Published : 06 Apr 2016 10:18 AM
Last Updated : 06 Apr 2016 10:18 AM

வாக்காளர் வாய்ஸ்: பூத் வேலைக்கு ராணுவத்தினர்

இந்த வாரத்துக்கான தலைப்பு



குறுக்கீடுகள் இன்றி, தேர்தலை மேலும் செம்மையாக நடத்துவதற்கு வசதியாக, தேர்தல் ஆணையத்துக்கு வேறென்ன அதிகாரங்கள் கொடுக்கலாம்? தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம்?

நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 என்ற எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.



தணிகாச்சலம், ஆதம்பாக்கம்

100 சதவீதம் வாக்குப் பதிவுக்கான விழிப்புணர்வை படித்தவர்களிடமும், நடுத்தர மக்களிடமும் தேர்தல் ஆணையம் ஏற்படுத்துவதில் எந்தப் பயனும் இல்லை. முன்பெல்லாம் முதியோர்களையும், கிராமப்புற மக்களையும் வாக்குப்பதிவுக்காக ஏதாவதொரு கட்சியினர் வாக்குப்பதிவு மையத்துக்கு அழைத்துச் செல்வர். தற்போது அவ்வாறு அழைத்துச் செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதால், முதியோர் ஓட்டுப்போடச் செல்ல சிரமப்படுகிறார்கள். எனவே மூத்த குடிமக்களின் வாக்குகளையும் முழுமையாக பதிவு செய்ய தேர்தல் ஆணையமே வாகனங்களை ஏற்பாடு செய்து அழைத்துச் செல்ல வேண்டும்.



மகேந்திரன், போரூர்

தேர்தல் வாக்குறுதிகளில் டிவி, பிரிட்ஜ் போன்ற இலவசங்கள் தருவதாக கட்சிகள் அறிவிக்க அனுமதிக்கக் கூடாது. ஓட்டுக்கு பணம் தருவது எவ்வாறு தவறோ, அதேபோன்றது தான் தேர்தலில் வெற்றிபெற்றால் இலவசப் பொருட்களைத் தருவேன் என அறிவிப்பதும். எந்தக் கட்சியும் தாங்கள் இலவசப் பொருட்களைத் தருவோம் என அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையம் கட்டாயமாக தடை விதிக்க வேண்டும். இதை செய்தாலே நிறைய விமோச்சனங்கள் வர வாய்ப்புள்ளது.



பெயர் தெரிவிக்க விரும்பாத வாசகர்

தேர்தல் ஆணையம் பூத் வேலைகளுக்கு ஆசிரியர்கள் போன்ற சாதுக்களைப் பயன்படுத்தாமல், ராணுவத்தினர் போன்ற கடுமையான முகத்தோற்றம் கொண்டவர்களைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் வாக்களிக்க வருபவர்கள் அமைதியாக வாக்களித்து விட்டு செல்வர். விதை விதைப்பதோடு விட்டுவிடாமல் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களை தொடர்ந்து கண்காணிக்கும் பொது அமைப்பாக செயல்பட வேண்டும். சில அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக செயல்படும் மாவட்ட ஆட்சியர்களை நீக்கிவிட்டு, உயர் ராணுவ அதிகாரிகளை மாவட்ட தேர்தல் ஆணையர்களாக நியமிக்க வேண்டும்.



ஜவஹர், முகலிவாக்கம்

தேர்தல் ஆணைய அதிகாரியாக சம்பந்தப்பட்ட மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிப்பது கண்டிக்கத்தக்கது. அவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட அரசுக்கு ஆதரவாகவே பணியாற்றி இருக்கிறார்கள் என்பதை கடந்த ஆண்டுகளில் பார்த்திருக்கிறோம். மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்படு பவர் வேறு மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி யாகவோ அல்லது வேறு நேர்மையான அதிகாரியாகவோ தான் இருக்க வேண் டும். ஐஏஎஸ் அதி காரி யைத்தான் நியமிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கக் கூடாது.



ஜெயபாலன், பெருங்களத்தூர்

குறுக்கீடுகள் இன்றி தேர்தல் நடைபெற வேண்டுமென்றால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே அந்த மாநிலத்தின் அதிகாரம் ஆளுநரின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். ஆளுநரின் கட்டுப்பாட்டுக்கு வந்தால்தான் தேர்தல் ஆணையமும், அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்பட முடியும். எனவே தேர்தலை நியாயமாக நடத்த, தேர்தல் நடத்தப்படும் மாநிலங்களில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும்



சேதுபதி, தாம்பரம்

ஒவ்வொரு தேர்தலின் போதும், வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் வாக்காளர்களாக இருப்பவர்கள் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவதும், வாக்காளர்களாக இல்லாதவர்களை பட்டியலில் சேர்ப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநகராட்சி, நகராட்சியில் இறந்தவர்களுக்கு இறப்புச் சான்று வழங்கும்போதே, வாக்காளர் அடையாள அட்டையை அவசியம் கொண்டு வர வேண்டுமெனக் கூறி, இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இறந்தவர்களின் உறவினர்கள் வந்து பெயர் நீக்கத்துக்கு விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்ப்பது தவறு.

தேர்தலில் ஒரு வேட்பாளர் பெறும் வாக்குகளின் எண்ணிக்கையில் குளறுபடி இருந்தாலோ, அவர் முறைகேடு செய்திருப் பது கண்டறியப்பட்டாலோ இரண்டாமிடத் தில் இருப்பவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும். நீதிமன்றத்துக்கு சென்றால் இழுபறி, தேவையற்ற செலவுகள் ஏற்படும்.



தினேஷ், அயனாவரம்

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்பவர்கள் கையும் களவுமாக சிக்கி னால், வழக்குப்பதிவு செய்வதை தவிர்த்து ‘ஸ்பாட் பனிஷ்மென்ட்’ முறையில் உடனுக்கு டன் கடுமையான தண்டனை கொடுக்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டும். ஒரு தொகுதியில் எந்த கட்சியின் பிரதிநிதிகள் பணம் விநியோகித்து அதிகளவில் சிக்குகிறார்களோ, அந்த கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை, வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும். தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தொகுதிக்குமான தேர்தல் நடத்தும் அலுவலர்களை நேர்மையானவர்களாக, கண்டிப்பானவர்களாக நியமித்தால், தேர்தல் முறைகேடுகளை தவிர்த்து விட முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x