Published : 10 Feb 2022 10:50 AM
Last Updated : 10 Feb 2022 10:50 AM

முதல் பார்வை: மகான் | விக்ரமின் ரியல் கம்பேக்.. ஆனால் திரைக்கதை...?

தொன்று தொட்டு காந்தியக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வரும் குடும்பத்தில் பிறந்தவர் காந்தி மகான் (விக்ரம்). சிறுவயது முதலே மது ஒழிப்பு, அகிம்சை உள்ளிட்ட காந்தியக் கொள்கைகள் புகுத்தப்பட்டு வளர்க்கப்பட்டவர். அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் விக்ரமுக்கு வாழ்க்கை நாற்பது ஆண்டுகளாக எந்தவித பிடிப்பும் இல்லாமல் போய்க் கொண்டிருக்குறது. திடீரென ஒருநாள் எதேச்சையாக தனது பால்யகால நண்பனாக சத்யவான் (சிம்ஹா) மற்றும் அவரது மகன் ராக்கி (சனந்த்) இருவரையும் சந்திக்கும் விக்ரமின் வாழ்க்கை அன்றோடு தலைகீழாக மாறிவிடுகிறது. இருவரும் சொந்தமாக மதுபானம் தயாரித்து மிகப்பெரிய தொழிலதிபர்களாக மாறுகிறார்கள். அவர்களுடைய மற்றோரு பால்ய நண்பரும் அரசியல்வாதியுமான ஞானம் (முத்துகுமார்) உதவுகிறார். விக்ரம் மற்றும் சிம்ஹா வாழ்க்கையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தாதா என்னும் ஒரு போலீஸ் அதிகாரி (துருவ் விக்ரம்) வடிவில் சிக்கல் வருகிறது. அதன் பிறகு என்னவானது என்பதே ‘மகான்’ படத்தின் கதை.

ஒழுக்கசீலனாக வாழும் ஒரு சாதாரண மனிதன் எப்படி வாழ்க்கையில் அதற்கு நேரெதிர் திசைக்கு செல்கிறான் என்று சொல்லும் ‘ப்ரேக்கிங் பேட்’ பாணி கதை. அங்கே கல்லூரியில் கெமிஸ்ட்ரி வாத்தியார் - இங்கே பள்ளியில் காமர்ஸ் வாத்தியார். அங்கே மெத் - இங்கே மதுபானம். ஆனால் அதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவகையில் காந்திரம், மது ஒழிப்பு என்ற பாலிஷ் தடவி கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

காந்தி மகானாக விக்ரம். படம் முழுக்க விக்ரமின் ராஜ்ஜியம் தான். ஒற்றை ஆளாக படம் முழுக்க தன்னுடைய அட்டகாசமான நடிப்பினாலும், நுணுக்கமான உடல்மொழிகளாலும் நின்று ஆடுகிறார். ஒரு நல்ல கலைஞனுக்கு தேவை அவனது முழுமையான நடிப்பை வெளிக்கொண்டு வரும் ஒரு நல்ல கதாபாத்திரம் தான் என்பதற்கு இப்படம் ஒரு நல்ல உதாரணமாக சொல்லலாம். கோபம், அழுகை, விரக்தி, மகிழ்ச்சி என நீண்ட வருடங்களுக்குப் பிறகு விக்ரமின் நடிப்புக்கு சரியான தீனி போட்டிருக்கிறார் இயக்குநர். விக்ரமுக்கு உண்மையான கம்பேக் என்று இப்படத்தைச் சொல்லலாம். தாதாவாக துருவ் விக்ரம். ‘ஆதித்ய வர்மா’வில் பார்த்ததைப் போலவே படம் முழுக்க இதிலும் விறைப்பாகவே வருகிறார். அவர் கல்லூரியில் படிப்பதாக காட்டப்படும் சிறிய ப்ளாஷ்பேக் காட்சியில் கூட அதே விறைப்பான உடல்மொழிதான். ஷேவ் செய்திருப்பதால் மட்டுமே அவர் ஒரு மாணவன் என்று தெரிந்துகொள்ள முடிகிறது. சில இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்கிறார். நடிப்பு, நடனம் என அப்படியே விக்ரமை நகலெடுக்காமல் தனக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டால் எதிர்காலத்தில் மிளிர வாய்ப்புள்ளது. கார்த்திக் சுப்புராஜ் படங்களில் மட்டும் சிம்ஹாவுக்கு நடிப்பும், உடல்மொழியும் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. அவரும் விக்ரமுக்கு இணையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர்கள் தவிர சிம்ரன், முத்துகுமார், சனந்த் என அனைவரும் தங்கள் வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

படத்தின் தொடக்கத்தில் வரும் 60களின் ப்ளாஷ்பேக் காட்சிகள் தொடங்கி விக்ரம் சிம்ஹாவை சந்திக்கும் வரையிலான முதல் 20 நிமிடங்கள் தொய்வின்றி சுவாரஸ்யமாகவே செல்கின்றன. அதன் பிறகு விக்ரமின் வளர்ச்சி, மதுபான தயாரிப்பு என கதை ஒரு கேங்ஸ்டர் களத்துக்குள் நுழையும்போது திரைக்கதை தடுமாறத் தொடங்கிவிடுகிறது. பால்ய நண்பர்களான விக்ரம், சிம்ஹா எதேச்சையாக சந்தித்துக் கொள்வது சரி. ஆனால் அதே போலவே முத்துகுமாரையும் விக்ரம் சந்திப்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. படத்தின் இடைவேளையின் போதுதான் துருவ் என்ட்ரி கொடுக்கிறார். அதன் பிறகு சூடுபிடிக்க வேண்டிய திரைக்கதை மீண்டும் சுருண்டு படுத்துக் கொள்கிறது. விக்ரம் - சிம்ஹாவின் ஆட்களை துருவ் துரத்தி துரத்திக் கொள்வது என வந்த காட்சிகளே மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கின்றன. பல காட்சிகள் எளிதில் யூகிக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பாதி முழுக்க வரும் அப்பா - மகன் சென்டிமென்ட் காட்சிகள் பார்ப்பவர்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வழக்கமாக கார்த்திக் சுப்புராஜ் படங்களின் இறுதியில் வரும் ட்விஸ்ட்டும் இதில் பெரிதாக எடுபடவில்லை. படத்தின் இறுதி 20 நிமிடங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. படத்தில் ஆங்காங்கே சில நல்ல தருணங்கள் வருகின்றன. அவையும் திரைக்கதையின் பலவீனத்தால படம் முடியும்போது நம் நினைவில் தங்காமல் மறைந்து விடுகின்றன.

சந்தோஷ் நாராயணனின் இசை மற்றும் ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு அசத்தல் ரகம். பல இடங்களில் படத்தை காப்பாற்றிக் கொண்டு செல்பவை இவைதான். நடிகர்களின் நல்ல நடிப்பு, டெக்னிக்கல் அம்சங்கள் பல பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தும் திரைக்கதை என்கிற ஒற்றை வஸ்து சிறப்பாக இல்லாததால் ஒரு முழுமையான படமாக இல்லாமல் நிற்கிறது மகான். படத்தின் ஆரம்பம் மற்றும் இறுதியில் இருந்த சுவாரஸ்யம் படம் முழுக்க இருந்திருந்தால் தமிழின் சிறந்த கேங்ஸ்டர் படங்களில் ஒன்றாக பாராட்டப்பட்டிருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x