Published : 24 Sep 2021 04:08 PM
Last Updated : 24 Sep 2021 04:08 PM

முதல் பார்வை: இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

சென்னை

காணாமல் போன மாடுகளைத் தம்பதியர் கண்டுபிடித்தார்களா என்பதே 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்'.

தனது இரண்டு மாடுகளையும் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செல்கிறார் குன்னிமுத்து. ஆனால், காவல் துறையினர் புகாரை எடுக்க மறுக்கிறார்கள். உயிருக்கு உயிராகக் குழந்தைகள் மாதிரி வளர்த்த மாடுகளை அவர் தேடிக் கண்டிபித்தாரா, இல்லையா, அந்த மாடுகள் காணாமல் போனது ஏன், எப்படிக் காணாமல் போனது, மாடுகள் தொலைந்ததால் அந்த ஊர் எப்படி மாறுகிறது என்பதே 'இராமே ஆண்டாளும் இராவணே ஆண்டாலும்' திரைக்கதை.

நாயகன் குன்னிமுத்துவாக 'மிதுன் மாணிக்கம்'. புதுமுகம் என்பதால் கதைக்கு ரொம்பவே உபயோகமாக அமைந்துள்ளது. அவருடைய வெகுளித்தனம் இந்தக் கதைகளத்துக்கு அருமையாகப் பொருந்தியுள்ளது. பார்வையாளர்கள் அந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்றிவிடுவது பெரிய ப்ளஸ். அவருடைய மனைவியாக ரம்யா பாண்டியன். கிராமத்துப் பெண்ணாக எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவுக்குக் கச்சிதமாக நடித்துள்ளார். தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை நினைத்துப் புலம்பும் இடங்களில் அவருடைய வசன உச்சரிப்பு செம.

நாயகனின் நண்பன் மண்தின்னியாக கோடங்கி வடிவேலு. இவர் அறிமுகமாகிற காட்சியிலிருந்து சின்ன சின்ன கவுன்ட்டர்கள் மூலமாக சிரிக்க வைக்கிறார். அப்பத்தா கதாபாத்திரத்தில் நடித்துள்ள லக்‌ஷ்மி ஆச்சரியப்படுத்துகிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்திலுமே பார்வையாளர்களை ஈர்த்துவிடுகிறார்.

இசையமைப்பாளர் க்ரிஷின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. முதல் படம் என்பதால் பாடல்களில் அதிக சிரத்தை எடுத்து உருவாக்கியிருப்பது தெரிகிறது. சுகுமாரின் ஒளிப்பதிவு, சிவ சரவணனின் எடிட்டிங் என அனைவருமே கதைக்குத் தேவையானதைச் செய்திருக்கிறார்கள்.

ஒரு சின்ன பிரச்சினையை வைத்துக்கொண்டு, அதைச் சுற்றி பெரிய பிரச்சினையைப் பேசியிருக்கும் படமே 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்'. எந்த ஆட்சி இருந்தாலும், எங்க நிலைமை இப்படித்தான் என்று சொல்கிற ஒரு அரசியல் நையாண்டி கதை இது. குன்னிமுத்து கதாபாத்திரம், அவரைச் சுற்றியிருப்பவர்களின் பிரச்சினை, அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிற விதம் என்று முதல் பாதி சொல்லப்பட்ட விதம் கச்சிதம். பெரிய அளவில் சுவாரசியம் குறையாமல் சொல்லியிருக்கிறார்கள். சம்பந்தம் பேசும் காட்சி, மாடுகள் மீது காட்டப்படும் அன்பு, மக்களின் வாழ்வியல் சொல்லப்பட்ட விதம் என சில இடங்களை அற்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

மாடு தொலைந்ததை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்ற கதையைச் சுற்றி பல்வேறு மெசேஜ்கள் சொல்லப்பட்டு இருப்பதுதான் படத்தின் பிரச்சினை. ஒரு சின்ன கிராமம், மின்சாரம், பள்ளி, மருத்துவமனை என அடிப்படை வசதிகள் இல்லாமல் கஷ்டப்படுகிற மக்கள், அவர்களை ஏமாற்றும் அதிகாரிகள், மீடியா உலகின் பசி, ஒரு பிரச்சினையை வைத்து ஆதாயம் தேட நினைக்கிற அரசியல்வாதிகள், சின்ன பசங்களுக்குப் பொதுத் தேர்வு, ரேஷன் கடை பஞ்சாயத்து என எக்கச்சக்க காட்சிகள் படத்தில் உள்ளன.

ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த மீடியாவும் சொல்லிவைத்த மாதிரி வருவது உள்ளிட்ட யதார்த்தை மீறிய சில காட்சிகளும் உள்ளன. அதே போல் படத்தில் வரும் அரசியல்வாதிகளையும், சமகால அரசியல்வாதிகளைப் போல் பேச வைத்து நையாண்டி செய்திருப்பது கதைக்குத் தேவையா? கொஞ்சம் கருத்துகளைக் குறைத்து, திரைக்கதையைச் செதுக்கியிருந்தால் மிக முக்கியமான படமாக இருந்திருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x