Last Updated : 23 Dec, 2016 12:45 PM

 

Published : 23 Dec 2016 12:45 PM
Last Updated : 23 Dec 2016 12:45 PM

சாகித்ய அகாடமி விருது: வண்ணதாசனுக்கா? கல்யாண்ஜிக்கா? ஆரவாரமற்ற அவரது எழுத்துப்பணிகளுக்கா?

விருதுகள் எழுத்தாளனுக்கு ஒருஅங்கீகாரம் என நாமாக ஒரு பிம்பத்தைக் கட்டமைத்துக்கொண்டுவிட்டோம். அப்படியென்றால் விருதுபெறாதவர்களை யாரும் அங்கீகரிக்கவில்லை என்ற அர்த்தமாகிவிடுமா? வேண்டுமானால் விருதுகள் எழுத்தாளனை உற்சாகப்படுத்தக்கூடும். சிலநேரங்களில் மேலும் இயங்கவிடாமல் செய்துவிடவும்கூடும். அது எழுத்தாளனின் மனநிலை, வாழ்நிலையைப் பொறுத்தது.

விருதுகளின் தன்மை

வண்ணநிலவன் தனக்கு வந்த எந்த உயரிய விருதுகளையும் தொடர்ந்து மறுத்துவருபவர். ஒருவேளை இருக்கும் கொஞ்ச நஞ்ச உற்சாகத்தையும் தரப்படும் அந்த விருதுகள் கெடுத்துவிட்டால்? அல்லது விருது வாங்கினபிறகுதான் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று முத்திரைக்குத்தப்பட்டால்? என்ன காரணமோ வண்ணநிலவன் விருதுகளை தொடர்ந்து மறுத்துவருகிறார். சுஜாதாவிடம் ''நீங்கள் விருதுகளைத் தேடிப் போவதில்லை?'' எனக் கேட்கப்பட்ட போது அவர் சொன்னாராம் விருதுகொடுப்பவர்களின் தகுதி பற்றிய சந்தேகம்தான் என்று.

இதுஒருபுறமிருக்க சாகித்ய அகாடமி விருது என்பது வேண்டப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்களுக்கே தொடர்ந்து தரப்படுகிறது. மட்டுமில்லாமல் தகுதியற்றவர்களுக்கெல்லாம் வழங்கப்படுகிறது போன்ற வசையான விமர்சனங்களை காலந்தோறும் பெற்றுவருகிறது. இந்தமுறை அந்தமாதிரி யாரும் சொல்லமாட்டார்கள் என நம்பலாம். வண்ணதாசன் ஈ எறும்புக்கு துரோகம் நினைத்தவரல்ல. அவரது எழுத்தும் சதா அன்பையே போதித்துவந்தன. அவரது மனம் மட்டும் அல்ல, அவரது எழுத்து மட்டுமல்ல, வீட்டு தாழ்வாரம், முற்றத்தில் படர்ந்த கொடிகள் யாவும் அன்பால் நிறைந்தவை.

ஆரம்பகாலக் கதைகள்

அவரது ஆரம்ப கால சிறுகதைகள் 70, 80களில் எழுதியவை அப்போதே விஜயா பதிப்பகத்தால், 'சமவெளி', 'தோட்டத்திற்கு வெளியே சில பூக்கள்' போன்ற புத்தக வடிவங்களைப் பெற்றன. அவை யாவும் தேர்ந்த இசைக்கலைஞனே கூட இன்னொரு முறை மீட்டிவிடமுடியாத சிலநேரங்களில் மட்டுமே லபித்துவிடும் அபூர்வ லயக் கோர்வைகளைக் கொண்டிருந்தன.

ஆனால் அப்போதெல்லாம் அவர் கவனிக்கப்படவில்லை. கண்ணதாசன் காலத்தில் வண்ணதாசனை அறிந்துகொள்ள யாரும் தயாராக இல்லை. அந்தக் காலக்கட்டத்தில் எழுதப்பட்ட 'தாகமாய் இருக்கிறவர்கள்' கதையை எப்பொழுது படித்தாலும் நம்மை ஒரு சோகம் ஆட்படுத்திவிடும். பஸ் ஸ்டாண்டில் ஆதரவற்ற நிலையில் சில ஜீவன்களை நாம் பார்த்திருப்போம்.

அதில் ஒருத்தியைப் பற்றிய கதையில் வரும் ஆண்களின் மாறுபாடுகளை பதிவுசெய்துள்ளார். லாரி டிரைவர், கிளீனர், டீக்கடைக்காரர் என அவர்களுக்குள் சிலர் அவளை தவறாகப் பயன்படுத்தி தூக்கியெறிந்த பிறகும் அங்கேயே சுற்றித்திரியும் பெண்ணின் வலியாக ஏதும் சொல்லாமல் அவளைச் சுற்றியுள்ள பேருந்துநிலைய பின்னிரவு பொழுதுகளை சித்தரித்தபடி கதை நகரும். உண்மையில் இக்கதையின் வேரைத் தேடியிருக்கவேண்டும். மேல்மண்ணில் பதியனிட்ட பூஞ்செடிகளாகவே அவரது புனைகதைகள் அமைந்துள்ளன.

'சுவர்' கதையில் வரும் வெள்ளையடிக்கிற நாராயணனுடன் அந்த வீட்டு நீலா எனும் இளம்பெண் நன்றாக பழகுவாள். அவளின் தம்பியைப் பற்றி கேட்கும்போது ''காலேஸ்லயா படிக்கு?'' என்றால் அவளும் காலேஜ் என்று சொல்லாமல் ''காலேஸ்ஸ்ஸ்தான் படிக்கான்'' என்று உச்சரிப்புகளில் விளையாடுவாள். வெளிவாசலிலோ தோட்டத்து புறவாசலிலோ அமரவைத்து சாப்பாடு போடுவாள். அந்த வீட்டுப் பெண்ணுக்கு கல்யாணம் ஆகவேண்டும் என்றும் கவலைப்படுகிறவனாக இருக்கிறான். அடுத்தமுறை அவன் அந்த வீட்டுக்கு வெள்ளையடிக்க வருகிறபோது அவள் கல்யாணம் ஆகிபோய்விட்டிருந்தாள். கல்யாணமான செய்திகேட்டு அப்படியா தெரிஞ்சிருந்தா வந்திருப்பேனே என்கிறான்... இந்தமாதிரியான விட்டேற்றியான நட்புறவுகளை வண்ணதாசன் மட்டுமே எழுதமுடியும்.

'ஞாபகம்' கதையில் வரும் பெண்ணோ அலுவலகம் முடிந்து வீடுதிரும்பும்போது வழியில் டிபன்பாக்ஸை அலுவலகத்திலேயே வைத்துவிட்டு வந்து ஞாபகம் வர உடனே திரும்புகிறாள். திரும்பிச் சென்று அங்கு பார்த்தபோது அலுவலகம் பகலில் இருந்ததைவிட முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. இவ்வளவு அழகான இடத்திலா வேலைசெய்கிறோம் என எண்ணுகிறாள்.

மத்திய ஹாலுக்கும் டைனிங் ஹாலுக்கும் நடுவில் வந்தபோது, மேலே வானம் திறந்துகிடந்தது. மழையெல்லாம் கரைந்துவிட்ட வானம். இறகையெல்லாம் கோதிச்சிலுப்பி ஈரம் போக உட்கார்ந்திருக்கிற பறவை சேர்க்கிற வானம். நட்சத்திரம் இல்லை. ஒருபக்கம் ஓரத்தில் மின்னிக்கொண்டிருந்தது சிலேட்டில் அழித்தது மாதிரி நிலா என்று தொடரும் அக்கதையில் வேலை நேரத்திற்குப் பிறகும் வீட்டுக்குப் போகாமல் வேலைசெய்யும் ஊழியர் ஒருவரைக் காணுகிறாள். அவருக்காக மனம் இரங்குகிறாள். 'எனக்கு டிபன் பாக்ஸ் ஞாபகம் வந்ததுபோல இவருக்கு வீட்டு ஞாபகம் வரவேண்டும்' என.

'தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்' கதையில் மனைவியில்லாமல் குழந்தையோடு அவள் வீட்டுக்கு மனைவியின் தங்கைமீது நேசம்படர சென்று வரவேற்பு குறைவாக இருந்ததை எண்ணி உடனே திரும்பியோது எதிர்பட்டவர்களோடு சத்தம் அதிகமாகப் பேசும்மனிதனின் மனப் பரிமாணங்களை பிரித்துக்காட்டுகிறார்.

'போட்டோ' எனும் கதையில் கிராமத்து போட்டோ ஸ்டுடியோ ஒன்றை வெகு அழகாக சித்தரிக்கிறார். அவர் ஸ்டுடியோவைப் பற்றி விவரிக்கும்போது நமது கிராமத்து ஸ்டுடியோக்கள் ஞாபகம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.

இதில் ஒரு இடத்தில், படம் எடுக்க வருகிற புதிய தம்பதிகளிடம் ஒரு அழகு இருக்கிறது. கல்யாணத்தின் பட்டு, கல்யாணத்தின் சந்தனச் சட்டை, கல்யாணத்தின் வெட்கம் எல்லாம் மிச்சமிருக்கிற முகங்களுடன் இருக்கிற அழகு, இதற்கப்புறம் அவர்கள் குழந்தை பிறந்த பிறகுதான் வருவார்கள் குழந்தையைப் படம் எடுக்க வரும்போது என்று ஸ்டுடியோக்களுக்கு வரும் வாடிக்கையாளர்களைப் பற்றியும் போட்டோ உருவாக்கம் குறித்த சின்னச்சின்ன கீற்றுகளும் கூறிச்செல்லும் வண்ணதாசன் ஒருபெண் தனியே ஸ்டுடியோவுக்குள் வந்து தனது கணவனின் பழைய போட்டோவோடு தன்னையும் இணைத்து மார்பளவுக்கு ஒரு போட்டோ செய்து தாருங்கள் எனக் கேட்கிறாள் எனத் தொடர்கிறார்.

கணவன் வரவில்லையா எனும்போது ஓவென்று அழுகிறாள்... இப்படித்தான் கதைக்குள் தனிவடிவம்பெற்று இடம்பெறவேண்டிய கதைகளே தனித்தனி கிளைகளாக உள்ளுக்குள் வளைந்து நெளிந்து வளராமல் அங்கங்கே நிற்கின்றன.

எழுத்துநடை

தனக்கென்ற புதிய உத்தியைதேர்ந்துகொண்டு அதை திருப்புவனம் பட்டுப்புடவையைப் போல தனது எல்லா கதைகளையும் பார்த்துபார்த்து நெய்கிறார் வண்ணதாசன். அழிக்கதவு, கம்பா ரேழி, தார்சா, பட்டாசல், தேரிமணல், உடைமரக்காடு, சினியா மலர்களின் சோகைச் சிவப்பு, கேந்தியின் மஞ்சள், காரைவீடு, வண்டல் தட்டோடி, வாகையடி முக்கு, மஞ்சனத்திப் பூமரம், கும்பா என நெல்லையின் வாழ்வுசார்ந்த சொல்லழகுகளை கதைகளுக்குள் வெகுநுட்பமாக கொண்டுவருகிறார். அதுமட்டுமின்றி எண்ணங்கள் சிணுங்கும் நவீன மனமொழியையும் தெள்ளிய தமிழில் தந்து மொழிக்கு செழுமை சேர்க்கிறார்.

மென்மையான மனித உணர்வுகளோடு தேர்ந்த புத்துணர்ச்சிமிக்க நவீன மொழியொன்றில் வெள்ளி ஓடைநீராக அவரது எழுத்தாளுமை சலசலத்து செல்கிறது. அது அவரது தூய இதயத்தின் ஆளுமை என்றுகூட சொல்லலாம்.ஆரம்பகாலக் கதைகளில் தென்பட்ட வளமான மொழிக்கு நெல்லை என்ற வளமான பண்பாட்டுப் பின்புலமும் நெல்லை என்ற வளமான இலக்கியப் பின்புலமும் சில முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

அடர்த்தியான அதேநேரம் ஈர்க்கத்தக்க மொழிநடையில் தேர்ந்த சிற்ப வேலைப்பாடுபோன்ற நகாசுமிக்க எழுத்துநடையில் மிளிர்பவர் வண்ணதாசன். ஆனால் அவை சிலவற்றில் மட்டுமே வாய்த்து பலவற்றில் தேய்ந்து கலைத்தன்மையற்று செய்நேர்த்தி என்ற அளவிலேயே வெளிப்பட்டு நிற்கத்தக்கவை.

நேரடியாக அன்றி பெரும்பாலும் நனவோடைத் தன்மையோ என மயங்கும் விதமான எழுத்திலேயே கதைமாந்தர்களைப் பொருத்தித் தருகிறார். சிற்சில சிறுகதைகள் தவிர்த்து பெரும்பாலான கதைகளில் கதை என்ற தெளிவான நடையோட்டமாக அல்லாமல் நனைவோடையாக செல்லும் பாணியைச் சார்ந்தவை அவருடைய கதைகள். ஜேம்ஸ் ஜாய்ஸ் டப்ளின் நகரைப் பற்றிய விவரனைகளும் நனைவோடைக்குள்ளிருந்து பீறிட்டு எழக்கூடியதுதான். லாசாராவிலும் இது ஒரு தவம்போல ஊடாடுகிறது. வண்ணதாசனுக்கு ஆரம்பகாலங்களில் அழுத்தமாகப் பிடிபட்டு வேறு பலநேரங்களில் மேலோட்டமாக நீர்த்துப்போன வடிவமாகிப்போனது. 'எனக்குக் கட்டுப்படியாகும் உலகத்தைத்தான் நான் எழுதமுடியயும்.' என அவர் தனது சிறுகதை நூலின் முன்னுரையொன்றில் தனது படைப்பின் சாரம்சத்தையே பாசாங்கில்லாமல் அழகாக சொல்லிச்செல்வார்.

கவிதைகள்

வண்ணதாசன் சிறுகதைகளின் வடிவம் ஒரு கச்சிதம் என்றால் தமிழ் புதுக்கவிதை வரலாற்றின் முற்றத்துக்கு பூங்கொத்துக்களால் அலங்கரித்து வாசலின் தோரணங்களாக அவரது கவிதைகளின் கச்சிதம் தனித்துவம் மிக்கவை. எளிய படிமங்கள் யாருக்கும் பிடிபடும் சொல்முறை என வாழ்வின் அழகுகளை தேர்ந்த பூ அலங்காரம் போல அவர் கவிதைகளில் அடுக்கித் தந்தார்.

''நேரடி வானத்தில் தெரிவதை விடவும் நிலா அழகாக இருப்பது கிளைகளின் இடையில்'' என்று எழுத வாழ்க்கையை நேசிப்பவர்க்கன்றி வேறு யாருக்கு இந்தப் படிமம் கிடைத்துவிடும். மரங்களை அவர் எவ்வளவு நேசித்தார் என்பதற்கு பென்சில் சீவிக் கொண்டிருந்தேன் மொரமொரவென மரங்கள் எங்கோ சரிய'' ஒரு கவிதை போதுமானது.

''கூண்டுக் கிளிகள் காதலில் பிறந்த குஞ்சுக் கிளிக்கு எப்படி எதற்கு வந்தன சிறகுகள்'' என்ற கவிதை விடுதலையற்ற வாழ்வை விசாரண செய்கின்றன. உண்மையில் வண்ணதாசன் தனது எழுத்து நோக்கத்தை மிக அழகாக இந்தக் கவிதையில் கூறியிருக்கிறார். "ரொம்ப நாட்களுக்கு பிறகு நான் பிடித்த பட்டுப்பூச்சியை, அதை பிடித்த நேரத்தின் சந்தோஷத்தோடு, உங்கள் கையில் அல்லது என் மிக அருகில் எதிர்படுகிற மனிதனின் உள்ளங்கைக்கு மாற்றிவிட்டால் போதும்."

ஆனால் அது பலநேரங்களில் நடக்கவில்லை. அவரது ஆரம்ப எழுத்தை நேசித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அது. தொடர்ந்து அதற்கப்புறம் அவர் எழுதியதெல்லாம் பழைய கதை வடிவநேர்த்தியின் நீர்த்த கார்பன் பிரதிகளே. ஆழமற்று மேல்மண்ணில் பதியனிட்ட செடிகளின் வண்ணவண்ண பூக்களே. நடுத்தரக் குடும்பங்களை கதைகளில் கொண்டுவந்தாரே தவிர அதன்வீழ்ச்சியின் மங்கிய நிறத்தின் காலமாறுதலை சொல்லவில்லை.

நடுத்தர வாழ்நிலையை கதைகளில் கொண்டுவந்தாரே தவிர கேள்வியெழுப்பவில்லை. அந்தக் கேள்வி வெளியை நோக்கியல்ல உள்நோக்கியும் இல்லை என்பதுதான் பிரச்சனை. விளிம்புநிலை மனிதர்கள் கதைகளில் வருகிறார்களே தவிர அவர்தம்வாழ்வுப் போக்குகளின் பின்னுள்ள இருண்மையான சமூகநிலைகளைப் பற்றிய விசாரணை இல்லை. கல்யாண்ஜியின் கடிதங்களோ இன்னும் மேலோட்டமானவை. அவரது பிற்காலத்திய கதைகளைவிட மிகவும் பார்மாலிட்டியானவை.

ஆனால் கவிதைகளைப் பொறுத்தவரை இவர் காலத்தில் எழுதியவர்கள் கவிதையிலிருந்து வெளியேறி பலரும் உரைநடைககுள் சென்றுவிட இவர் கவிதையிலே தொடர்ந்து இயங்கிவந்தார். அதற்குக் காரணம் உரைநடையில் இயங்கியபோதும் கவிதையின் மனம் குன்றாமல் அதன் வடிவஅமைதியில் யாருக்கும் வாய்க்காத அபரிதமான படிமங்களோடு உள்ளுணர்வுகளை தேர்ந்தநெறியில் படைத்துவந்ததுதான்.

ஆக, கல்யாணசுந்தரத்தின் எழுத்து மிளிர்ந்துநிற்பது கல்யாண்ஜியிடம்தானே தவிர வண்ணதாசனிடம் அல்ல. அவ்வகையில் கதைகளைவிட கவிதைகளில்தான் அவர் எழுத்து வளம்கொண்டதாக உள்ளது.

சாகித்ய அகாடமியின் மாறுபட்ட செயல்பாடுகள்

சாகித்ய அகாடமிக்கு இந்த மாதிரி விருது அளிப்பது முதன்முறையல்ல. 1969-ல் பாரதிதாசனுக்கு அவரது கவிதை நூல்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்காமல் அவரது நாடக நூலான 'பிசிராந்தையாருக்கு' விருது வழங்கப்பட்டது. 1980-களில் கண்ணதாசன் எத்தனையோ கவிதைத் தொகுதிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துத் தராமல் அவரது 'சேரமான் காதலி' நாவலுக்கே சாகித்ய அகாடமி வழங்கப்பட்டது.

அவ்வளவு ஏன் 80களில் திரைப்பாடல்களில் ஒரு மின்னலாக வந்து இறங்கிய வைரமுத்துவுக்கு அவரது எந்த கவிதைமுயற்சி சார்ந்த நூல்களுக்கும் தரப்படாமல் எனக்கும் கதை எழுதத் தெரியும் எழுதிய ஒரு கதைக்கே 2003-ல் சாகித்ய அகாதெமி அவரது 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலின்பொருட்டு வழங்கப்பட்டது.

அப்படி நேரடியாக பார்க்கவேண்டியதில்லைதான். விருது தர முடிவெடுக்கும்போது அவரது நூல் ஒன்றுக்கு என்ற அடிப்படையாக சமயங்களில் மாறிவிடுவதுண்டு. இந்தமுறையும் அப்படித்தான் நடந்திருக்கிறது என்று புரிந்துகொள்ளமுடிகிறது.

1955லிருந்து சிறுகதைகள் எழுதிவந்த ஆ.மாதவனுக்கு சாகித்ய அகாதெடமி கிடைத்த வருடம் 2015. உண்மையில் படைப்பாளிகளுக்கு எழுதி சமூகத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் தராமல் வேறுஒரு காலகட்டத்தில் 80 வயதுக்குமேல் விருதுதருவது ஏதோ தரவேண்டும் என்று நினைத்து தருவதாகவே கருதவேண்டியுள்ளது.

வண்ணதாசன் சுருதிசுத்தத்தோடு தனது கதைகளையும் கவிதைகளையும் எழுதிய காலம் வேறு. ஆனால் அதன்பிறகு அவரது கதைகளில் உலகம் இனிமையாக இருக்கிறது. மனிதர்கள் மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்கள்... மழைத்தூறல் அழகாக இருக்கிறது. உன் அன்பு பிடித்திருக்கிறது என மிகவும் பார்மாலிட்டியான வார்த்தைகளை வண்ணதாசன் கதைகளில் விரவத் தொடங்கின. அவருக்கு தரப்பட்ட விருதும் கிட்டத்தட்ட 'இந்தமுறை விருது ஒரு நல்ல எழுத்தாளருக்கு வழங்கப்பட்டுவிட்டது' என ஒரு பார்மாலிட்டியாகத்தான் அமைந்திருக்கிறது.

எழுதத் தொடங்கிய காலகட்டத்திலேயே கவிதைகளில் தனி அழகை உருவாக்கியவர் தனித்தன்மையோடு கவிதைகளில் வாழ்க்கையை அணுகியவர் என்ற வகையில் ஒரு கவிஞனாக அவரை அங்கீகரிக்க தயங்குவதற்கு என்ன காரணம்? அந்த வகையில் ஒட்டுமொத்த இலக்கியப் பணிகள் என்ற வகையில் தகுதிவாய்ந்த ஒரு கவிஞனுக்கு விருது கிடைத்துள்ளது என மகிழத்தக்க ஒரு வாய்ப்பாகவே இதை அணுகவேண்டியுள்ளது. ஆரவாரமற்ற படைப்பாளிக்கு அளிக்கப்பட்ட சிறந்த கௌரவமாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

விருதுகளைப் பற்றி கவலைப்படாதவர்கள்

அதேநேரத்தில் வண்ணதாசன் எந்தகாலத்திலும் எந்தநேரத்திலும் விருதுகளைநோக்கிச் செல்லாதவர். அவரைப் போலவே இன்னும் பல சாஹித்ய கர்த்தாக்களும் தமிழில் உண்டு. சுந்தர ராமசாமி, ராஜேந்திர சோழன், வண்ணநிலவன், விக்கிரமாதித்யன், சி.மோகன், யூமா வாசுகி, தேவதச்சன், கலாப்ரியா, சி.மணி, டேவிட் பாக்கியமுத்து, பழமலய், அம்பை, ம.வே.சிவக்குமார், அ.எக்பர்ட் சச்சிதானந்தம்,விட்டல்ராவ், ஆர்.எஸ்.ஜேக்கப், தஞ்சை பிரகாஷ், ஹெப்சிபா ஜேசுதாசன், ஆர்.சூடாமணி, சுப்ரபாரதிமணியன், பெருமாள் முருகன், களந்தை பீர்முகம்மது, எஸ்.சங்கரநாராயணன், அழகிய பெரியவன், இமையம், ராஜ் கௌதமன், ஐசக் அருமைராசன், இன்குலாப், வைத்தீஸ்வரன், ஞானக்கூத்தன், டேவிட் சித்தையா, பாவண்ணன், கார்த்திகா ராஜ்குமார் ( கலைத்துப் போடப்பட்டுள்ள இந்தப் பட்டிலும் முழுமையானதல்ல) போன்றவர்கள் விருதுகள் சார்ந்த எந்த பிரக்ஞையுமின்றி தயங்கித் தயங்கி தள்ளிநின்று வருவதற்கான காரணங்களையும் நாம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.

கவிதைகள், புனைவிலக்கியங்கள் தவிர, இலக்கியத் திறனாய்வு, மொழியியல் ஆய்வு, பிறமொழியாக்கம், பிறமொழிகளிலிருந்து தமிழ் மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டுவருபவர்கள் என நல்லபல எழுத்தாளர்களும் உள்ளனர். அவர்களது சேவைகளும் தமிழுக்கு வளம் சேர்ப்பவையே. பிரச்சனை சாகித்ய அகாடமியில்தான் என்றால் அந்தக் குழுவின் கொள்கைமுடிவுகளில் மாற்றம் செய்வதற்கான பரிசீலனைகளை இனியாவது தொடங்கவேண்டும்.

பால்நிலவன்

தொடர்புக்கு: sridharan.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x