

பட்டப் படிப்பை முடித்தவர்கள் எல்லாம், பறந்து சென்று வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நிலையில், பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத ஒருவர் பல மாணவர்கள் படிப்பதற்குத் தூண்டுகோலாக விளங்குகிறார். வியப்பை ஏற்படுத்தும் அவர் சாய் கிருஷ்ணா. சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்துவருகிறார்.
செருப்புத் தைப்பவர்களும், தினக்கூலிகளாக வேலை செய்பவர்களும் இங்கு அதிக அளவில் வசிக்கிறார்கள். இப்பகுதியில் சாய் கிருஷ்ணா (29) இலவச டியூஷன் சென்டர் நடத்துகிறார். இதன் மூலம் அப்பகுதியில் உள்ள எளிய குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
வாட்டர் கேன் சப்ளை செய்து வரும் சாய் கிருஷ்ணா, குடும்ப சூழ்நிலை காரணமாகப் பத்தாம் வகுப்பைக்கூட முடிக்க இயலவில்லை. என்றாலும், இன்று அவரால் பல மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஏழாம் வகுப்பு படிக்கும்வரை கடைசி பெஞ்ச் மாணவனாகத் தான் அவர் இருந்திருக்கிறார். ஆனால் எட்டாம் வகுப்பில் அவரது ஆசிரியர் அவரை முதல் பெஞ்சில் உட்கார வைத்து மற்ற மாணவர்களுடன் ஒன்றாகப் படிக்க வைத்தது தான் அவருக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்திருக்கிறது. அதுதான், இந்த டியூஷன் சென்டர் தொடங்கவும் காரணமாக அமைந்திருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தனது டியூஷன் சென்டரை நடத்துகிறார். அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 14, ஆனால் இவர் நடத்தும் டியூஷன் சென்டரில் படிப்பவர்கள் 300 பேர். இவர்களுக்கு இலவசமாகச் சொல்லித் தருபவர்கள் அந்தப் பகுதியிலேயே வசிக்கும் பட்டப் படிப்பு முடித்த 17 இளைஞர்கள். இங்கு பத்தாம் வகுப்பு படித்த 14 மாணவர்களும், பன்னிரண்டாம் வகுப்பு படித்த ஏழு மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
மாணவர்கள் எப்படிச் சேர்ந்தனர் என சாய் கிருஷ்ணாவிடம் கேட்டபோது, பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேக விளையாட்டுப் போட்டிகளை நடத்தியதாலும், பட்டப் படிப்பு முடித்த 20 முதல் 25 வயது ஆனவர்களின் பட்டமளிப்பு விழாவை அப்பகுதியில் வைத்தே நடத்தியதாலும், தன் மீது அப்பகுதியினருக்கு மதிப்பு கூடியதாகவும் அதன் பின்னரே மாணவர்களைத் தன்னிடம் படிக்க அப்பகுதியினர் அனுப்பினர் என்றும் அவர் கூறினார்.
முதலில் வீட்டு மொட்டை மாடியில் வைத்து வகுப்புகளை நடத்தியுள்ளார். பின்னர் மாநகராட்சி ஆணையர், சாய் கிருஷ்ணாவைப் பற்றி அறிந்து, டியூஷன் வகுப்புகளை மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலேயே நடத்த அனுமதியளித்திருக்கிறார். தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்காக மாலை 5 மணி முதல் 9 மணி வரை டியூஷன் நடத்துகிறார். அது தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிலிருந்து ஆசிரியர்கள் வந்து சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர்.
மாணவர்களுக்கு படிப்பைவிட அதிகமாக ஒழுக்கம் கற்பிக்கப்படுகிறது என்று சொல்கிறார் சாய் கிருஷ்ணா. 8 முதல் 12-ம் வகுப்புவரையான மாணவர்களிடையே வாரம் ஒருமுறை நல்லோர் வட்டம் என்ற பெயரில் கூட்டம் நடத்துகிறார். இதில், ஒரு வார காலத்து நல்ல, கெட்ட விஷயங்களை வட்டமாக உட்கார்ந்து அனைவரும் பகிர்ந்துகொள்கிறார்கள்.
அதே போன்று ஆசிரியர்களுக்கும் ஒரு கூட்டம் நடைபெறுகிறது. அதில், மாணவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள், எப்படிக் கற்பித்தலை மேம்படுத்தலாம் என்றெல்லாம் விவாதிக்கிறார்கள். பள்ளிகளில்கூட இல்லாத இந்த ஆரோக்கியமான நடைமுறை இங்கே கடைப்பிடிக்கப்படுகிறது.
சாய் கிருஷ்ணாவின் குடும்பத்தினரும் அப்பகுதியினரும் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள். அவரது அண்ணியும் அக்காவும் மாலையில் பள்ளியைச் சுத்தப்படுத்துகின்றனர். இரவில், மாணவிகள் கிளம்பும் வரை பாதுகாவலாக பள்ளியிலேயே காத்திருக்கின்றனர்.
இங்கு பயின்று பத்தாம் வகுப்பில் 463 மதிப்பெண்கள் பெற்ற மாணவி அஸ்வினி, தான் இவ்வளவு மதிப்பெண் எடுப்பதற்கு டியூஷனில் கிடைத்த பயிற்சி மிகவும் பயனுடையதாக இருந்ததாகவும், டியூசன் சென்டரின் சூழல் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது என்றும் பகிர்ந்துகொண்டார்.
இந்தக் கல்வியாண்டில் மேலும் பலர் டியூஷனில் சேர விருப்பம் தெரிவித்திருப்பதாக சாய் கிருஷ்ணா கூறுகிறார். இந்தப் பள்ளி வளாகம் போதாதே, இடத்துக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு,
“அதான் மொட்டை மாடி இருக்குல்ல” என்கிறார் தைரியமும் நம்பிக்கையும் மிளிரும் கண்களுடன்.