Published : 10 Jul 2014 09:00 AM
Last Updated : 10 Jul 2014 09:00 AM

ஹெச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளை காக்கும் மதுரை சபரி சங்கரன்

‘‘இந்தக் காலத்து இளைஞர்கள் இணையத்தைசரியாக பயன்படுத்தினால் ஆயிரம் பில்கேட்ஸ் களையும் ஸ்டீவ்ஜாப்ஸ்களையும் உருவாக்கலாம்’’ என்கிறார் சபரி சங்கரன்.

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த சபரி சங்கரன் எம்.சி.ஏ. படித்துவிட்டு வெப் டிசைனிங் செய்யும் பணியில் இருக்கிறார். இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து ஏழை மற்றும் ஹெச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளை முன்னேற்றப் பாதைக்கு வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுகுறித்து நம்மிடம் பேசினார் சங்கரன்.

’’நான்கு வருடங்களுக்கு முன்பு, என் நண்பன் கார்த்திக் அழைத்ததால் அருப்புக்கோட்டையிலுள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்றுக்குச் சென்றேன். சுமார் 50 குழந்தைகள் அங்கு இருந்தார்கள். அந்தக் குழந் தைகள் இருந்த சூழலைப் பார்த்து பதறிப் போனேன். கொஞ்சநேரம் அவர்க ளோடு அமர்ந்து பேசியதில் அந்தக் குழந்தைகளில் பலர், டாக்டராக வேண் டும்.. போலீஸாக வேண்டும்.. இன்ஜினீய ராக வேண்டும்’ என தங்களது எதிர் கால ஆசைகளை எல்லாம் என்னிடம் கொட்டித் தீர்த்தார்கள். ஆனால், அதையெல்லாம் பூர்த்தி செய்வதற்கான எந்த முகாந்திரமும் அங்கு இல்லை.

திரும்பும்போது பஸ்ஸில் அந்தக் குழந்தைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். இவர்களுக்காக ஏதாவது செய்தாக வேண்டும் என நினைத்தேன். அதற்காக வாரம் ஒருமுறை நானும் நண்பனும் அந்த இல்லத்துக்குச் சென்று அந்தக் குழந்தைகளுக்கு பாடம் மற்றும் பொது அறிவு விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தோம். இதேபோல் மதுரையிலும் சமயநல்லூரிலும் ஆதரவற்ற காப்பகக் குழந்தைகளுக்கு பாடம் நடத்த ஆரம்பித்தோம். அவர்க ளுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங் கள், எழுது பொருட்கள் உள்ளிட் டவைகளையும் வாங்கிக் கொடுத்தோம்.

இவர்களின் கனவுகளை நினை வாக்குவதற்காக, ‘கனவுக்கு செயல் கொடுப்போம்’ என்ற அமைப்பைத் தொடங்கினோம். ஒருகட்டத்தில் அந்தந்த பகுதிகளிலேயே நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி அவர்கள் மூலமாகவே அந்தக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தோம். அந்த சமயத்தில், ஹெச்.ஐ.வி. பாதித்த பெண்மணி ஒருவர், பதினோறாம் வகுப்பு படிக்கும் தனது மகளின் படிப்புச் செலவுக்கு உதவிகேட்டு என்னிடம் வந்தார். பரிதாபத்திற்குரிய இன்னொரு விஷயம் என்னவென்றால் அந்தப் பெண்ணின் மகளுக்கும் ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ்!

கூடவே அந்தப் பெண்மணி, ‘எனக் குத் தெரிந்த இன்னும் முப்பது நாற்பது பிள்ளைகள் இவளைப் போலவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்’ என்ற அதிர்ச்சித் தகவலையும் சொன்னார். ‘நீங்கள் எல்லாம் எப்படி அறிமுகமானீர்கள்?’ என்று கேட்டபோது, வாரா வாரம் மதுரை பெரியாஸ்பத்திரிக்கு மருந்து வாங்க வரும்போது பழக்கம்’ என்று சொன்னார்.

அடுத்த வாரம் அவரோடு நானும் ஜி.ஹெச்-சுக்குப் போனேன். ஹெச்.ஐ.வி. பாதித்த 30 குழந்தைகளை அன்று சந்தித்தேன். அவர்களில் பலர் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் மெலிந்துபோய் இருந்தார்கள். எனது நண்பர்கள் மூலமாக முதலில் அவர் களுக்குத் தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தேன். அப்போதிருந்து சனிக்கிழமைதோறும் நானும் எனது நண்பர்களும் ஜி.ஹெச்-சுக்குப் போய் அந்தக் குழந்தைகளை சந்தித்து அவர் களை கவனித்துக் கொள்ள ஆரம்பித் தோம். ஹெச்.ஐ.வி. பாதித்த குழந்தை களுக்கும் அவர்களின் பெற்றோருக் கும் தன்னம்பிக்கை தரும் வகை யில் கவுன்சலிங்கும் கொடுக்க ஆரம்பித் தோம்.

பள்ளிக்குப் போகாமல் இருந்த சில குழந்தைகளை பள்ளியில் சேர்த்தோம். ஐ.டி. துறையில் எனக்கு நண்பர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இந்தக் குழந்தைகளுக்குத் தேவை யானதை செய்து கொடுக்கத் தேவை யான நிதியை அவர்கள்தான் கொடுத்து உதவுகிறார்கள். அதுவும் போத வில்லை என்றால் முகநூலில் விஷயத் தைச் சொல்வோம். உதவிகள் தானாக வந்துவிடும். இணையத்தை இதுமாதிரி யான நல்ல விஷயங்களுக்குப் பயன் படுத்தினால் இந்தியா எங்கேயோ போய் விடும்.

சில குழந்தைகளுக்கு பகுதி நேர வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அதில் கிடைக்கும் வரு மானத்தைக் கொண்டு அவர்களை படிக்க வைக்கிறோம். ஹெச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளின் நலனுக்காக தனியான காப்பகம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்பதுதான் எங்களது அடுத்த திட்டம்’’ அழுத்தமாகச் சொன்னார் சபரி சங்கரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x