Published : 16 Sep 2017 11:42 AM
Last Updated : 16 Sep 2017 11:42 AM

‘தி இந்து’ தமிழ்: உடன்பாடும் முரண்பாடும் கொண்ட தோழமை! - ஜி.ராமகிருஷ்ணன்

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசகர்களின் ஊக்கத்தாலும், பங்களிப்பாலும் மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்த சூழலில் வாசகர்கள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து தமிழகத்தின் மிக முக்கியமான முன்னோடிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

விடுதலைப் போராட்டக் காலத்தில் உருவான ‘தி இந்து’ (ஆங்கிலம்) உருவாக்கிய பாரம்பரியமான தடத்திலிருந்து விலகாமல் ‘தி இந்து’ வெளிவந்துகொண்டிருக் கிறது.

‘தி இந்து’வின் பல தலையங்கங்கள் தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சியாக ஒலித்துவருகின்றன. பசு அரசியல் என்கிற பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்களைப் ‘பசு குண்டர்கள்’என்றே அழைக்க வேண்டுமென தலையங்கம் எழுதியிருந்த ‘தி இந்து’ வைப் பாராட்டுகிறேன்.

என்னுடைய மற்றும் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலரின் கட்டுரைகளையும் ‘தி இந்து’ வெளியிட்டுள்ளது. நடுப்பக்கக் கட்டுரை கள் சிலவற்றில் எங்களுக்கு உடன்பாடும் உண்டு, முரண்பாடும் உண்டு. எனினும், அவை முன்வைக்கும் விஷயங்களைக் கவனமாகப் பரிசீலிப்போம்.

சென்னையில் தமிழர் உரிமை மாநாடு நடைபெற்ற நாளில், தமிழ் வளர்ச்சிக்கு இடதுசாரிகளின் பங்களிப்பு குறித்து விரிவாக ‘தி இந்து’ வில் ஆழி செந்தில்நாதன் எழுதிய கட்டுரை மறக்க முடியாதது. மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் தமிழிலேயே எழுதப்பட்டது போன்று இருப்பது மெச்சத்தக்கது. கீழடி அகழாய்வு தொடர்பாக ‘தி இந்து’வில் வெளியான கட்டுரை, நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் அடிப்படைத் தரவாகக் கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. உழைக்கும் மக்களின் போராட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக சாதி ஆதிக்க சக்திகள் தொடுக்கும் தாக்குதல்கள் குறித்து ‘தி இந்து’ இன்னமும் கூடுதலாக அக்கறை கொள்ள வேண்டும். வளர்முக நாடுகளின் மீது ஏகாதிபத்தியம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடுக்கும் தாக்குதல்கள் இன்னமும் கூடுதலாக இடம்பெறலாம்.

புதிய புதிய நூல்களை அறிமுகப்படுத்தும் ‘நூல்வெளி’ பகுதி நான் விரும்பிப் படிக்கும் பகுதிகளில் ஒன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x