

வா
ழ்க்கையில் எத்தனை உயர்ந்த நிலைக்குச் சென்றாலும், எவ்வளவு வளமான வாழ்க்கை அமைந்தாலும்கூட பள்ளி - கல்லூரி நாட்களில் நாம் அடைந்த மகிழ்ச்சியும் மனதுக்குப் பிடித்தமான அந்த சுதந்திரமும் கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் நமக்குத் திரும்பக் கிடைக்காது.
படிப்புக்குப் பிறகு, வேலை, திருமணம், பொறுப்புகள் என நம்மை பரபரப்புகள் ஆக்கிரமித்துக் கொள்ளும். ஆனாலும் பட்டாம்பூச்சிகளைப் போல நண்பர்களுடன் சுற்றித் திரிந்த பசுமையான அந்த இளமை நாட்களும் அப்போது நம்மோடு இருந்த நட்புகளும் அடிக்கடி நமக்குள்ளே வந்துபோகும். கையில் பணமில்லை என்றாலும் மனதில் பாரமில்லாமல் சந்தோசமே சிறகுகளாக நண்பர்களுடன் வலம் வந்த அந்த நாட்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கம் நம்மில் பலருக்கும் நிச்சயம் இருக்கும்.
வகுப்பறை, நண்பர்களுடன் அடிக்கடி குதூகலித்த இடங்கள், ஓடி விளையாடிய மைதானம் என தம் மனதைவிட்டு அகலாத அந்த இடங்களுக்கு எல்லாம் அவ்வப்போது மனைவி மக்களையும் அழைத்துச் சென்று, தங்களது பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அப்படி பழைய நிகழ்வுகளை தனது உறவுகளிடம் பகிர்ந்து கொள்ளும்போது அவர்களது முகத்தில் தான் எத்தனை ஆனந்தம்!
இதோ இங்கேயும் அப்படித்தான்.. திருச்சியிலுள்ள பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் படித்த மாணவர்கள் அந்தக் கல்லூரியில் உள்ள ஆலமரத்தடியில் ஆண்டுக்கொரு முறை கூடுகிறார்கள். தங்கள் வாழ்வின் மறக்கமுடியாத அடையாளமாக இந்த ஆல மரத்தைக் குறிப்பிடும் இவர்கள், ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த தினத்தில் இந்த ஆலமரத்தின் அடியில் கூடி, தங்களின் பசுமை நிறைந்த பழைய நினைவுகளை ஆனந்தமாய் அசைபோட்டுக் கலைகிறார்கள்.
அந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி என்.சிவா. “ஒவ்வொருவருக்கும் அவர்கள் பிறந்ததுமே வாழ்க்கைத் தொடங்கிவிடுகிறது. ஆனால், எங்களுக்கு வாழ்க்கைப் பாதையின் சரியான திசை தொடங்கியது எங்கள் கல்லூரியில் இருக்கும் அந்த ஆலமரத்தின் அடியில்தான்! புத்தருக்கு ஞானம் கிடைத்ததுபோல், எங்களுக்கு சகலத்தையும் கற்பித்த போதி மரம் அது.
ஏழை எளிய மாணவர்களுக்கு உயர் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் தந்த கொடையால் 1965-ல் தொடங்கப்பட்டது திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி. ஆரம்பத்தில் எங்கள் கல்லூரியில் கட்டிட வசதி குறைவு. அதனால், இடைவேளையிலும் மாலை நேரத்திலும் எங்களில் பலர், மிகப்பெரிய அந்த ஆலமரத்தின் நிழலில்தான் கூடுவோம். அங்கு, படிப்போம் என்பதைவிட பேசுவோம், விவாதிப்போம், வாக்குவாதம் செய்வோம், அரட்டை அடிப்போம், அவ்வப்போது சண்டையும் போடுவோம். கல்வியைத் தாண்டிய எங்களது இன்ன பிற நடவடிக்கைகள் அனைத்தும் அந்த ஆலமரத்து நிழலில்தான் தொடங்கியது எனலாம்.
ஒருசமயம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலை விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டது. அதைக் கண்டித்து, எங்கள் கல்லூரி ஆல மரத்தின் அடியில்தான் போராட்டத்தை ஆயத்தப் படுத்தினோம். ஆலமரத்திலிருந்து புறப்பட்ட எங்களது கண்டன ஊர்வலம் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்தது. அப்போது, ‘படிக்கத்தான் கல்லூரியைக் கொடுத்தேன்; போராட அல்ல. போராட்டம் நடத்த தொழிற்சங்கங்கள் உள்ளன’ என்று சொல்லி எங்களைக் கடிந்துகொண்டார் பெரியார்.
அதற்குப் பிறகு, மாணவர் நலன், அடிப்படைத் தேவைகள் என கல்லூரி சார்ந்த கோரிக்கைகளுக்காக மட்டுமன்றி, சமூகம் சார்ந்த பல்வேறு போராட்டங் களையும் நாங்கள் ரகசியமாக ஆயத்தப்படுத்தியதை அந்த ஆலமரம் நன்கு அறியும். குறிப்பாக, தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்துதல் மற்றும் சமூகநீதிக்கான போராட்டங்களை ஆலமரத்திலிருந்தே தொடங்கினோம். அரசியல் சார்ந்த, கல்லூரி பேரவைத் தேர்தலின் போது பிரதான பிரச்சாரத் திடலாக ஆல மரத்தடிதான் இருந்தது. இப்படி, எல்லாவற்றுக்கும் நாங்கள் இங்கே ஒன்றுகூடியதால், ‘ஆலமரத்தடியில் கூடாதே’ என கல்லூரி நிர்வாகமே உத்தரவிடும் அளவுக்கு போனது.
பெரும்பாலும், பட்டியல் இனம் மற்றும் கிராமப் பகுதி மாணவர்களே படித்த இந்தக் கல்லூரியும், அதன் மாணவர்களும் அவ்வளவாய் மதிக்கப்படாத, பொருட்படுத்தப்படாத நிலை இருந்தது. அதில், நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்தினோம். வெளியிடங்களில் இசை, கவிதை, கட்டுரை, விளையாட்டு, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொண்டதன் மூலம் எங்கள் கல்லூரியையும் மற்றவர்களை மதிக்க வைத்தோம். அதற்காக, களமிறங்கி பரிணமித்த மாணவர்கள் ஒன்றுகூடிய இடம் அந்த ஆலமரத்தடி. அங்கு கூடிய யாரும் கெட்டுப்போய்விட வில்லை.
இங்கு படித்தவர்கள் அரசுத் துறைகளில் மிக உயர்ந்த பதவிகளை அலங்கரித்திருக்கிறார்கள், மக்கள் பிரதிநிதிகளாகவும் இருந்தனர்; இன்னும் இருக்கின்றனர். எனவேதான், இத்தனை மதிப்பான வாழ்க்கையைத் தந்த கல்லூரியை நினைவுகூரும் வகையில், முன்னாள் மாணவர் சங்கத்தைத் தொடங்கி, ஆண்டு தோறும் செப்டம்பர் 17-ல் பெரியார் பிறந்த தினத்தில் அந்த ஆலமரத்தடியில் கூடுகிறோம். ‘முன்னாள் மாணவர்கள் சங்கம ம்’ என்ற இந்த நிகழ்வை கடந்த 15 ஆண்டுகளாக விடாமல் நடத்தி வருகிறோம். அப்போது, அந்த ஆலமரத்தடியில் நின்று, கடந்தகால நினைவுகளையும், மறைந்துவிட்ட முன்னாள் சகாக்களின் நினைவுகளையும் பகிர்ந்து கொள்வோம். இந்த ஆண்டும் அப்படிக் கூடினோம்.
அண்மையில், அந்த ஆலமரம் பட்டுப்போகும் நிலைக்கு வந்ததை அறிந்து துடித்துப் போனோம். வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்களை அழைத்து வந்து உரமிட்டு, அதைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இப்போது விழுதுகள் துளிர்விடத் தொடங்கியுள்ளன. வாழ்க்கையில் பல்வேறு நிலைகளுக்கு உயர்ந்தாலும், பல்வேறு இடங்களுக்குச் சென்றாலும் இந்த ஆலமரத்தடிக்கு வரும்போது ஏற்படும் ஒரு நெகிழ்வான உணர்வையும் மகிழ்வையும் விவரிக்க வார்த்தைகள் போதாது.
பாரதியாருக்கு எட்டையபுரம் குளக்கரையும், தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு திருவாரூர் கமலாலயத்தையும் குறிப்பிடுவதுபோல் எங்களுக்கு இந்த ஆலமரம் மிகப்பெரும் அடையாளம்” முத்தாய்ப்பாக இப்படிச் சொல்லி முடித்தார் சிவா.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்