Published : 15 Sep 2017 03:11 PM
Last Updated : 15 Sep 2017 03:11 PM

‘தி இந்து’ தமிழ் திரு விருதுகள்- தமிழ் ஆளுமைகளைப் போற்றுவோம்!

சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் இன்று மாலை நடைபெறும் ‘யாதும் தமிழே’ விழாவில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘தமிழ் திரு’ விருது வழங்கப்படுகிறது. தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் கல்வி, ஆய்வு, கலை, இலக்கியம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சாதித்த கீழ்க்கண்ட ஐந்து ஆளுமைகளுக்கு விருது வழங்கப்படுகிறது. வாசகர்கள் பரிந்துரையின் அடிப்படையில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆளுமைகளை கௌரவிப்பதில் ‘தி இந்து’ பெருமை கொள்கிறது.

ஒரு கல்வெட்டு கேடயம் ஆனது!- ‘தமிழ் திரு’ விருது பெறும் அறிஞர்களுக்கு அளிக்கப்படும் கேடயம் உருவான பின்னணி!

‘தமிழ் திரு’ விருதின் ஒரு பகுதியாக விருதாளர்களுக்குச் சிறப்புக் கேடயம் வழங்கப்படுகிறது. தமிழின் மேன்மையைப் பறைசாற்றக்கூடிய வகையில் இக்கேடயம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பண்பாட்டின் தனி அடையாளம் தஞ்சைப் பெரிய கோயில் என்று அறியப்படும் ராஜராஜீஸ்வரம். இக்கோயிலின்  விமானத்து அதிட்டானத்து ஜகதிப் படையில் தென்மேற்கு மூலையில் ஒரு கல்வெட்டு அமைந்திருக்கிறது. அந்தக் கல்வெட்டின் ஒரு பகுதியே ‘தமிழ் திரு‘ கேடயமாக மாறியிருக்கிறது.

கல்வெட்டு சொல்லும் செய்தி

மாமன்னன் ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி எனப்படும் கல்வெட்டுகளில் ஒன்றான மேற்கண்ட கல்வெட்டில் ‘திருமகள் போல’ எனத் தொடங்கும் பாடல் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜராஜன் தன் படை பலத்தால் வென்ற நாடுகளின் பட்டியல் காணப்படுகிறது. அடுத்து ராஜராஜனின் இருபத்தி ஒன்பதாவது ஆட்சியாண்டுவரை (கி.பி. 1014 வரை) அக்கோயிலுக்கு அளித்த ஊர்களின் விவரம் காணப்படுகிறது. ஒவ்வொரு ஊரின் மொத்த அளவும் அவற்றில் உள்ள முக்கிய இடங்களின் அளவும் குறிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் முதலாவதாக இங்கணாட்டு பாலையூர் என்கிற ஊர் பற்றிய செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தத் தகவலைக் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

கல்வெட்டு எழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன்

சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும் திராவிட மொழிக் குடும்பத்துக்கும் உள்ள உறவைச் சொன்னவர்

சிந்து சமவெளியின் சித்திர எழுத்துக்கள், தொன்மையான தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் போன்றவற்றில் உலக அளவில் மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவர் ஐராவதம் மகாதேவன்.

அக்டோபர் 2, 1930-ல் பிறந்த ஐராவதம் மகாதேவன் திருச்சிராப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பட்டம் பெற்று ஆட்சிப் பணியில் 27 ஆண்டுகள் பணிபுரிந்தபின் 1980-ல் ஐராவதம் மகாதேவன் விருப்ப ஓய்வைப் பெற்றார். பணிக் காலத்தில் நேர்மைக்காகவும் கடின உழைப்புக்காகவும் திறமைக்காகவும் அவர் அறியப்பட்டிருந்தார்.

விருப்ப ஓய்வுக்குப் பிறகு கல்வெட்டியலில் கொண்ட ஆர்வத்தின் காரணமாக அந்தத் துறையில் ஐராவதம் மகாதேவன் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். சிந்து சமவெளி எழுத்துக்களும் பிராமி எழுத்துக்களும் ஐராவதம் மகாதேவனின் நிபுணத்துவத்தில் பிரதானமான பகுதிகள்.

சிந்து சமவெளி எழுத்துக்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக 1970-ல்

‘ஜவாஹர்லால் நேரு ஃபெலோஷிப்’ ஐராவதம் மகாதேவனுக்குக் கிடைத்தது.

1977-ல் அவர் வெளியிட்ட ‘தி இண்டஸ் ஸ்கிரிப்ட்: டெக்ஸ்ட்ஸ், கன்கார்டன்ஸ் அண்ட் டேபிள்ஸ்’ என்ற நூல் சிந்து சமவெளி எழுத்துக்களைக் குறித்த ஆராய்ச்சி களில் ஒரு மைல்கல். அந்த நூலில்தான் சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும் திராவிட மொழிக் குடும்பத்துக்கும் இடையிலான உறவைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். சிந்து சமவெளிக் கலாச்சாரம் என்பது திராவிடக் கலாச்சாரமே என்று நிறுவுவதில் அவருடைய ஆய்வுகள் பேருதவி புரிந்துவருகின்றன.

முற்காலத் தமிழ்க் கல்வெட்டுகளை ஆராய்ந்து அவற்றைப் பற்றி விரிவாக எழுதி 2003-ல் அவர் வெளியிட்ட ’ஏர்லி தமிழ் எபிகிராஃபி: ஃப்ரம் தி ஏர்லியஸ்ட் டூ த சிக்ஸ்த் சென்சுரி ஏ.டி.’ என்கிற பெருநூல் மிகவும் முக்கியமானது. அவருடைய மகத்தான சாதனைகளுள் ஒன்றாக இந்த நூல் கருதப்படுகிறது.

கல்வெட்டியலைப் போன்றே ‘தினமணி’ இதழின் ஆசிரியராக (1987-1991) பணியாற்றிய காலகட்டத்தில் இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் என்றென்றும் நினைவுகூரப்படும்.

அவர் பெற்ற முக்கிய விருதுகளும் கௌரவங்களும் : 2009-ல் மத்திய அரசு வழங்கிய பத்ம விருது, அதே ஆண்டில் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கிய டி.லிட். பட்டம், 2009-2010 ஆண்டுகளுக்கான ‘தொல்காப்பியர் விருது’, 2010-12-ல் ஆசியாட்டிக் சொஸைட்டி ஆஃப் மும்பை வழங்கிய ‘கேம்பெல் பதக்கம்’, 2015-ல் திராவிடப் பல்கலைக்கழகம் (குப்பம்) வழங்கிய டி..லிட். பட்டம்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன்- கிராமத்து மனிதர்களின் கதைக்கும் மொழிக்கும் இலக்கிய அந்தஸ்து தந்தவர்

கரிசல் இலக்கியத்தில் ‘முன்னத்தி ஏர்’ என்று சொன்னால் அனைவருக்கும் ஒரு பெயர் மனதில் எழும். கி. ராஜநாராயணன்! அதுவரை மேல்தட்டுப் பிரிவினர், நடுத்தர வர்க்கத்தினரின் கதைகளைப் பொதுத் தமிழில் பேசிவந்த தமிழ் இலக்கியம் ‘சொகமான’ கிராமத்துக் கதைகளை, கிராமத்து மனிதர்களின் ‘வக்கணை’யான மொழியில் பேச ஆரம்பித்தது கி.ரா.வின் வருகைக்குப் பிறகுதான்.

கோவில்பட்டிக்கு அருகில் இடைச்செவல் கிராமத்தில் 1922-ல் பிறந்த கி.ராஜநாராயணன் பள்ளிப் படிப்பைப் பூர்த்திசெய்யவில்லை. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றி கி.ரா. சொல்லிக்கொள்வார். பள்ளிப்படிப்புதான் அவருக்கு ஏறவில்லையே தவிர, பட்டறிவில் அவர் சிறந்து விளங்கினார். கதைகள் சொல்வதிலும் எழுதுவதிலும் அவ்வளவு இன்பம் அவருக்கு! இயற்கை, இசை போன்றவற்றின் பெரும் ரசிகர் அவர். மற்றொரு தலைசிறந்த எழுத்தாளரான கு.அழகிரிசாமியும் கி.ரா.வின் ஊர்க்காரர் என்பது தமிழ் இலக்கியம் செய்த பெரும் பேறுகளில் ஒன்று.

1960-களின் இடைப்பகுதியில் கி.ரா.வின் முதல் சிறுகதை நூல் வெளியானது. எனினும், 1960-களின் இறுதியில் வெளியான ‘கோபல்ல கிராமம்’தான் அவரை இலக்கிய உலகில் உச்ச இடத்தில் நிலைநிறுத்தியது. தொடர்ந்து சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரை நூல்கள் என்று வளமான பங்களிப்பைப் படைப்பிலக்கியத்தில் கி.ரா. செய்திருக்கிறார். நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு, வட்டார வழக்கு அகராதி என்று கி.ரா.வின் பங்களிப்பு மேலும் விரிவானது. எல்லா வகையிலும் கி.ரா.வின் வாழ்க்கையை அற்புதமான கதைசொல்லியின் வாழ்க்கையாகவே பார்க்க முடியும்!

‘கோபல்ல கிராமம்’ நாவலின் தொடர்ச்சியாக கி.ரா. எழுதிய ‘கோபல்லபுரத்து மக்கள்’ என்ற நாவலுக்கு 1991-ல் சாகித்திய அகாடமி விருது கிடைத்தது. இது தவிர இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்றவற்றை கி.ரா. பெற்றிருக்கிறார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர் கி.ரா.

95 வயதில் அடியெடுத்து வைக்கும் கி.ரா. ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் ‘மனுசங்க’ என்ற தொடரைச் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார். தற்போது, ‘பெண் கதை எனும் பெருங்கதை’ என்ற தொடரை கி.ரா. எழுதிக்கொண்டிருக்கிறார்.

வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் - நாட்டுப்புறக் கலையான வில்லுப்பாட்டுக்குத் தனி அடையாளம் ஏற்படுத்தியவர்

வில்லுப்பாட்டு என்றதும் உடனடியாக எல்லோருடைய மனதின் இசைத்தட்டுகளிலும் ‘தந்தனத்தோம் என்று சொல்லியே’ ஒலிக்க ஆரம்பிக்கும். பிரபலமான இசை வடிவமாக வில்லுப்பாட்டு இருந்தாலும், மிகச் சில வில்லுப்பாட்டுக் கலைஞர்களே நம்மிடையே இருக்கிறார்கள். அவர்களில் மிகவும்

முக்கியமானவர் சுப்பு ஆறுமுகம். தனிநபர் ராணுவம்போல இந்தக் கலைக்காகச் சேவையாற்றிக்கொண்டிருப்பவர் அவர்.

திருநெல்வேலியில் உள்ள நெல்லைச் சத்திரம் புதுக்குளம் கிராமத்தில்

28-06-1928 அன்று பிறந்தவர் சுப்பு ஆறுமுகம். பள்ளிப் பருவத்திலே கலை, இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம்கொண்டிருந்த அவர் பல்வேறு பரிசுகளை வென்றார். 16 வயதில் ‘குமரன் பாட்டு’ என்ற புத்தகத்தை எழுதினார். சுப்பு ஆறுமுகத்தின் திறமையைக் கண்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வில்லுப்பாட்டுக்காகவும் திரைப்படங்களில் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுவதற்காகவும் சுப்பு ஆறுமுகத்தை சென்னைக்கு அழைத்துவந்தார்.

என்.எஸ். கிருஷ்ணன் கேட்டுக்கொண்டதற்கிணங்க ‘காந்தி மகான்’ கதையை 1948-ல் சுப்பு ஆறுமுகம் எழுதினார். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கதையை வில்லுப்பாட்டாகவும் நடத்தினார். தொடர்ந்து வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், வானொலி என்று சுப்பு ஆறுமுகத்தின் கலைச் செயல்பாடுகள் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றன.

வில்லுப்பாட்டோடு தமிழ்த் திரைப்படங்களில் சுப்பு ஆறுமுகத்தின் பங்கு பெரிய அளவில் இருந்திருக்கிறது. ‘மனிதனைக் காணோம்’ என்ற இவரது கதைதான் ‘சின்னஞ்சிறு உலகம்’ என்ற பெயரில் திரைப்படமானது.

திருவையாற்றில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் தியாகப் பிரம்ம விழாவின் 147-வது வருடத்திய ஆராதனை விழாவில் சுப்பு ஆறுமுகம் இரண்டு மணி நேரம் நிகழ்த்திய வில்லிசை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. காந்தி, பாரதியார் போன்றோர்மீது பெருமதிப்பு கொண்டிருக்கும் சுப்பு ஆறுமுகம் இறை பக்தி மிக்கவர். தனது தொண்ணூறாவது வயதிலும் சற்றும் தளராமல் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளைத் தன் மகள் பாரதி திருமகன் உதவியுடன் நிகழ்த்திவருகிறார்.

70 ஆண்டுகளுக்கும் மேலாக கலைப்பயணம் செய்து ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் சுப்பு ஆறுமுகம், தமிழக அரசிடமிருந்து ‘கலைமாமணி’ என்ற கௌரவத்தையும் மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் விருதையும் பெற்றிருக்கிறார்.

பேராசிரியர் பிரபா கல்விமணி - எளிய மக்களின் கல்விக் கண் திறக்கப் பாடுபடுபவர்

கல்யாணி என அறியப்படும் பேராசிரியர் பிரபா கல்விமணி எளிய மக்களின் கல்விக் கண் திறந்த கல்வியாளர், மனிதஉரிமைச் செயல்பாட்டாளர், இருளர் பழங்குடி பாதுகாப்புப் போராளி எனப் பல முகங்களைக் கொண்டவர்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் உள்ள சௌந்திரபாண்டியபுரம் கிராமத்தின் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். நாடு விடுதலை பெற்ற ஆண்டில், குடும்பத்தில் பத்தாவது குழந்தையாகப் பிறந்தவர். மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கங்களில் ஈடுபாடுகொண்டிருந்தார். பின்பு கல்லூரி ஆசிரியர் பணிக்கு வந்தபிறகு மார்க்சிய இயக்கங்களில் ஈடுபாடுகொண்டார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1965-ல் படித்த காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். முதுகலை பட்டப் படிப்பு முடித்த பிறகு விழுப்புரத்திலும், பிறகு திண்டிவனம் அரசுக் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.

கல்லூரிப் பணியின்போது தலித் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்குவதில் கவனம் செலுத்தினார். கல்லூரி ஆசிரியர் சங்கத்தில் இணைந்து சக பேராசிரியர்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்துவந்தார். பேராசிரியர் பணிக்காக அவர் நீண்ட காலம் தங்கியிருந்த திண்டிவனமே, இன்றைக்கு அவருடைய ஊராகிவிட்டது.

1993-ல் அத்தியூர் விஜயா என்கிற இருளர் இனப் பெண்ணைக் காவல்துறையினர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை பேராசிரியர் முன்னெடுத்து நடத்தினார். அதன் பிறகு இருளர் பழங்குடிகளுக்குத் துணை நிற்பதன் அவசியத்தை உணர்ந்து தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். 1996-ல் உருவாக்கப்பட்ட பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்துக்குத் தலைமையேற்றார்.

புரட்சிப் பண்பாட்டு இயக்கம், மக்கள் கல்வி இயக்கம், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, மக்கள் கல்விக் கூட்டியக்கம் போன்ற அமைப்புகள் மூலம் தமிழகம் எங்கும் தமிழ்வழிக் கல்விக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டவர். ஒருவருடைய தாய் மொழி சார்ந்த உரிமைகளை அடிப்படை ஜனநாயக உரிமையாகக் கருதுபவர் பேராசிரியர் கல்விமணி. தாய்மொழியில் படிப்பதற்கு எல்லா வாய்ப்பும் ஒருவருக்குக் கிடைப்பது அவசியம் என்று வலியுறுத்துபவர்.

தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் திண்டிவனம் உரோசனையில் 2000-ம் ஆண்டு தாய்த் தமிழ்ப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். 21 பிள்ளைகள், ஒரு ஆசிரியர், ஒரு தாயம்மாளுடன் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் தற்போது 203 மாணவர்கள் பயில்கின்றனர். அரசின் நிதி உதவி எதுவுமில்லாத நிலையிலும் கல்வி, மதிய உணவு, சீருடை உள்ளிட்ட அனைத்தும் இப்பள்ளியில் இலவசமாக அளிக்கப்படுகின்றன. மேலும், இருளர் பழங்குடிக் குழந்தைகளின் கல்விக் கண் திறக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார்.

விஞ்ஞானி என்.வளர்மதி - விண்வெளி அறிவியலில் உயரம் தொட்ட தமிழ் விஞ்ஞானி

நம் சமூகத்தில் நீண்டகாலமாக நம்பப்பட்டுவரும் பல்வேறு மூடநம்பிக்கைகளைத் தகர்த்தவர். பெண்களால் அறிவியல் துறையில் சாதிக்க முடியாது, தமிழில் படித்தால் உயர முடியாது என பல்வேறு முடியாதுகளை வென்று சாதித்தவர் இவர்.

உலகை வியக்க வைக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, பல்வேறு வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. இவற்றில் தொலையுணர்வு செயற்கைக்கோள் (Radar Imaging Satellite) திட்டத்தின் முதல் பெண் இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றவர் வளர்மதி.

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியான அரியலூரில் அரசு ஊழியரின் முதல் மகளாகப் பிறந்தவர். அரியலூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் படித்தார். எம்.இ.யில் அவர் நல்ல ரேங்க் பெறவே, அது 1984-ல் 'இஸ்ரோ' வேலையைப் பெற்றுத் தந்தது. முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட ரிசாட் 1 செயற்கைக்கோள் 2012-ல் விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அந்தத் திட்டத்தின் இயக்குநராகச் செயல்பட்டவர் வளர்மதி. விஞ்ஞானத் துறையில் பெண்கள் என்ன சாதிக்க முடியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்.

ரேடார் இமேஜிங் சாட்டிலைட் எனப்படும் ரிசாட் செயற்கைக்கோள் 24 மணி நேரமும் படம் எடுத்து அனுப்பக் கூடியது. மேகங்களை ஊடுருவியும் இரவிலும்கூட படமெடுக்கும் திறன் கொண்டது. ரிசாட் 1 செயற்கைக்கோள் தவிர, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். - சரல், ஜிசாட் 7, மங்கள்யான் மார்ஸ் மிஷன், ஜிசாட் 14 உள்ளிட்ட திட்டங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்.

இஸ்ரோவில் 30 ஆண்டுகளைக் கடந்து பல்வேறு திட்டங்களில் வெற்றிகரமாக வளர்மதி பணிபுரிந்துவருகிறார். அவர் பணியில் சேர்ந்தபோது, 25-க்கும் குறைவான பெண்களே இஸ்ரோவில் பணிபுரிந்தார்கள். இவரைப் போன்ற பல பெண்களின் கடின உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக, இன்றைக்கு இஸ்ரோ நிறுவனத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் பணிபுரிந்துவருகிறார்கள். இஸ்ரோவில் வளர்மதி திட்ட இயக்குநர் என்கிற பதவியைத் தொடர்ந்து குரூப் டைரக்டர், புரோகிராம் டைரக்டர் நிலைக்கு உயர்ந்தார். தற்போது இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இணை இயக்குநர் மற்றும் மதிப்புமிகு விஞ்ஞானி நிலையில் பணிபுரிந்துவருகிறார்.

தமிழக அரசு வழங்கும் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் விருதை 2015-ம் ஆண்டில் முதன்முதலில் பெற்ற பெருமையும் விஞ்ஞானி வளர்மதிக்கே சொந்தம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x