Published : 20 Dec 2016 10:13 AM
Last Updated : 20 Dec 2016 10:13 AM

உங்கள் குரல்: சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா?

சேலம் மாவட்டத்தின் புதிய வட்டாரங்களில் ஒன்றான பெத்தநாயக்கன் பாளையத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என ‘தி இந்து’உங்கள் குரல் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு வாசகர் தனலட்சுமி தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியது:

பேரூராட்சியாக இருக்கும் பெத்தநாயக்கன் பாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் பலவும் செயல்பட்டு வருகின்றன.

சுற்று வட்டாரத்தில் உள்ள ஓலப்பட்டி, ஒட்டப் பட்டி, தளவாய்ப்பட்டி, தென்னம் பிள்ளையூர், வீரக்கவுண்டன்பு தூர் என 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வெளியூர் களில் இருந்து அரசு அலு வலகங்களுக்கு ஊழியர்களும், பள்ளிகளுக்கு மாணவர்களும் தினமும் நூற்றுக்கணக்கானோர் பெத்தநாயக்கன் பாளையம் வந்து செல்கின்றனர்.

மேலும், சுற்று வட்டாரங் களைச் சேர்ந்த மக்கள், பல்வேறு தேவைகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர். தினமும் உள்ளூர் வெளியூர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் பெத்தநாயக்கன் பாளையத்துக்கு வந்து செல்லும் நிலையில், பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லை.

பேருந்துகளுக்காக காத்திருப்போர் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பாதுகாப்பாக நிற்பதற்கு இடமில்லாமல் அவதிப் பட்டு வருகின்றனர். இதேபோல், பேருந்து நிறுத்தம் அருகே கழிப்பிட வசதி இல்லாததால் வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் உட்பட அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக, பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வெளியூர் களில் இருந்து வந்து செல்லும் மாணவிகள், கழிப்பிட வசதி இல்லாமல் துன்பப்படும் அவலம் நீடித்து வருகிறது. பேருந்து நிறுத்தம் அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தில் பேருந்து நிலையமும், கழிப்பிடமும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பெத்தநாயக்கன் பாளையம் வட்டாட்சியர் சபியுன்னிஷா கூறியதாவது:

பெத்தநாயக்கன் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பயணிகளுக்கான நிழற்கூடம், கழிப்பிடம் அமைப்பது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

கிருஷ்ணகிரி பைரப்பா தெருவில் பராமரிப்பற்ற கழிப்பிடத்தை புறக்கணிக்கும் பொதுமக்கள்

கிருஷ்ணகிரி பைரப்பா தெருவில் உள்ள இலவச கழிப்பிடம் அசுத்தமாக பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளதால், பொதுமக்கள் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். என `தி இந்து’வின் உங்கள் குரல் தொலைபேசி எண்ணில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வாசகர் மாதவராமன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கிருஷ்ணகிரி கோ-ஆப் காலனி இணைப்பு சாலையில் பைரப்பா தெரு அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தினமும் காலையில் சாலையில் காய்கறி சந்தை நடைபெறுகிறது.

இந்த பகுதியில் தனியார் பங்களிப்புடன் சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் தற்போது இந்தக் கழிப்பிடத்தை பயன்படுத்துவதில்லை. மாறாக, சாலையோரம் திறந்தவெளியில் அசுத்தம் செய்து வருகின்றனர். சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள சிறுநீர் கழிப்பிடத்தை பராமரித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு மாதவராமன் கூறினார்.

இதே போல் நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பிடம் இல்லை. இதனால், பயணிகள் பேருந்து நிலைய சுவரில் அசுத்தம் செய்து வருகின்றனர். கட்டண கழிப்பிடத்தில் நிர்ணயம் செய்யப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், பயணிகள் திறந்த வெளியில் அசுத்தப்படுத்தி வருகின்றனர். இதனால், இலவச கட்டணக் கழிப்பிடம் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x