

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை யில் உள்ள மலைப் பாறையில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்புக் கால ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஓவியம், பழமை யான சிற்பங்கள் உள்ளிட்ட வரலாற்று சிறப்புகளைக் கொண்டுள்ள மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. இந்த மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலையில் பெருங்கற்காலம் அல்லது இரும்புக் கால பண்பாட்டுத் தடயங்கள், கி.பி. 3-ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ் பிராமி கல்வெட்டு, கல்படுக்கைத் தளங்கள், கி.பி. 9-ம் நூற்றாண்டு பாண்டியர் குடவரைக் கோயில், கர்நாடக சங்கீத கல்வெட்டு, சோழர், பாண்டியர், விஜயநகர நாயக்கர், தொண்டமான் மன்னர்கள் காலத்து கோயில்கள், அழகான சிற்பங்கள், சுமார் 200 கல்வெட்டுக்கள் என வரலாற்றுச் சான்றுகள் நிறைந்து காணப்படுகின்றன.
குடுமியான்மலை கோயிலுக்கு பின்புறம் பரம்பூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள சுமார் 30 அடி உயரமுள்ள குன்று முழுவதும் சுமார் 20 இடங்களில் பலவிதமான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்ட அரசு அருங்காட்சியக ஓய்வு பெற்ற உதவி இயக்குநரும் புதுக்கோட்டை வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவருமான டாக்டர் ஜெ. ராஜாமுகமது, செயலர் கரு.ராஜேந்திரன் ஆகியோர் கூறியது:
சிவப்பு நிறத்தில் மனிதன் அம்புடன் வேட்டைக்கு செல்லுதல், கருப்பு நிறத்தில் வரையப்பட்ட மனிதன் உருவம், பிராணியின் உருவம், மரம், செடி, கொடிகள் போன்று தோற்றமளிப்பவை இந்த பாறைகளில் வரையப்பட்டுள்ளன.
ஓவியங்கள் எளிதில் அழிந்து விடாமல் இருக்க இயற்கையில் கிடைக்கும் சிவப்புக் காவிக்கல், மஞ்சள் காவிக்கல், அடுப்புக்கரி ஆகியவற்றைக் கொண்டு இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. செங்குத்தாக அமைந்துள்ள ஓவியங்கள் காணப்படும் பாறை பல ஆயிரம் ஆண்டுகாலமாக மழை, வெயில், காற்று போன்ற இயற்கைத் தாக்கங்களுக்கு உட்பட்டதால் இதில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் தெளிவற்ற நிலையில் உள்ளன. இருப்பினும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஓவியங்கள் நிலைத்து நிற்பதற்கு, இயற்கை மூலிகைகளால் வரையப்பட்டதே காரணமாகும்.இந்த வடிவங்களைக் கொண்டு 4000 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் நாகரிக வளர்ச்சி, கலை ஆர்வம், பிற இடங்களுடனான தொடர்புகளை அறியமுடியும்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட உலகெங்கும் காணப்படும் இதுபோன்ற ஓவியங்கள் தமிழ்நாட்டில் சுமார் 500 இடங்களில் காணப்படுகின்றன. அதில் விழுப்புரம், தருமபுரி, வேலூர், கோயம்புத்தூர், மதுரை போன்ற மாவட்டங்களில் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சில ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
குடுமியான்மலையில் காணப்படும் பாறை ஓவியங்கள் விழுப்புரம் மாவட்டம் ஆலம்பாடி, திண்டுக்கல் சிறுமலை ஆகிய இடங்களில் உள்ள பாறை ஓவியங்களை ஒத்துள்ளன. இதுகுறித்து மேலாய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா. அருள்முருகன் பாறைகளில் வரையப்பட்ட ஓவியங்கள், பழமை யான வழித்தடங்கள் குறித்தும் ஆசிரியர் மணிகண்டன் கந்தர்வ கோட்டையில் கட்டிட ஓவியத்தையும் கண்டறிந்து விளக்கினர்.
நமது வரலாற்று பண்பாட்டு சின்னமாக விளங்கும் இந்த ஓவியங்களை அழிவுகளிலிருந்து பாதுகாக்க இவ்வூர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.