Last Updated : 11 May, 2017 09:09 AM

 

Published : 11 May 2017 09:09 AM
Last Updated : 11 May 2017 09:09 AM

5 கேள்விகள் 5 பதில்கள்: இடஒதுக்கீட்டால் இழிவு என்பது தாழ்வு எண்ணத்தின் வெளிப்பாடு: தொல்.திருமாவளவன்

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டால் எந்தப் பயனும் இல்லை. அது அவர்களை இழிவுபடுத்தவே உதவுகிறது’ என்ற டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்து பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது. அரசியல், சமூகப் பிரச்சினைகள் எதுவானாலும் தன்னுடைய கருத்தைப் பதிவுசெய்கிற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இதுகுறித்து கருத்து சொல்லாததும் பேசுபொருளாக இருந்த இச்சூழலில், அவருடன் ஒரு பேட்டி:

ஏன் இந்த மௌனம், டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்தை ஏற்கிறீர்களா?

மௌனமெல்லாம் கிடையாது. இதுபற்றி யாரும் என்னிடம் கருத்து கேட்காததால், நான் பதில் தரவில்லை. மேல்சாதி, கீழ்சாதி என்னும் படிநிலையிலான சாதியமைப்பு முறையும் பிறப்பின் அடிப்படையிலான உயர்வு- தாழ்வு நிலையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே நிலைபெற்றுள்ளது. சாதியின் பெயரால் திணிக்கப்படும் 'இழிவு' என்பதும் இதே கால அளவிலான ஒரு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. ஆனால், இடஒதுக்கீடு என்பதோ சுமார் ஒரு நூறாண்டு கால வரலாற்றை மட்டுமே கொண்டது. 'இடஒதுக்கீடு' என்னும் இந்த சமூகநீதி கோட்பாடுதான் சாதியத்தின் இறுக்கத்தை மெல்ல மெல்ல தளரச் செய்து வருகிறது. புரட்சிகரமான மாற்றத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது. சாதியமைப்பு முறையால்தான் ஒவ்வொரு சாதிக்கும் அதற்கு மேலுள்ள சாதிகளால் இழிவே தவிர, இடஒதுக்கீட்டால் இழிவு என்பது ஒருவகையான தாழ்வெண்ண உளவியல் சிக்கலின் வெளிப்பாடாகும்.

நாடார் சமூகத்தைப் போல, பள்ளர் சமூகத்தையும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து மேலே கொண்டுவருவதற்காகவே பட்டியலினத்தவர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்’ என்று குரல் கொடுப்பதாகச் சொல்கிறாரே கிருஷ்ணசாமி?

சாதியமைப்பின் படிநிலை வரிசையில் அடிநிலையிலுள்ள ஒவ்வொரு சாதியும் சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் மேம்பட வேண்டும் என்பதே நமது நோக்கமும் போராட்டமும். அதன்படி, பள்ளர் சமூகமும் மேம்பட வேண்டும் என்பதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். பாஜகவுக்கு வேறொரு அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. உழைக்கும் சமூகங்களை அணி சேரவிடாமல் ஒவ்வொன்றையும் தனிமைப்படுத்துவதே அவர்களின் செயல் திட்டம். அந்தச் சதிவலையில் புதிய தமிழகம் சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.

மூன்றாவது அணி முயற்சி, தலித் ஒருவரை முதல்வராக்குதல் என்று பல்வேறு விஷயங்களில் விசிக, புதிய தமிழகம் இரண்டும் முரண்பட்டே நிற்கின்றன. தலைவர்களுக்குள்ளான ஈகோவா, அல்லது வேறு காரணம் இருக்கிறதா?

அப்படி ஏதுமிருப்பதாக நான் கருத வில்லை. 1999-ல் மூப்பனாருடன் விசிகவும் புதிய தமிழகமும் சேர்ந்து தான் மூன்றாவது அணியாக, அப்போதைய நாடாளுமன்றத் தேர்தலைச் சத்தித் தோம். அடுத்து, 2004 நாடாளுமன்றத் தேர்தலிலும்கூட ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுடன் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கி னோம். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் புதிய தமிழகம் இணையாததற்குக் காரணம், விசிகவுடனான முரண்பாடு எனக் கூற முடியாது.

அதிமுக ஆட்சியின் நிலையற்றத் தன்மையைப் பயன்படுத்திக்கொண்டு, பல சமூகங்கள் ஆட்சி நிர்வாகத்தில் முக்கியத்துவத்தைக் கேட்டோ, மிரட்டியோ பெற்றிருக்கின்றன. தலித் சட்டமன்ற உறுப்பினர்கள் அதனைச் செய்யத் தவறிவிட்டார்கள் என்று கருதுகிறீர்களா?

தலித் வகுப்பைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தாங்கள் பதவி நீடித்தால் போதும்; மீண்டும் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்புக் கிடைத்தால் போதும் என்கிற மனோ நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. சமூகரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தாம் வஞ்சிக்கப்படுவதையும் சுரண்டப் படுவதையும் அவர்களாலேயே உணர முடியாதது வேதனைக்குரியது. அம்பேத்கர், பெரியார் ஆகியோர் முன்வைத்த சமூகநீதி அரசியலை அவர்கள் உள்வாங்கியிருந்தால், நிச்சயமாக அவர்கள் தமக்கான உரிமைக் குரலைத் துணிந்து எழுப்பியிருப்பர்.

இந்துத்துவத்தை விமர்சிக்காமல், பெரியார் கொள்கைகளைத் தூக்கிப் பிடிக்காமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிற்கிறோம் எனக் காட்டிக்கொள்ளாமல், ஒரு வெற்றியைப் பெற வேண்டும் என நினைக்கிறார் ஸ்டாலின். பாஜக, அதிமுக பாணியில் அரசியல் செய்ய வேண்டும் என எண்ணுகிறார். என்னைப் பொறுத்தவரை ஸ்டாலின், இன்னொரு ஜெயலலிதா” என்று கடந்தாண்டு கூறியிருந்தீர்கள். இப்போது ஸ்டாலின் மாறிவிட்டாரா?

அது, சமூகநீதி கோட்பாட்டைப் பாதுகாத்திட வேண்டும் என்கிற நல்லெண் ணத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்து. அதாவது, பெரியார் விதைத்த - அண்ணா வளர்த்த- கலைஞர் பாதுகாத்த 'சமூகநீதி', 'மாநில உரிமைகள்' போன்ற கொள்கைகளைத் திமுக தொய்வின்றித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் இன்றைக்கும் எமது வேண்டுகோள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x