Last Updated : 04 Oct, 2016 09:06 AM

 

Published : 04 Oct 2016 09:06 AM
Last Updated : 04 Oct 2016 09:06 AM

நம்மைச் சுற்றி: விண்கற்களின் சொர்க்கம்!

வீட்டுப்பக்கம் கில்லி ஆடுவதற்குக் குழி தோண்டும்போது, திடீரென கோலிகுண்டு கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அதுவே, பல்லாயிரம் கிலோ எடை கொண்ட விண்கல்லாக இருந்தால்? தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவின் கேம்போ டெல் செலியோ (Campo del Cielo) பகுதியில் அப்படித்தான் கிடைக்கிறது. இதுவரையில் மொத்தம் 16 விண்கற்கள் அப்பகுதியில் கிடைத்திருக்கின்றன. எனவே, அதனை விண்கற்களின் சொர்க்கம் என்று அழைக்கிறார்கள்.

முதன்முதலில் 1576-ல் சுமார் 15 டன் எடையுள்ள ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்தார்கள். அன்று முதல் தொடர்ந்து சிறிதும் பெரிதுமாக விண்கல் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. கால் கிலோ, அரை கிலோ எடையில்கூட விண்கல்லைத் தோண்டி எடுத்திருக்கிறார்கள்.

கடந்த வாரம் அங்கு சுமார் 30 டன் எடையில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பூமிக்குள் சுமார் 10 அடி ஆழத்தில் புதைந்திருந்த அந்தக் கல்லைத் தோண்டியெடுத்து, அதற்கு கண்சடோ (Gancedo) என்று பெயரிட்டிருக்கிறார்கள். உலகில் கண்டெடுக்கப்பட்ட விண்கல்லிலேயே மூன்றாவது மிகப் பெரிய கல் இது என்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படியென்றால், முதல் இரண்டு பெரிய கற்கள் எங்கே இருக்கின்றன என்று கேட்கிறீர்களா? இரண்டாவது பெரிய விண்கல்லும் (எல் சாகோ El Chaco) இதே பகுதியில்தான் கிடைத்தது. 37 டன் எடை கொண்ட அந்த விண்கல்லை 1980-ம் ஆண்டு கண்டுபிடித்தார்கள். இவை எல்லாம் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மீது மோதிய விண்கல்லில் இருந்து சிதறியவை என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

உலகின் மிகப் பெரிய விண்கல், தென் ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் 1920-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கல்லின் எடை என்ன தெரியுமா? 66 டன். கோபா (Hoba) என்ற பெயர் கொண்ட இந்தக் கல், சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் மோதியது என்று கருதப்படுகிறது. 9 அடி நீளம், 9 அடி அகலம், 3 அடி உயரம் கொண்ட இந்த விண்கல்லில் 84% இரும்பும், 14% நிக்கலும் இருக்கிறது! அந்தக் கல் மோதியபோது, பூமி எப்படி அதிர்ந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்களேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x