரிடம், தொழிற்சாலையால் தான் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கிறது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

கதையில் திருநங்கைகள் மீதான பார்வையும் மாற்ற முயற்சித்திருக்கிறார்கள். நடுவில் வரும் எபிசோட்களின் நீளத்தை குறைத்து, தேவையற்ற காட்சிகளை நீக்கி 8 எபிசோட்கள் கொண்ட தொடரை 7 ஆக முடித்திருக்கலாம் என தோன்றுகிறது. மற்ற கதாபாத்திரத்துக்கான எழுத்துகள் ஆழமாகவும், சந்தான பாரதி கதாபாத்திரத்துக்கான எழுத்து மேலோட்டமாக இருப்பதாக தோன்றுகிறது.

இடுகாட்டில் வரும் டாப் ஆங்கிள் ஷாட், திருவிழா காட்சிகள், கிராமம் என ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார் முகேஷ். சாம் சிஎஸின் பிண்ணனி இசை தொடரின் விறுவிறுப்பை மேலும் கூட்டுகிறது. சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு ஏற்ற இசையை கச்சிதமாக கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் க்ரைம் த்ரில்லரான 'சுழல்' தொடருக்கு நீங்கள் செலவிடும் 6 மணிநேரம் வீண்போகாது என்பது மட்டும் உறுதி.

வீடியோ வடிவில் விமர்சனத்தைக் காண :

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x