

கிராமத்து மனிதர்களுக்கு மரம், செடி, கொடிகளோடு பேசும் வழக்கம் உண்டு. தென்னை மரத்தின் கீழே மனிதர்களின் பேச்சுச் சத்தம் கேட்டால், தென்னை நிறையக் குலைதள்ளும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கிராமத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டின் பெரியவர் இறந்தபோது, அவர் மனைவி தலைவிரி கோலத்துடன் அழுதுகொண்டே ஓடிப்போய், அவர்கள் வயலில் அறுவடைக்கு நின்ற பயிர்களிடம் ஒப்பாரி வைத்ததை ஊரே அதிசயத்துடன் பார்த்தது. மரங்கள் வீட்டுக்கு வெளியே வளர்ந்தாலும், வீட்டிலிருக்கும் மனிதர்களின் துக்கம், கோபம், சந்தோஷம் இவற்றில் பங்குகொள்ளவே செய்கின்றன. இதனை மெய்ப்பிக்கும் விதமாக சமீபத்தில் எங்கள் வீட்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மாதுளம் மரம் நின்றது. அப்பா வைத்த மரம் அது. மரம், பூவும் பிஞ்சுமாய் வளர்ந்து செழித்தபோது, அப்பா காலமாகி விட்டார்.
பக்கத்து வீட்டு நண்பர் ஒரு நாள் ‘‘சார், உங்க மாதுளை மரத்தின் இலைகள் எங்கள் வீட்டுக் கிணற்றில் கொட்டிக்கிட்டே இருக்கு. கிணற்றுத் தண்ணீர் கெட்டுவிட்டது. சின்ன மரம் தானே, இப்பவே வெட்டிடுங்களேன்..’’ என்றபோது மனம் வலித்தது.
‘கிணற்றின் மீது வலை போட்டு விடுங்களேன்’ - சொல்லிப் பார்த்தேன்.
‘செலவாகும் சார்’ என்றார். ‘உங்க பக்கம் வருகிற கிளையை வெட்டிவிடுகிறேன்’ என்றேன். ‘மொத்த மரமும் எங்க வீட்டுப் பக்கம்தான் சார் எட்டிப் பாக்குது’ என்றார்.
‘இந்த மரத்தோட பழம் ரொம்ப ருசியா இருக்கும். பழம் எல்லாத்தையும் நீங்களே எடுத்துக்குங்க. மரத்தை விட்டுடுங்க’ என்றேன்.
மனிதர் என்னோடு பேசுவதையே நிறுத்திவிட்டார். அந்த வீட்டம்மாவும் என் மனைவியோடு பேசுவதையே நிறுத்திவிட்டார். என் மனைவிக்கு வருத்தம்.
ஒரு நாள் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டா ருடன் பகைமை வளரக் காரணமான மாதுளை மரத்தின் மீது எனக்குக் கோபம் உண்டாயிற்று.
என் மனைவியிடம் உரத்த குரலில், ‘அந்த அரிவாளைக் கொண்டுவா’ என்றேன். என் மனைவி அரிவாளுடன் வந்தாள். அவள் முகத்தில் சின்னதாக ஒரு மகிழ்ச்சி.
அரிவாளை ஓங்கினேன். என் கைபேசி ஒலித்தது. ஏதோ அவசர வேலை. அரிவாளைப் போட்டுவிட்டு வீட்டுக்குள் வந்தேன். மாதுளை மரத்தை மறந்துவிட்டோம்.
மறுநாள் காலை என் மனைவியின் குரல் கொல்லைப்புறத்திலிருந்து பதற்றமாகக் கேட்டது.
‘ஏங்க, இங்க வந்து பாருங்களேன்..’
போய்ப் பார்த்தேன். மாதுளை மரம் அப்படியே வாடி இலைகள் தொங்கி… என்ன ஆச்சு?
அந்தச் சமயம் பார்த்து எங்கள் வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்யும் பெரியவர் வந்தார்.
‘பெரியவரே, இந்த மரத்துக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க?’ என்றேன்.
பெரியவர் பேசாமல் அந்த மரத்தையே பார்த்துக்கொண்டு நின்றார். அதன் உடலைச் சுரண்டினார். கீழே மண்ணைத் தோண்டி வேர்ப் பகுதியைப் பார்த்தார்.. பிறகு சொன்னார், ‘மரம் செத்துப் பூட்சுங்க.’
‘என்னது?’
‘ஆமாங்க, இது பயந்தாங்கொள்ளி மரங்க. பேருக்கு ஏத்தாப்ல…’
‘என்ன சொல்றீங்க?’
‘மாது உளம் மரம்க. ஏதோ கொஞ்சம் படிச்சிருக்கேன். பொம்மனாட்டி மனசுங்க இதுக்கு. சுடு சொல் தாங்காது. எதாச்சும் இங்க பேசுனீங்களா?’ என்று கேட்டார்.
நடந்ததை விவரித்தேன்.
‘அதான் மரம் பயந்துபோய் உசிரை விட்டுருச்சு.. போனாபோவுது, சாந்தி பண்ணணும்.. நான் சொல்றத வாங்கியாங்க.’
மரத்துக்குக் கீழே வேரில் பால் ஊற்றி, வெற்றிலை-பாக்கு-பழம் வைத்து, சூடம் ஏற்றி, எங்களுக்கு விபூதி பூசிவிட்டார்.
‘சாந்தியாயிட்டுது… போயிட்டு வாங்க…’ என் மனைவி கண்ணைத் துடைத்துக்கொண்டு உள்ளே போனாள்.
வீட்டுக்கு வருகிற விருந்தாளி களுக்கு மாதுளை மரத்தின் கதையை என் மனைவிதான் சொல்வது வழக்கம். கேட்டவர்களும் கண் கலங்குவார்கள்.
- தஞ்சாவூர்க் கவிராயர்,
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com