Lucca's World: இந்திய மருத்துவரின் பெருமை பேசும் ஸ்பானிஷ் திரைப்படம் | ஓடிடி திரை அலசல்

Lucca's World: இந்திய மருத்துவரின் பெருமை பேசும் ஸ்பானிஷ் திரைப்படம் | ஓடிடி திரை அலசல்
Updated on
4 min read

'லூக்காஸ் வேர்ல்டு' (Lucca's World)திரைப்படம், பிறந்த உடனே உடலில் ஏற்பட்ட அபூர்வ நோய்க்கு சிகிசிச்சை பெறுவதற்காக, மெக்ஸிகோ நாட்டிலிருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் ஒரு சிறுவனின் உண்மைக் கதையை சொல்கிறது.

பார்பரா ஆண்டர்சன் என்ற பெண், ஆண்டின் மிகச் சிறந்த பிசினஸ் வுமனாக மெக்ஸிகோவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எத்தகைய சிரமங்களையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் மனிதநேயமும் நிறைந்தவர். கம்பெனியில் அவருக்கு நல்ல மரியாதை. பிரசவ வேதனையில் துடிக்கும் பார்பராவை அவரது அன்பான கணவர் ஆண்டர்சன் காரில் அழைத்துச் சென்று மெக்ஸிகோ சிட்டியின் ஒரு மருத்துவமனையில் சேர்க்கிறார்.

பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. என்றாலும் இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படவில்லை. காரணம் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை பிறக்கும்போதே தலைக்குள் மூளை சரிந்திருப்பதாக மருத்துவர்கள் இன்குபெட்டரில் கொண்டுபோய் தலையைத் திருப்பி வைத்து படுக்கவைத்திருக்கிறார்கள். ஆக்ஸிஜன் வென்ட்டிலேட்டரும் பொருத்தப்பட்டுள்ளது.

பிறந்த உடனே குழந்தையை கர்ப்பிணித் தாயான பார்பரா பார்க்கவேயில்லை. பின்னர், கணவர் மருத்துவமனையின் பிரசவ வார்டிலிருந்து காரிடார் வழியே சக்கர நாற்காலியில் தள்ள்ளிச்செல்ல இன்குபெட்டர் அறையில் சென்று தனது குழந்தையை பார்க்கிறார் பார்பரா... கண்கலங்கும் அவரை தேற்றுகிறார் கணவர். இனி பயம் இல்லை என்ற நிலையில் 10 நாள் கடந்ததும் குழந்தையை தருகிறார்கள். இனி பயம் இல்லை என்றாலும் அதற்குநேர் மாறாக இன்னொன்றைச் சொல்கிறார்கள்.

குழந்தைக்கு ஏற்பட்டிருப்பது செர்ரிபரல் பல்சி என்ற பெருமூளைவாத நோய். லூக்கா ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட ஹைபோக்ஸியாவுடன் பிறந்தவன், இது குழந்தை பெருமூளை வாதத்திற்கு வழிவகுத்தது. இதனால் குழந்தை பேசமாட்டான். நடக்கமாட்டான். இயல்பான முறையில் சாப்பிடக்கூட மாட்டான். பிரத்யேக கவனிப்புகளில்தான் அவன் வளர்ச்சியைப் பராமரிக்கவேண்டும் என்கிறார்கள். அடிக்கடி இழுப்பு வலிப்பு வரும். ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூற, துடிதுடித்து போகிறார்கள் பார்பரா ஆண்டர்சன் தம்பதியினர்.

ஒவ்வொரு நாளும் அவனுக்கு பல்வேறு தெரபிஸ்ட்களிடம் அழைத்துச்சென்று அவனது இயல்பான இயக்கத்திற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அந்த நோய் பாதிப்பிலிருந்து குழந்தை மீள வழிஉண்டா அதற்கான சிகிச்சை மேற்கொள்ளும் ஆகும் செலவுக்கு பணத்திற்கு எங்கேபோவது என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக அவர்கள் முன்னே நிற்கிறது.

நோய்த் தாக்குதல் என்றால் எதோ கடும் அழுதாச்சி காவியமோ என்று எண்ணிவிடவேண்டாம். முயற்சியும், தன்னம்பிக்கையும், கண்டம்விட்டு கண்டம் செல்லும் பயணமும், குழந்தைகளின் அற்புதமான உலகமும், மாறி வரும் மருத்துவத் துறை சார்ந்த புரிதல் தரும் விளைவுகள் என ஒரு விறுவிறுப்பான நாவலைப் படிப்பதுபோல எடுத்திருக்கிறார்கள். உண்மையில், லூக்காஸ் வேர்ல்டு திரைப்படம் ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அது நாவல் இல்லை; . லூக்கா எனும் சிறுவனின் தாய் எழுதிய சுயசரிதை இது.

அந்த சுயசரிதையின் பெயர் 'தி டூ ஹெமிப்பெஃர்ஸ் ஆப் லூக்கா' - அதாவது பூமிக்கோளத்தின் இருவேறு பாதியும் லூக்காவின் வாழ்வில் ஆற்றிய பங்களிப்பு என்பதாக பொருள் கொள்ளலாம்... அதனால்தான் திரைப்படமாக எடுக்கும்போது லூக்காவின் உலகம் என பூமிக்கோளத்தின் ஒரே உலகமாக 'லூக்காஸ் வேர்ல்டு' என இயக்குநர் மாற்றிக்கொண்டார் போல. அல்லது லூக்காவின் வாழ்வுலகம் என்பதாகவும் புரிந்துகொள்ளலாம்...

இத்திரைப்படத்தில் முக்கியமான அம்சமாக விரிந்து நிற்பது இந்திய பயணம்தான். மெக்ஸிகோ டாக்டர் ஜாராமில்லா என்பவரின் வழிகாட்டுதலில் பெங்களூரு வரும் லூக்காவின் அவனை பராமரிக்கும் ஒரு உதவியாளர் பெண் உள்பட சகோதரன், தாய் தந்தை என 5 பேர் கொண்ட மொத்த குடும்பமும் ஒரு உயர்தர ஓட்டலில் தங்குகின்றனர்.

கிளினிக் சார்பாக பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கடேஷ் என்ற இளைஞரின் அனைத்துவிதமான உதவிகளைப் பெறுவதும், அங்கிருந்து வெங்கடேஷ் ஓட்டிவரும் காரில் தினம்தினம் பெங்களூரு நகரின் கடைசியில் உள்ள டாகடர் குமார் கிளினிக் செல்வதும், தினம் தினம் சைட்டோட்ரான் என்ற இயந்திரம் வாயிலாக குழந்தைக்கு சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெறுவதும், இடை இடையே பெங்களூருவின் உள்ள விநாயகர் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களுக்குச் சென்று மனமுருகி வழிபடுவதும், வெகு சாதாரணக் காட்சிகளாக தோன்றலாம். ஆனால், இதற்கெல்லாம் மகுடம் சூட்டுவது போல அச்சிறுவனின் உடல்நிலையில் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றம் குறித்த காட்சிகள் நம் புருவத்தை உயர்த்த வைக்கின்றன.

அச்சிறுவனின் மாற்றம் ஏற்பட்ட பிறகே அவர்கள் எல்லாம் மருத்துவமனை நோக்கி வரும் ஒருநாளில் டாக்டர் குமார் அவர்கள் எதிரே தோன்றுகிறார் ஒரு தெய்வம் போல.. பார்பரா மிகவும் உணர்ச்சிவயப்பட்டு அவரை வணங்குகிறார்.. கணவரும் மற்ற அனைவரும் டாக்டரிடம் மரியாதையும்அன்பும் கூடிய நெருக்கத்தை உணர்கிறார்கள். டாக்டர் குமார் ஹலோ மாஸ்டர் குமார் என்று அழைத்து சிறு சக்கரவண்டியில் அமர்ந்திருக்கும் லூக்காவிடம் கைகுலுக்க முற்படும்போது, ஐ ஆம் புருனோ என்று லூக்கோவின் சகோதரன் கூறும் இடத்தைவிட மிகச்சிறந்த இடமாக குறிப்பிடவேண்டிய ஒரு காட்சி... சகோதரன் பல் உடைந்துவிட்டதாக வந்து அழும்போது இதுநாள் வரை சிரிக்காமல் இருந்த லூக்கா பளபளா என்று சிரிக்கும் அந்த அழகுதான்.

இப்படத்தில் பார்பராவாக நடித்த பார்பரா மோரியின் நடிப்பு பேசப்படக் கூடியது. முக்கியமாக டாக்டர் குமார் கண்டுபிடித்த சைட்டோட்ரான் மெஷினின் பலனை உலகில் உள்ள அனைவரும் பெறவேண்டும் என்பதுதான் பார்பராவின் கனவு என்பதும் முதல்கட்டமாக மெக்ஸிகோ அரசாங்கத்துடன் பேசி அதை முன்னெடுக்க வேண்டும் என அவர் மெனக்கெடும் போராட்டங்கள்.

மெக்ஸிகோ மருத்துவமனைகளில் நிறுவுவதற்கான அவரது முயற்சிகளில் பின்னடைவு ஏற்படுத்தும் ஆட்களை சமாளித்து (மெக்ஸிகோ டாக்டர் ஜாராமில்லா தனது சைட்டோட்ரான் மெஷினை வியாபாரப்படுத்தி காசுபார்ககும் தந்திரங்களுக்காக செய்யும்) சதித்திட்டங்களை எதிர்கொள்ளும் இடங்கள் என பார்பரா மோரி நடிப்பு அர்ப்பணிப்புமிக்க தாயின் அன்பை மனிதநேயமிக்க பெண்ணின் நேசத்தை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் அவரது ஆற்றல் திரைப்படமெங்கும் மின்னித் தெறிக்கிறது.

இரு குழந்தைகளின் தாயாக, வேலை இழந்த கணவனின் மனைவியாக ஒரு பெண்ணின் உணர்வுகளை பார்பரா மேரி வெளிக்கொணர இப்படத்தின் இயக்குநர் மரியானா செலினோ ஒரு பெண் என்ற வகையில் அவரது இயக்கம் லகுவாக அமைந்துவிட்டது எனலாம். பார்பரா ஆண்டர்சனின் நூலில் உள்ள மையக் கருத்துக்களை தவறவிடாமல் திரைப்படமாக்கியதிலும் அவரது இயக்கம் தனித்து நிற்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் டைட்டிலில், இத்திரைப்படத்தில் சிற்சில காட்சிகள், சம்பவங்கள் மட்டும் கற்பனையாக புகுத்தப்பட்டவை' என்று சொல்லிவிடுகிறார்கள். எனினும் குழந்தைகளின் நரம்புத்தளர்ச்சி பிரச்சினைக்கு உரிய சிகிச்சை அளிக்கும் சைட்டோட்ரான் இயந்திரத்தைக் கண்டறிந்தவர் இந்திய மருத்துவர் பெங்களூருவைச் சேர்ந்த குமார் என்பதை இத்திரைப்படம் அழுத்தம் திருத்தமாக சொல்லப்பட்டுள்ளது. ஸ்பாய்லர் என்பதால் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எதையுமே விவரிக்கவில்லை; மாறாக கதைப்போக்கின் தன்மையை மட்டுமே நாம் எடுத்துப் பேசவேண்டியுள்ளது.

இத்திரைப்படத்தில் ஒரு இடத்தில் டாக்டர் குமாரின் சிகிச்சைக்குப் பிறகு நோயிலிருந்து மாற்றம் கண்ட சிறுவனைப் பார்த்து நீ சரித்திரம் படைச்சிட்டே என்பார். அதற்குக் காரணம் நோபல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நரம்பியல் மருத்துவ முறை தியரியாக மட்டுமே இருந்ததிலிருந்து பலபடி மேலேபோய்... துல்லியமான நுணுக்கங்களுடன் ஒரு நோய்த்தீர்க்கும் சைட்டோட்ரான் கருவியை பெங்களூர் டாக்டர் ராஜா குமார் கண்டுபிடித்தார். சிறுவனுக்கு அளப்பரிய சிகிச்சை அளித்து அவனை இயல்பான மனிதனாக்கியதில் அவரது கண்டுபிடிப்பு வென்றுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்; எனவே உண்மையில் அந்த டாக்டர்தான் சரித்திரம் படைத்துள்ளார். இதற்கான தகவலும் கூகுளில் காணக் கிடைக்கிறது.

பார்பரா ஆண்டர்சன் தனது குழந்தை இன்று பள்ளி செல்லும் சிறுவனாக மாற டாக்டர் குமார் காரணம் என்ற பெருமையை வெளி உலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டிய ஒரு சாகசம் போன்ற கதையை இந்திய பெருமையை ஒரு ஸ்பானிஷ் திரைப்படம் நேர்மையாக எடுத்துப் பேசியுள்ள விதத்தில் இயக்குநர் மரியானா செனிலோ சரித்திரம் படைத்துள்ளார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இத்திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கக் கிடைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in