

உலகம் முழுவதும் டைம் டிராவல் உள்ளடக்கங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஆனால், வழக்கமான டைம் டிராவல் படைப்புகளில் இருக்கும் பல டெம்ப்ளேட்களை உடைத்து வரவேற்பை பெற்றுள்ளது தாய்லாந்து வெப் தொடரான ‘டோண்ட் கம் ஹோம்’.
நகரத்தில் இருக்கும் தனது கணவனிடமிருந்து தப்பித்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் தனது பூர்வீக வீட்டுக்கு தனது 5 வயது மகளுடன் வருகிறார் வரீ. மகளின் கண்ணுக்கு அங்கே ஓர் அமானுஷ்ய உருவம் அவ்வப்போது தெரிகிறது. ஒரு சில திகிலான சம்பவங்களும் அந்த வீட்டில் அரங்கேறுகின்றன. திடீரென ஒரு நாள் வரீவின் மகள் காணாமல் போகவே வேறு ஒரு திசையில் பயணிக்க தொடங்குகிறது தொடர்.
திகில் பாணியில் தொடங்கி, சயின்ஸ் பிக்ஷன், டைம் டிராவல், த்ரில்லர் என வெவ்வேறு ஜானரில் செல்லும் தொடர் எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தவில்லை. நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘டார்க்’ தொடரின் ஒரு மினி வடிவம் என்று இதனை சொல்லும் அளவுக்கு வெறும் ஆறு எபிசோட்களில் ஆழமான திரைக்கதையை எழுதி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.
ஒவ்வொரு எபிசோடின் முடிவும் நம்மை அடுத்த எபிசோடை பார்க்கத் தூண்டும் விதமாக எழுதியிருப்பது சிறப்பு. படபடப்பை தூண்டும் திகில் காட்சிகள், மூளையை கசக்கி யோசிக்க வைக்கும் ட்விஸ்ட்டுகள், ஜெட் வேகத்தில் பரபரக்கும் த்ரில்லிங் காட்சியமைப்புகள் என அனைத்தும் இத்தொடரில் உண்டு. சயின்ஸ் பிக்ஷன் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருமே ரசிக்கும்படி அமைந்துள்ள இத்தொடர் நெட்ஃப்ளிக்ஸில் இருக்கிறது. >>ட்ரெய்லர் வீடியோ லிங்க்