

சிரஞ்சீவி நடித்துள்ள ‘போலா சங்கர்’ திரைப்படம் இம்மாதம் 15-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வால்டர் வீரய்யா’ படத்தைத் தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘போலா சங்கர்’. கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவானது. இதில் லட்சுமி மேனனின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும், ஸ்ருதி ஹாசன் கேரக்டரில் தமன்னாவும் நடித்திருந்தனர். படத்தை மெஹர் ரமேஷ் இயக்கியுள்ளார்.
மணிசர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் படத்துக்கு இசையமைத்துள்ளார். சுஷாந்த், ரகுபாபு, முரளி சர்மா, ரவிசங்கர், வெண்ணிலா கிஷோர், துளசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டதால் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ஒட்டுமொத்தமாக ரூ.40 கோடியை மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படம் இம்மாதம் 15-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் காணமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.