Published : 16 Sep 2017 12:29 PM
Last Updated : 16 Sep 2017 12:29 PM

ஒரு நாளிதழின் பணியென்பது...: ஆர். நல்லகண்ணு

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசகர்களின் ஊக்கத்தாலும், பங்களிப்பாலும் மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்த சூழலில் வாசகர்கள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து தமிழகத்தின் மிக முக்கியமான முன்னோடிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆர். நல்லகண்ணு, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்.

தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தினமும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழை வாசித்துவிடுபவன் நான். வெறும் செய்திகளைத் தொகுத்துத் தருவதல்ல, ஒரு நாளிதழின் பணியென்பது. சமூகத்தில் நிகழும் போக்குகள் பற்றிய விமர்சனபூர்வமான பார்வையையும் சேர்த்தே எழுத வேண்டியது அவசியம்.

அரசியல் களத்தில் நிகழும் பல்வேறு விஷயங்களைக் கூர்ந்து கவனித்து எழுதப்படும் ‘தி இந்து’வின் நடுப்பக்கக் கட்டுரைகள் மிகவும் கவனிக்கத்தக்கவை. ‘மெல்லத் தமிழன் இனி…’என குடியின் கொடுமைக்கு எதிராக எழுதப்பட்ட தொடரும், ‘ஓடும் நீரின் வேரை அறுத்த வரலாறு’ என நீர் மேலாண்மையின் அவசியம் குறித்து எழுதப்பட்ட தொடரும் மிக முக்கியமானவை.

‘பெண் இன்று’ இணைப்பிதழ் தரமாக இருக்கிறது. பெண்களுக்கான புதிய சிந்தனையை அந்தப் பகுதியில் இடம்பெறும் கட்டுரைகளும், பெண்கள் நிகழ்த்தும் சாதனைச் செய்திகளும் தருகின்றன.

இடதுசாரிகள் பற்றிய சரியான பார்வையோடு கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். தமிழகத்தில் இடதுசாரி இயக்கங்களால் விளைந்துள்ள சமூக மாற்றங்கள் குறித்த வரலாற்றுப் பதிவுகளையும் ‘தி இந்து’ பதிவுசெய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x