Published : 16 Sep 2017 11:44 AM
Last Updated : 16 Sep 2017 11:44 AM

‘தி இந்து’ தமிழ் சூழலியல் கரிசனம்! - தியடோர் பாஸ்கரன்,

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசகர்களின் ஊக்கத்தாலும், பங்களிப்பாலும் மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்த சூழலில் வாசகர்கள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து தமிழகத்தின் மிக முக்கியமான முன்னோடிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

தியடோர் பாஸ்கரன், சூழலியல் ஆர்வலர்.

‘தி இந்து’ நாளிதழ் வெளியான சில நாட்களிலேயே நாளிதழ் தரத்தை அது ஒரு புதிய தளத்துக்கு இட்டுச் செல்கிறது என்பது தெளிவானது. மக்களின் கரிசனங்களைப் பிரதிபலிக்கும் நாளிதழ் என்பது சீக்கிரமே புரிந்தது.

சுற்றுச்சூழல், காட்டுயிர் பற்றி தமிழ் இதழ்கள் மிகவும் அந்நியப்பட்ட நிலையிலேயே எழுதிக்கொண்டிருந்தன. காட்டுயிர் பெயர்கள் வருடக்கணக்காகத் தவறாகவே குறிப்பிடப்பட்டன. உதாரணம். ‘காட்டு மாடு’ என்பதற்கு ‘காட்டெருமை’ என்றே எழுதினார்கள். யானை என்றவுடன் ‘அட்டகாசம்’ என்ற சொல்லும் கூடவே வரும். ‘தி இந்து’ நாளிதழில் இது மாறியது. காட்டுயிர் பற்றி ‘தி இந்து’ கட்டுரையாளர்கள், ஜெகநாதன் போன்ற பங்களிப்பாளர்கள் எழுதும் கட்டுரைகள் அறிவியல் அடிப்படையிலும் தரமாகவும் அமைந்துள்ளன. நாட்டின் ரத்த நாளங்களைச் சிதைப்பது போன்ற செயலான மணல்கொள்ளை பற்றிக் கள ஆய்வின் அடிப்படையில் வெளியான கட்டுரைகள் முக்கியமானவை. வரலாறு திரித்துக் கூறப்படும் இந்த நாட்களில், காந்தி முதலான வரலாற்று ஆளுமைகளைப் பற்றி ‘தி இந்து’ நாளிதழ் வெளியிடும் பதிவுகள் என்னை ஈர்க்கின்றன.

எனக்குச் சற்று ஏமாற்றத்தை அளிப்பது திரைப்படம் பற்றிய பதிவுகள். இதுதான் சினிமா என்று சில இயக்குநர்கள் நமக்குத் தந்துகொண்டிருக்கும் படமாக்கப்பட்ட பல்சுவை நிகழ்ச்சிகளைப் பற்றி இன்னும் எழுதுவது தமிழ் சினிமா உயர உதவாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x