Published : 01 Nov 2016 12:33 PM
Last Updated : 01 Nov 2016 12:33 PM

உங்கள் குரல்: காங்கயம் அருகே புதிய தார் சாலை ஒரே மாதத்தில் பழுது

காங்கயம் முத்தூர் பேரூராட்சியில் ரூ.1 கோடி செலவில் போடப்பட்ட தார் சாலை ஒரு மாதம் நிறைவடைவதற்குள் பழுதடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் மாவவட்டம், காங்கயம் அருகே முத்தூர் பேரூராட்சி உள்ளது. 15 வார்டுகளைக் கொண்ட இப்பேரூராட்சியில் சுமார் 15,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

அப்பகுதியைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத வாசகர் ‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ பதிவில் கூறியிருப்பதாவது: சின்னமுத்தூர் முதல் கொடுமுடி செல்லும் சாலையில் இருந்து மோளக்கவுண்டன்புதூர் கிராமத்துக்கு சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது மதுரை வீரன் கோயில் சாலை. இச்சாலை முத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டில் உள்ளது. ஒரு மாதத்துக்கு முன் இங்கு தார் சாலை அமைக்கப்பட்டது. அன்மையில் பெய்த மழையில் சாலையில் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டு, பழுதடைந்துள்ளது.

சிறு மழைக்குக்கூட தாக்குப்பிடிக்க முடியாத தரமற்ற சாலையாக உள்ளது. இதே கிராமத்தைச் சேர்ந்தவர் தனது குடும்பத்தினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பழுதடைந்த சாலையில் விபத்துக்குள்ளானதில் அவரது மகனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, உடனடியாக சில இடங்களில் தார் தெளிக்கப்பட்டு, அதன் மீது போரிங் பவுடர் தூவப்பட்டுள்ளது. இது தவறை மறைக்க முற்படும் செயலாகவே தெரியவருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார் சாலை நன்றாகவே இருந்தது. அதன் மீது அமைக்கப்பட்ட இதுபோன்ற அரைகுறை பணிகளால் மக்கள் பணம் விரயமாக்கப்படுவதைத் தடுக்க அரசு உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆய்வு

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ராம்பிரசாத்திடம் கேட்டபோது, ‘மேற்படி பகுதியில் தமிழக அரசின் உள் கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் 1 கி.மீ. தார் சாலை அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தாராபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஒப்பந்ததாரர் இப்பணியை மேற்கொண்டுள்ளார்.

இதில் சாலை அமைக்க சில இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டியுள்ளது. தகுதிவாய்ந்த பொறியாளர்களின் ஆய்வின் பேரிலேயே தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை. ஒப்பந்த நிறுவனத்துக்கு இதுவரை ரூ.22 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து மீண்டும் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.



நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.





உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x