Published : 16 Sep 2017 11:20 AM
Last Updated : 16 Sep 2017 11:20 AM

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் சமகாலத்தின் கண்ணாடி! - எஸ்.ராமகிருஷ்ணன்

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசகர்களின் ஊக்கத்தாலும், பங்களிப்பாலும் மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்த சூழலில் வாசகர்கள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து தமிழகத்தின் மிக முக்கியமான முன்னோடிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்

தமிழ் நாளிதழ் மரபின் புதிய முகமாக ‘தி இந்து’ வெளியாகி வந்துகொண்டிருக் கிறது. இலக்கியம் சார்ந்த தீவிரமான செயல்பாடுகள், புத்தக விமர்சனங்கள், நேர்காணல்கள் என அதிகபட்ச இடத்தை இலக்கியத்துக்கு ‘தி இந்து’ அளித்துவருகிறது.

தமிழின் முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி எழுத வைப்பது கூடுதல் மகிழ்ச்சி. புத்தகக் கண்காட்சி குறித்து ‘தி இந்து’ தொடர்ந்து விரிவான செய்திகள் வெளியிட்டு, அதை அறிவியக்கமாக மாற்றியிருக்கிறது. இது போலவே அசோகமித்திரன், ஞானக்கூத்தன், இன்குலாப், அப்துல் ரகுமான் மறைவுக்கு விரிவான அஞ்சலிக் கட்டுரைகள் வெளியிட்டுச் சிறப்பு செய்தது நன்றிக்குஉரியது. இந்திய, தமிழகச் சமகால அரசியல் குறித்த பதிவுகள், சமகால அரசியல் பிரச்சினைகள் குறித்த சிறப்புக் கட்டுரைகள், தலையங்கங்கள், மொழியாக்கங்கள், நேர்காணல்கள் ஆகியவற்றை முக்கியமாகக் கருதுகிறேன். குறிப்பாக, மதவாதத்துக்கு எதிராகவும் மத்திய அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பது, காந்தி, நேரு, காமராஜர் உள்ளிட்ட ஆளுமைகளைப் பற்றிய சிறப்புக் கட்டுரைகள் வெளியிடுவது போன்றவை பாராட்டுக்குரியவை. கல்வி, சுற்றுச்சூழல், பெண்ணுரிமை, சமூகநீதி, விவசாயம், மருத்துவம், நீதித் துறை எனப் பல்வேறு தளங்களில் இதுவரை தமிழ் நாளிதழ் எதிலும் இவ்வளவு விரிவான, அழுத்தமான கட்டுரைகள் வெளியானதில்லை. ‘தி இந்து’வின் நடுப்பக்கக் கட்டுரைகள் சமகாலத்தின் கண்ணாடியாக விளங்குகின்றன. ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியாகும் சினிமா விமர்சனங்கள், சினிமா பற்றிய செய்திகள் போன்றவற்றின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும். கட்டுரைகள் வெளியிடும்போது தகவல் பிழைகள், வரலாற்றுப் பிழைகள் போன்றவற்றைக் களைய வேண்டும்.

உலக சினிமாவுக்காகவும் உலக இலக்கியத்துக்காகவும் வாரம் அரைப் பக்கம் ஒதுக்கலாம். தமிழக, இந்திய அளவில் பயணித்துக் காண வேண்டிய இடங்கள் குறித்து வாரம் ஒரு கட்டுரை இடம்பெறலாம். திரைப்பட விமர்சனத்தை வீடியோ வாக வெளியிட்டுவருவதுபோலப் புத்தக அறிமுகத்தையும் வீடியோவாக வெளியிடலாம். வாரம் ஒரு எழுத்தாளரிடம் வாசகர்கள் கேள்வி கேட்டு அதற்கான பதிலைப் பெற்றுவெளியிடலாம். ஆண்டுதோறும் சிறந்த புத்தகங்களுக்கு ‘தி இந்து’ நாளிதழ் விருது கொடுத்துக் கொண்டாடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x