Published : 20 Oct 2016 09:31 AM
Last Updated : 20 Oct 2016 09:31 AM

காலத்தின் வாசனை: சக்கரம் சுழல்வதில்லை

நான் மூணாம் கிளாஸில் படிக்கும்போது படித்த கவிமணியின் பாடலை இப்போது மூணாம் கிளாஸ் படிக்கும் என் பேரனிடம் பாடிக் காண்பித்தேன்…

‘‘பாட்டியின் வீட்டுப் பழம்பானை - அந்தப் பானை ஒருபுறம் ஓட்டையடா..’’

கவிமணியின் இக்கதைப் பாடலை முழுவதுமாகப் பாடி முடித்ததும் என் பேரன் கேட்டான்,

‘‘பானைன்னா என்ன தாத்தா?”

அவனுக்குக் காண்பிக்க வீட்டில் ஒரு பானைகூட இல்லை. பானையோடு சேர்ந்து அந்தப் பாடலும் மறைந்துவிட்டது. இப்போது வீடுகளில் மட்பாண்டங்களைப் பயன்படுத்துவது அகௌரவம் ஆகிவிட்டது.

பழங்கால வீடுகளுக்குள் நுழைந்தால், வீட்டின் மூலையில் நாணி நிற்கும் ஒரு பெண்ணைப் போல அடுக்குப் பானை வரிசை வரவேற்கும். உப்புநார்த்தங்காய், புளிப் பானை, வடகப் பானை, மோர்ப் பானை என்று ஒவ்வொன்றின் உள்ளேயும் பதார்த்தங்களை அல்ல, ருசியைத்தான் போட்டு மூடி வைத்திருப்பார்கள். உரியில் தொங்கும் பானைகள் நெய்யும் வெண்ணெயுமாகக் கமகமக்கும்.

மட்பாண்டங்கள் நீண்ட நாட்கள் மனிதர்களோடு புழங்கியதாலோ என்னவோ அவற்றுக்கு ஒரு மனித ஜாடை வந்திருக்கும். கல்யாண மாகி புக்ககம் புறப்பட்ட ஒரு பெண், உக்கிராண அறைக்குள் நுழைந்து, ஒரு பழம் பானையின் கன்னம்போல் மினுமினுத்த பகுதியை முத்தமிட்டுச் சென்றாள். கல்யாண மேடைக்கு அழகு சேர்ப்பதில் அரசாணிப் பானைக்கு ஈடுஇணை உண்டா?

எப்போதும் இருட்டு பூசி நிற்கும் அறைக்குள் கீழே உட்கார்ந் திருப்பது அம்மாவா, பானையா என்று சில சமயம் சந்தேகம் வந்துவிடும். பானை உடைந்ததற்காக யாராவது அழுவார்களா? அம்மா அழுதிருக்கிறார். ‘வழிவழியா வம்சமா எங்க மாமியாருக்கும் மாமியார் காலத்திலேர்ந்து வந்த பானைடா அது” என்று சொல்லி உடைந்த பானை ஓடுகளின் மீது கண்ணீர் உகுத்தார்.

அப்பாவின் கை அடிக்கடி நீளும். அப்போதெல்லாம் மெளனத்தை அனுஷ்டிப்பதில் அம்மாவும் பானையும் ஒன்று என்று தோன்றும். பானைகள்தான் என்றில்லை வீடுகளில் விதவிதமான ரூபங்களில் மண்சட்டிகள், கலயங்கள் காட்சி தரும். மண் சட்டியில் வைக்கப்படும் ரசம் பிரமாதமாக இருக்கும். வீட்டுக்கு வீடு குடிநீர்ப் பானைகள் தரையில் மணல்பரப்பி விளாமிச்சை, வெட்டிவேர் எல்லாம் போட்டு வைத்திருப்பார்கள்.

திருப்பதி திருவேங்கடமுடையானுக்கு புதுப்புது பானைகளில் இப்போதும் நைவேத்யம் நடைபெறுகிறது.

சலவைத் தொழிலாளி வீடுகளில் வெள்ளாவிப் பானைகளில் வைத்துதான் துணி வெளுப்பார்கள். பெரிய பெரிய பானைகளில் துணியை அமுக்கி ஊற வைத்து வாழைச் சருகுகளைத் தீமூட்டி எரிப்பது வழக்கம். வெள்ளாவிப் பானையிலிருந்து குபுகுபுவென்று வெண்ணிற நீராவி எழுந்து துணி வாசனையுடன் சேர்ந்து மனசை மயக்கும்.

இப்போதெல்லாம் தெருக்களில் கூடையில் பதநீர்ப் பானையுடன் பச்சைப் பனை ஓலைக் கொட்டான்களுடன் வரும் பெண்களைக் காண முடியவில்லை. பனை ஓலைக் கொட்டானில் பதநீர் வாங்கிப் பருகினால், ஆஹா! என்ன வாசனை.. என்ன ருசி!

அந்தக் காலத்தில் வெளிவந்த ‘சக்ரதாரி’ என்ற படத்தில் நாகையா குயவராக நடித்திருப்பார். அந்தப் படத்தில் ‘‘என் போல் உன் கையிலும் சக்கரம் சுழலுது கண்ணா...” என்று நாகையா பாடும் உருக்கமான பாடல் அப்போது பிரபலம்.

மட்கலங்களைப் பயன்படுத்துவோர் இல்லை. மட்பாண்டத் தொழில் கலைஞர்கள் வேறு பணிகளை நாடிச் செல்லும் அவலம்.

அவர்கள் கையில் சுழன்ற சக்கரம் இப்போது நின்றுவிட்டது.

- தஞ்சாவூர்க் கவிராயர்,

தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x