Published : 18 Sep 2017 03:24 PM
Last Updated : 18 Sep 2017 03:24 PM

யானைகளின் வருகை 38: காடு, ஒரு குருகுலம், நடிகர் ரஜினிகாந்த்

மாங்கரை தாண்டி மலைப்பாதையில் பயணிக்கும் போது முதல் வளைவில் இருப்பது காரல் க்யூபல் இன்ஸ்டிடியூஷன். அதற்கு அடுத்த வளைவில் ஒரு பெரிய சுற்றுச்சுவருடன் கூடிய வாயிற் கதவு போட்ட கான்கிரீட் வளைவு. அங்கே ஒரு கிறித்துவ கல்வியியல் மையத்தின் பெயரில் காணப்படும் பெயர்ப்பலகை. இதன் இரும்பு வாயிற் கதவுகள் உடைக்கப்பட்டு வளைக்கப்பட்டு காணப்படுகிறது. அது இப்பகுதிக்கு வருகை புரியும் யானைக்கூட்டங்கள் அடிக்கடி நொறுக்கி விடுவதாகவும் தெரிவிக்கிறார்கள் இங்கு ஆங்காங்கே மாடு மேய்க்கும் மனிதர்கள்.

இதன் அருகில் சாலையோரத்திலேயே தண்ணீர் தேங்கும் அளவு சிறு குட்டை. அதில் தேங்கும் தண்ணீரை மாலை நேரங்களில் யானைகள் அருந்திச் செல்வதும் உண்டு. 'இங்கே ஆசிரியர் பயிற்சி கல்வியியல் மையம் ஒன்றை அமைக்க ஒரு கிறித்துவ அமைப்பு பஞ்சாயத்து அனுமதி பெற்றுள்ளது. அவர்கள் கட்டுமானப்பணிகளை ஆரம்பிக்க தாமதம் செய்த நிலையில், 'ஹாகா' (மலைப்பகுதி மேம்பாட்டுக்கு குழு) அமைக்கப்பட்டு, அந்த சட்டவிதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டது. எனவே பஞ்சாயத்து அனுமதி செல்லுபடியாகவில்லை. தவிர அப்போது வனத்துறை அலுவலராக இருந்த அதிகாரி இந்த இடம் முழுக்க யானைகளின் வழித்தடத்தில் உள்ளதாக அனுமதி அளிக்கவில்லை. அதோடு இயற்கை, சூழலியல் ஆர்வலர்களும் இதற்கு எதிர்ப்பு காட்டினர். எனவே அப்போ இருந்து இப்போ வரை இப்படியே இது இருக்கிறது!' என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.

இதைத் தாண்டி ஓரிரு கிலோமீட்டர் மலைப்பாதையிலேயே பயணிக்கும் போது 25 சென்ட், 30 சென்ட் நிலத்தில் அழகிய தோற்றங்களில் பண்ணை வீடுகள் முகிழ்த்து வருவதையும் காண முடிகிறது. இதைத் தாண்டி பெரிய வளைவு ஒன்று திரும்பும் இடத்தில்தான் இடது புறம் அமைந்திருக்கிறது சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம். சாலையிலிருந்து 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே இந்த மையத்தை அடையமுடியும் நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இம்மையம் இருந்தது. தற்போது இதைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

இச் சாலையின் முகப்பிலேயே செக்யூரிட்டி அலுவலகமும் போடப்பட்டுள்ளது.

இதைத் தாண்டி சென்றால் எட்டுவது தயானந்த சரஸ்வதி சுவாமி ஸ்தாபித்த ஆர்ஷ வித்ய குருகுலம். இதிலிருந்து சில கிலோமீட்டர் தூர மலையடுக்குகளில்தான் தூமனூர், சேம்புக்கரை, ஆலமரமேடு, ஜம்புகண்டி, பெரிய ஜம்புகண்டி கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கடந்த பத்தாண்டுகளில் ஏராளமான யானை மிதி மனித சாவுகளும், அதற்கு இணையாக காட்டு யானைகளின் மரணங்களும் நிகழ்ந்துள்ளன. அகழியில் சிக்கி, வயிற்று உபாதையில், யானைகளின் மோதலில் காட்டுயானை இறப்பு நடந்துள்ள போதிலும், ஒவ்வொரு மரணத்திற்கு ஏற்றபடி சர்ச்சைகளும் உருண்டுள்ளன.

அப்படித்தான் கடந்த 2010 ஆம் ஆண்டில் பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டி அருகே குட்டி யானை ஒன்று இறந்து சர்ச்சைக்குள்ளானது.

இம்மையத்திற்கு சொந்தமான நிலத்தில் ஒரு கீழ்நிலைத் தொட்டி கட்டப்பட்டிருந்தது. அதில் ஊழியர்கள் நீர் நிரப்புவதும், அதில் காட்டு யானைகள் வந்து நீர் அருந்துவதும் வழக்கமாகவே தொடர்ந்து இருந்து வந்தது. இந்த நிலையில் தொட்டியில் மூடிபோடும் அளவு இடைவெளி விட்டு மீதியுள்ள ஏரியாவை கான்கிரீட் போட்டு மூடிவிட்டனர். அந்த மூடியும் ஒரு அடிக்கு, ஒரு அடி நீள அகலத்தில் நகர்த்தி தண்ணீர் எடுப்பதற்குரிய அளவிலேயே அமைக்கப்பட்டிருந்தது. அந்த மூடி போடாத - மூடப்படாத காலங்களில் அவ்வப்போது, யானைகள் கூட்டம் இங்கே வருவதும், இதற்குள் தும்பிக்கையை விட்டு நீர் உறிஞ்சி அருந்துவதும் நடந்து வந்திருக்கிறது.

ஒரு நாள் இந்த தொட்டியில் நீர் அருந்தும் மும்மரத்தில் காட்டு யானைகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு முட்டல் மோதலுடன் தண்ணீர் அருந்தியிருக்கிறது. அதில் அவற்றுக்கு இடையே சிக்கிய குட்டி யானை ஒன்று இறந்துவிட்டது. இதையே சூழலியலாளர்களும் குறிப்பிட்டனர். ஆனால் இம்மையத்தினர், 'குட்டியானை நீர் அருந்துவதற்கு வந்து இறக்கவில்லை. அது ஏற்கெனவே வயிற்று நோயினால் அவதிப்பட்டு வந்திருக்கிறது. அது முற்றிய நிலையிலேயே இங்கே தொட்டிக்கருகே வந்து விழுந்து இறந்துள்ளது!' என்றே குறிப்பிட்டனர். அதையே பின்னர் வந்த யானைக்குட்டியின் உடல்கூறு ஆய்வும் தெளிவு படுத்தியிருந்தது.

இந்த சம்பவமே இங்குள்ள கட்டிடங்கள் யாவும் வலசைப் பாதையி்ல அமைந்துள்ளதாக, சூழலியாளர்கள் அவ்வப்போது சர்ச்சை கிளப்ப காரணியானது. அந்த வகை கண்ணிக்கு இதனை அடுத்து ஓரிரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குருகுலமும் தப்பவில்லை.

இந்த குருகுலத்தைப் பொறுத்தவரை 1990களில் தயானந்த சரஸ்வதியால் தோற்றுவிக்கப்பட்டது. இக்குருகுலம் இங்கே வியாபார நோக்கத்தோடோ, லட்சக்கணக்கான மக்களை திரட்டி வழிபாடு நடத்தும் எண்ணத்துடனோ வரவில்லை என்பது தெளிவு. பறவைகள் மையம், பறவைகள் மற்றும் அதன் சார்பு உயிர்கள், தாவரங்கள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் அமைந்துள்ளது என்றால் குருகுலத்தைப் பொறுத்தவரை, ஆங்கில, சமஸ்கிருத வழியில் கீதையும், வேதமும் கற்றுக் கொடுத்தது. சாதி, மத, இன பேதம் கடந்து இலவசமாகவே சொல்லிக் கொடுக்கப்படுகிறது. குறுகிய கால மற்றும் மூன்றரை வருட கால இக்கல்வியை கற்றுத்தேர்ந்தவர்கள் உலகம் முழுக்க வேதம் கற்பிக்கும் ஆசிரியர்களாகவும் உள்ளனர். இதற்காக வருடத்திற்கு ஐம்பது முதல் நூறு பேர் வரை இங்கே வந்து பயின்றாலே அதிகம். இதை கற்றவர்களில் சிலர் மையங்கள் அமைத்து தயானந்தாவை பின்பற்றி வேதம், கீதை கற்பித்து தருவதாகவும் கூறப்படுகிறது.

குருகுலத்தில் கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் மட்டுமல்லாது முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் வரை டிரஸ்டிகளாக இருக்கின்றனர். அவர்களுக்கென இங்கே தனித்தனி குடில்களும் உண்டு. அவர்கள் யாருமே இங்கிருக்கிற வனச்சூழலை கெடுக்கிற அளவு எதுவும் செய்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் நடிகர் ரஜினிகாந்த் தன் மானசீக குருக்களில் ஒருவராக தயானந்த சரஸ்வதியை கொண்டிருந்தாலும், அவர் இங்கே வருவதும், தங்குவதும் போவதும் கூட படு ரகசியமாகவே பல முறை இருந்திருக்கிறது.

ரஜினி வந்து போகிறார் என்ற காரணத்தினாலேயே குருகுலமும், ஆசிரமும் வெளி உலகுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு தெரியவும் ஆரம்பித்தது. அப்படித்தான் 2000 ஆம் ஆண்டில் இந்த குருகுலத்தை பற்றி 'ரஜினி ஆசிரமம்' என்று தலைப்பிட்டு ஒரு செய்திக் கட்டுரையை எழுதினேன். நான் பணிபுரிந்த பத்திரிகையில் அது அப்போது அச்சிலும் வந்தது. அப்போதிருந்து இப்போது வரை இந்த பகுதியில் செய்தி சேகரிப்புக்காக பயணிக்கிறேன்.

குருகுல அமைந்திருக்கும் பகுதியில் புதிதாக கட்டுமானங்களோ, வேறு வித பணிகளோ, ஆயிரக்கணக்கான மக்களையோ நான் ஒரு நாளும் கண்டதில்லை. இந்த குருகுலத்திற்குள்ளும் சில சமயம் செய்தி சேகரிப்புக்காக சென்றுள்ளேன். அங்கும் கூட காடு, காடாகவே இருந்தது.

'இந்த குருகுலம் அமைந்திருக்கும் மலைக்காடு மரங்களே இல்லாத பொட்டல்வெளியாகவே முன்னர் இருந்தது. சுவாமிஜி வந்த பிறகுதான் இது முழுக்க சோலையானது. பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. அதில் பறவைகள் நிறைந்து அவை இடும் எச்சங்கள் இப்போது அடர்ந்த காடுகளாகவே மாறிவிட்டன!' என இங்கு பணியாற்றும் சேவகர்கள் மட்டுமல்ல; இங்கு உள்ள 50க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராம மக்கள் மாறாது கருத்து தெரிவித்து வந்ததையும் கேட்டிருக்கிறேன்/ இப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அந்த அளவு பழங்குடியினர்கள் இந்த குருகுலத்தின்பால் விசுவாசம், நேசம் கொண்டிருப்பதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. அதன் பெயர்தான் 'எய்ம் ஃபார் சேவா' (AIM FOR SEVA) என்ற இயக்கம்.

தூவைப்பதி, மாங்கரை உள்ளிட்ட இந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களில் பெரும்பான்மையாய் இருளர் இன மக்களே வசிக்கின்றனர் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவில் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் எதுவுமே கிடைக்கப் பெறாது இருந்தது. அந்த விழிப்புணர்வு கூட அவர்களிடம் இல்லாதிருந்தது பெரும் சோகம். அதைவிட இங்கே உள்ள தூமனூர், சேம்புக்கரை, பனப்பள்ளி, எழுத்துக்கல் புதூர், சோலையூர், சொரண்டி, குறவன்கண்டி போன்ற கிராமங்களுக்கு சாலை வசதிகள், மின்வசதிகள் கிடையாது. அதை நிறைவேற்றவும் முடியாது. காரணம் அத்தனையும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது.

உதாரணத்திற்கு எழுத்துக்கல் புதூர் என்ற பழங்குடியின கிராமத்திற்கு இடையே ஆறு குறுக்கிட்டது. மழை வெள்ளக்காலங்களில் அந்த ஊருக்கு செல்லும் பழங்குடிகள் தங்கள் ஆடையை கழற்றி இக்கரையில் உள்ள அறை ஒன்றில் வைத்து விட்டு ஆற்றில் இறங்கி தலை மட்டும் தெரிகிற அளவு செல்வார்கள். அக்கரையை அடைந்ததும் அங்குள்ள அறையில் வைத்திருக்கும் வேறு துணியை அணிந்து கொண்டு தன் ஊருக்குள் செல்வார்கள். அந்த அளவு கொடுமையான வாழ்க்கை முறை. இவர்களின் குறையை பஞ்சாயத்தில் எழுப்ப பழங்குடி கிராமத்துக்கு கவுன்சிலரும் கிடையாது. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் அடிப்படை கல்விக்கு கூட ஆனைகட்டி, அத்திக்கடவு பகுதிகளில் உள்ள பழங்குடியின மாணவ விடுதிகளில் தங்கித்தான் படிக்க வேண்டிய நிலை. எனவே குழந்தைகளும் ஆடு, மாடு மேய்ப்பதை மட்டுமே கல்வியாக கற்றிருந்தார்கள். மருத்துவ வசதியும் சுத்தமாக கிடையாது. எப்போதாவது சுகாதாரத்துறை செவிலியர்கள் வருவார்கள். மாத்திரை மருந்து கொடுப்பார்கள். செல்வார்கள். சத்தான உணவின்றி ரத்தசோகை நோய் தாக்குதல் பலருக்கு இருந்தது. ஓடைத்தண்ணீரையே குடித்து வாழ்ந்தால் பற்கள் பழுப்பேறி காணப்பட்டது. இதையெல்லாம் அப்போது நேரடியாக சென்று பார்த்து செய்தி சேகரித்து கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன்.

இப்படிப்பட்ட இவர்களின் அவல சூழலை கேரளாவில் அட்டப்பாடியில் மையங்கள் அமைத்திருந்த கிறித்துவ மெஷினரிகள் வாகாக பயன்படுத்தின.

மெஷினரிகளின் பிரச்சாரகர்கள் மருத்துவம், சுகாதாரம், கல்வி புகட்டுவதாக பழங்குடி கிராமங்களுக்குள் புக ஆரம்பித்தனர். கூடவே மதப் பிரச்சாரமும் நடந்தது. இதை கவனித்த ஆனைகட்டி சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் இளைஞர்கள் சிலர் குருகுலத்தை அணுகினர். வறுமை, கொடுமை, கல்வியறிவின்மை, சுகாதாரக்கேடுடன் வாழும் இம்மக்களை மீட்டெடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதன் எதிரொலியே 'எய்ம் ஃபார் சேவா!'. இந்த அமைப்பில் தன்னார்வலர்களாக பழங்குடியின இளைஞர்களே சேர்க்கப்பட்டனர். அவர்கள் குறிப்பிட்ட கிராமங்கள் தோறும் கொண்டு சென்றனர். பள்ளி இல்லாத ஊருக்கு முதலில் பால்வாடி, சுகாதார மையங்கள், வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல் என துரிதமாக நடந்தது. ஒவ்வொரு ஊரிலும் சிறு கோயில்களும் ஏற்படுத்தப்பட்டன.

இதற்கு தன்னார்வ அமைப்பு என்ற முறையில் அரசு நிதியுதவி மட்டுமல்லாது, வெளி நாட்டிலிருந்தும் நிதி உதவிகள் வந்ததாக இங்கு பணியாற்றிய இளைஞர்களே தெரிவித்தனர். இப்படி மட்டும் இந்த சேவை 10 ஆண்டுகளில் சுமார் 100 பழங்குடியின கிராமத்திற்கும் சென்றடைந்தன. அதற்கு மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பு நல்கினர்.

சாலையில்லாத ஊர்கள் பல சாலை வசதி பெற்றன. மின்சார வாசமே அற்ற இடங்களில் சூரியமின் விளக்குகள் வந்தன. இதன் மூலம் பழங்குடிகளின் வாழ்வு பெரிய அளவு மேம்பட்டதோ இல்லையோ, ஓரளவுக்கேனும் மாற்றத்திற்குள்ளாகின. காட்டுக்குள்ளேயே வாழ்ந்தவர்கள் வெளியே வர ஆரம்பித்தனர். செங்கல் சூளை, கட்டிட வேலை என புதிய கூலி வேலைக்கும் செல்லத் தொடங்கினர். இந்த கால சுழற்சி மாற்றத்தில் காட்டில் இருந்த யானைகளும் சாலைகளில் உலா வர ஆரம்பித்ததுதான் ஆச்சர்யம்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x