

மாணவர் அரசியலில் இருந்து அசாம் கண பரிஷத்தில் இணைந்து, பிறகு பாஜகவில் சேர்ந்து மத்திய அமைச்சராகி, தற்போது அசாமில் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டு உச்சத்தை அடைந்துள்ள சர்பானந்த சோனோவாலின் அரசியல் பயணம் திருப்பங்கள் நிறைந்தது.
புகார்கள் இல்லாத நேர்மையான பிம்பம், பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரியவர் என்ற தகுதிகளுடன் பாஜகவின் அசாம் முகமாக சோனோவால் முன்னிறுத்தப்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
2011-ல்தான் பாஜகவில் இணைந்தார் என்றபோதும், பல மூத்த தலைவர்களை விட்டுவிட்டு இவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டதில், கட்சியில் பலருக்கும் விருப்பமில்லை.
ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற சோனோவால் தலைமையில் தேர்தலைச் சந்தித்த பாஜ கூட்டணி, வடகிழக்கு மாநிலங்களில் முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.
சட்டவிரோத குடிபெயர்ந்தோரை தீர்மானித்தல் தொடர்பான ஐஎம்டிடி சட்டத்தை எதிர்த்து அரசியலில் களமிறங்கிய சோனோவால், அனைத்து அசாம் மாணவர் சங்கத்தில் (ஏஏஎஸ்யு) இணைந்து அதன் தலைவராக 1992-2000 காலகட்டத்தில் இருந்தார்.
சட்டப் படிப்பு படித்தவரான சோனோவால், அரசியலில் முக்கியத்துவம் பெற்ற வடகிழக்கு மாணவர் சங்கத்தின் தலைவராகவும் 1996-2000-ம் ஆண்டுகளில் பொறுப்பு வகித்தார்.
2001-ம் ஆண்டு அசாம் கண பரிஷத் அமைப்பில் இணைந்தார். 2001-ல் அக்கட்சி சார்பில் எம்எல்ஏவாக தேர்வானார்.
2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு, காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைசச்ர் பபன் சிங் கடோவரைத் தோற்கடித்தார். எனினும், 2009-ல் மீண்டும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு கடோவரிடம் தோல்வியடைந்தார்.