Published : 02 Sep 2017 09:16 AM
Last Updated : 02 Sep 2017 09:16 AM

வைஷாலி மறுபிறவி எடுத்த உண்மைக் கதை...5: இயல்பு நிலைக்குத் திரும்பிய வைஷாலி!

ரா

ஜ்கோட்டில் லிஃப்ட் விபத்தில் மாட்டி மூடிப் போயிருந்த வைஷாலியின் வாயைத் திறக்கும் அறுவை சிகிச்சையை மருத்துவர் எஸ்.எம்.பாலாஜி வெற்றிகரமாக முடித்தார். அதைத் தொடர்ந்து வைஷாலியால் இயல்பாக வாயைத் திறக்க முடிந்தது. ஆனால் எல்லோரையும் போல வைஷாலியும் வாய் வழியாகச் சாப்பிட ஆரம்பிக்க சில விஷயங்கள் மீதம் இருந்தன.

விபத்தின் போது வைஷாலியின் வாயின் மேல் அண்ணப் பகுதியில் பெரிய ஓட்டை ஏற்பட்டிருந்தது. அந்த வெற்றிடத்தை மூடினால் மட்டுமே வைஷாலியால் சாப்பிட முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

ஆகஸ்ட் 16, புதன்கிழமை

ஓராண்டுக்கும் மேலாக வைஷாலியின் வாய் திறக்கப்படாமலே இருந்ததால் அப்பகுதியில் ரத்த ஓட்டம் அறவே இல்லை. இதனால் வாய்க்குள் உள்ள மற்ற பகுதிகளில் இருக்கும் திசுக்களை எடுத்து அண்ணப்பகுதியில் உள்ள ஓட்டையை மூட முடியாத நிலை உருவானது. (அண்ணத்தில் ரத்த ஓட்டம் இல்லாததால், சிகிச்சை செய்து பொருத்தப்படும் திசுக்கள் உடைந்து மீண்டும் ஓட்டை ஏற்பட வாய்ப்புண்டு)

இதனால் அண்ணத்தில் உள்ள ஓட்டையைத் தற்காலிகமாக அடைக்க, அண்ணத்தின் நிறத்திலேயே இருக்கும் அக்ரிலிக் ப்ளேட் (Obturator) பொருத்தப்பட்டது. இதன்மூலம் வைஷாலியின் வாய்ப்பகுதி முழுமையாக சீரானது.

மருத்துவர்கள் வைஷாலியின் வாயைத் திறந்துவிட்டதால், விபத்தின்போது உடைந்திருந்த அவரின் பற்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, அன்றே புதிய பற்கள் பொருத்தப்பட்டன.

இத்தனை நாட்களாக இரைப்பைக்குச் செல்வதற்காக வயிற்றில் பொருத்தப்பட்டிருந்த ட்யூப் (Feeding Jejunostomy) மூலமே பழச்சாறு, பால், மோர் உள்ளிட்ட திரவங்கள் வைஷாலிக்கு உணவாக அளிக்கப்பட்டன. தற்போது வைஷாலியின் வாய் திறக்கப்பட்ட நிலையில், அவரை மருத்துவர்கள் வாய் வழியே உணவு உட்கொள்ளப் பழக்கப்படுத்தினர்.

முன்னதாக வைஷாலியின் வயிற்றில் பொருத்தப்பட்டிருந்த ட்யூபை அகற்ற வேண்டியிருந்தது. இதற்காக 'தி இந்து' நாளிதழின் மூத்த நிருபர் கண்ணன் இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர்களிடம் கலந்தாலோசித்தார். அவர்கள், ''வைஷாலி சில நாட்களுக்கு வாய் வழியாகச் சாப்பிடப் பழகட்டும். பிறகு ட்யூபை அகற்றிக் கொள்ளலாம்'' என்றனர்.

நாட்கள் சில உருண்டோடின. வைஷாலியின் நிலை குறித்து மருத்துவரிடம் பேசிய கண்ணன், அவரின் வயிற்றில் பொருத்தப்பட்டிருந்த ட்யூபை அகற்ற நேரம் வாங்கினார்.

ஆகஸ்ட் 22, செவ்வாய்க்கிழமை

மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையின் இரைப்பை, குடலியல் அறுவை சிகிச்சை நிபுணரும் சென்னை அரசு பொது மருத்துவமனையின் இரைப்பை, குடலியல் அறுவை சிகிச்சை மையத்தின் முன்னாள் இயக்குநருமான மருத்துவர் எஸ்.எம். சந்திரமோகன் வைஷாலியைப் பரிசோதித்தார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக இரைப்புக்குச் செல்லும் ட்யூப் (PEG) வைஷாலியின் வயிற்றில் பொருத்தப்பட்டிருந்ததால், ட்யூபைச் சுற்றிலும் திசுக்கள் வளர்ந்திருந்தன. அதனால் ட்யூபை எண்டோஸ்கோப்பி மூலமே அகற்ற முடியும் என்றார் மருத்துவர் சந்திரமோகன்.

அவரே தனது நண்பர் மருத்துவர் பிரேம்குமாரிடம் வைஷாலிக்குச் சிகிச்சை அளிக்கப் பரிந்துரை செய்தார்.

ஆகஸ்ட் 24, வியாழக்கிழமை

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை, குடலியல் மருத்துவ சிகிச்சை நிபுணரான மருத்துவர் பிரேம்குமாரை, கண்ணன் மற்றும் வைஷாலி குடும்பத்தினர் சந்தித்தனர். அங்கே வைஷாலியின் இரைப்பையில் பொருத்தப்பட்டிருந்த டியூப் எண்டோஸ்கோப்பி மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

மருத்துவர்கள் வைஷாலி ஒரு நாள் ஓய்வில் இருக்கவேண்டும் என்றனர். அங்கேயே அனுமதிக்கப்பட்ட வைஷாலி, மாலையானதும் இருப்பிடத்துக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டார்.

ஆக ஒவ்வொரு அடியாய்க் கடந்து வந்த வைஷாலியின் மருத்துவப் பயணம், கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு அவரை மீட்டெடுத்தது.

vaisali 5 (2) தற்போது வைஷாலி.

இனி வைஷாலியை முழுமையாக்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் இரண்டுதான். பறிபோன கண் பார்வையை வைஷாலி திரும்பப் பெற வேண்டும். முற்றிலுமாக மாறிப்போய்விட்ட முகம், அழுந்திய நிலையில் உள்ள மூக்கு ஆகியவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவேண்டும்.

விபத்தின்போது கண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு கண் பார்வையையாவது மீட்டுக் கொடுக்க முடியுமா என்று ஒரு சில மாதங்கள் கழித்து மீண்டும் பரிசோதித்துச் சொல்வதாக கண் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வைஷாலியுடைய வாயின் மேல் அண்ணத்தில் தற்காலிகமாக அக்ரிலிக் ப்ளேட் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. வைஷாலி வாயில் இனி தொடர்ந்து இயக்கம் இருப்பதால், சில மாதங்களில் மீண்டும் ரத்த ஓட்டம் உண்டாக அதிக வாய்ப்புள்ளது. அப்போது வைஷாலியின் வாய்ப்பகுதியில் உள்ள திசுக்களை வைத்தே மீண்டும் அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என்கிறார் மருத்துவர் எஸ்.எம்.பாலாஜி.

அத்துடன் முகச்சீரமைப்பு மருத்துவம் மூலம் உருவத்திலும் ஓரளவு வைஷாலியின் பழைய நிலையை மீட்டுக் கொடுக்கும் சிகிச்சையை நடத்தலாம் என்றும் மருத்துவர் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

இத்தனைக்கும் நடுவே, விபத்து குறித்து ராஜ்கோட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆஜராக வைஷாலிக்கு அழைப்பு வந்தது. அதற்காக சென்னையில் இருந்து கிளம்புவதற்கு முன், வைஷாலி குடும்பத்தினர் 'தி இந்து' அலுவலம் வந்தனர்.

அந்த மாலை வேளை மிக மிக நெகிழ்ச்சி நிறைந்தது...

பயணம் தொடரும்... படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x