Published : 17 Feb 2025 05:17 PM
Last Updated : 17 Feb 2025 05:17 PM
சமகால சமூகத்தில் உறவுகளைக் கையாள்வது குறித்து வெளிவந்த சமீபத்திய படங்களில் முக்கியமானவை ‘இறுகப்பற்று’, ‘லவ்வர்’. இவை பேசும் உளவியலுடன் தரக் கூடிய தாக்கங்களைப் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்.
இறுகப்பற்று (Irugapattru): யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்ணதி, சானியா ஐயப்பன் ஆகியோர் நடிப்பில் 2023-ஆம் ஆண்டு வெளியான உணர்வுபூர்வமான திரைப்படம்தான் ‘இறுகப்பற்று’. இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கோகுல் பெனாய் ஒளிப்பதிவின் மூலம் காட்சி அனுபவத்தைக் கடத்தி இருக்கிறார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உறவுகள் பல்வேறு பரிமாணங்களை எட்டிக்கொள்கின்றன. சில நேரங்களில் கடந்து செல்லும் சின்ன தருணங்கள் கூட ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவை. சிலசமயம் சந்தேகங்கள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் யாவும் உறவுகளை ஒரு முடிவுக்குத் தள்ளும்.
‘இறுகப்பற்று’ திருமண வாழ்க்கையின் வெளிப்புற சந்தோஷத்தையும், அதன் உள்மனப் போராட்டங்களையும் நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது. அன்பு, மரியாதை, பொறுமை, தனிமையின் அடுக்குகளைச் சொல்லில், ‘எதனால் உறவு நிலைத்திருக்க வேண்டும்?’ என்பதை உணர்வுபூர்வமான கதையின் மூலமாக வெளிப்படுத்தும் சினிமா இது. உளவியல் ரீதியில் உறவுகளை அணுகுவது குறித்துப் பேசும் இப்படம் நெப்ஃப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
லவ்வர் (Lover): பிரபுராம் வியாஸ் இயக்கத்தில், மணிகண்டன், ஸ்ரீ கெளரி பிரியா, கண்ணா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து, 2024-ம் ஆண்டு வெளிவந்த ‘லவ்வர்’, காதலின் உண்மை பரிமாணங்களையும், உறவின் மாறும் தன்மையையும் வெளிப்படுத்தும் மனதை தொட்டுப் போகும் திரைப்படமாக உருவாகியுள்ளது.
காதல் என்பது வெறும் அழகிய தருணங்கள் மட்டுமல்ல, அது சோதனைகளையும், நம்பிக்கையின் சறுக்கல்களையும், உறவின் சிக்கல்களையும் உள்ளடக்கியது.
ஓர் உறவு எப்போது உறுதியடைகிறது? எப்போது இடைவெளி உருவாகிறது? நம்பிக்கையின் தளர்ச்சி, வாழ்க்கைத் தேர்வுகளின் மாறுபாடு, பாசத்தின் பரிசோதனை அனைத்தையும் மெல்லிய நுணுக்கங்களோடு கதையின் அடிப்படை கோடுகளாக பின்னியிருக்கிறது.
ஷான் ரோல்டனின் இசை, கதையின் உணர்வுகளை தீவிரமாக ஆக்கி, ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சிக்கும் அழகிய நிழல் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
இறுகப்பற்றுவது அல்ல, டாக்ஸிக் உறவுகளில் இருந்து எவ்வித பாதிப்புமின்றி உடைத்தெறிந்து வெளிவருவதும் மிக மிக அவசியம் எனும் உளவியலை பகிரங்கமாகச் சொல்லும் ‘லவ்வர்’ சமகால சமூகத்துக்கு அவசியமான ஒன்று. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT