Last Updated : 03 Oct, 2016 09:28 AM

 

Published : 03 Oct 2016 09:28 AM
Last Updated : 03 Oct 2016 09:28 AM

நம்மைச் சுற்றி: நடிகனல்ல, மனிதன்!

நடிகர் பிரகாஷ் ராஜின் கன்னடத்‌ திரைப்படம் ‘இதொல்லே ராமாயணா’ வரும் 7-ம் தேதி வெளியாகிறது. இது தொடர்பாக கன்னடத் தனியார் தொலைக்காட்சிக்கு பிரகாஷ் ராஜ் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்,

‘‘காவிரி விவகாரம் பற்றி நீங்க என்ன சொல்றீங்க? சுமுகமா இதைத் தீர்க்க முடியாதா? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சரியா? கர்நாடகாவுக்குப் பாதிப்பா? தமிழ்நாட்டுக்குப் பாதிப்பா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.

அதற்கு பிரகாஷ் ராஜ் , ‘‘நானொரு திரைப்பட நடிகர். ‘இதொல்லே ராமாயணா’ படத்தைப் பற்றிப் பேச வந்திருக்கேன். இது திரைப்படத்தைப் பற்றிய நிகழ்ச்சி. நடிகனாக‌ அதைப் பற்றிப் பேசுகிறேன். காவிரி விவகாரம் அரசியல்ரீதியாக ரொம்பப் பெரிய விஷயம். நீங்கள் நினைப்பது மாதிரி சின்ன விஷயம் இல்லை. மிகவும் ஆழமான விஷயம். விவசாயிகளின் பிரச்சினை வெறும் நீர் மட்டுமில்லை. வேறு சில பெரிய பிரச்சினைகளும் இருக்கின்றன. அதைப் பற்றி விரிவாகப் பேச வேண்டும். இது மாதிரியான திரைப்பட நிகழ்ச்சிகளில் சும்மா சும்மா வாய்க்கு வந்த பிரச்சினையைக் கேட்டு என் வாயைப் பிடுங்காதீர்கள்.

இந்த மாதிரியான பிரச்சினையைப் பற்றிக் கேட்பதன் மூலம் உங்களுக்கு என்ன கிடைக்கிறது? மக்கள் ஏற்கெனவே கோபத்தில் இருக்கிறார்கள். வலி இருக்கிறது. சினிமா நடிகனிடம் இதைப் பற்றியெல்லாம் கேட்க வேண்டும் என்ற கெட்ட புத்தி உங்களுக்கு எங்கிருந்து வருகிறது? இது நல்ல சமயம் இல்லை. தயவுசெய்து நீங்கள் பொறுப்புடன் இருங்கள். இதை அப்படியே மக்களுக்கு ஒளிபரப்புங்கள்.

ஏன் உங்களுக்கு இந்தப் பொறுப்பு இல்லை. வாய்க்கு வந்த விஷயங்களை எல்லாம் ஏன் ஒளிபரப்புகிறீர்கள்? எந்தச் சந்தர்ப்பத்தில் எந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லையா? நீங்கள் இப்படிக் கேட்பது தப்பு இல்லையா? நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன்?

செய்தியாளர்: நான் பரபரப்பாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கேட்கவில்லை.

பிரகாஷ் ராஜ் : அப்படியென்றால், சினிமா நிகழ்ச்சியில் எதற்காக அதைக் கேட்கிறீர்கள்? இங்கு இருப்பவனும் நடிகன்தான். அங்கிருப்பவனும் நடிகன்தான். எல்லாரும் நடிகர்கள்தான். எல்லாரும் மனிதர்கள்தான். அரசியல் வேறு. இது எல்லாருக்கும் தெரியும்.

- வினோத்

தொடர்புக்கு:

vinoth.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x