Published : 27 Apr 2016 12:07 PM
Last Updated : 27 Apr 2016 12:07 PM

அன்பாசிரியர் 17 - ஆனந்த்: உளவியல் ஊக்கம் தரும் ஆசான்!

விகடன் டாப் 10 மனிதர்கள் விருது, கலாமின் காலடிச் சுவட்டில் இணைந்த முதல் 10 இளைஞர்களில் ஒருவர், தேசிய அளவிலான டிசைன் ஃபார் சேஞ்ச் போட்டியில் தொடர்ந்து மூன்று வருடங்களாக, நான்கு விருதுகள், 'சமூக செயல்பாடுகளில் பள்ளிக் குழந்தைகள்' என்ற பெயரில், ஸ்பிரிட் ஆஃப் கம்யூனிட்டி விருது உள்ளிட்ட சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆனந்த்.

ஆசிரியர் வேலையைத் தேர்ந்தெடுத்தது ஏன்? அதற்கான பின்புலம் என்ன?

"அப்போது நான் ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் கணித ஆசிரியர் தினமும் ஒரு மாணவரை, நாற்காலி மேசையை ஒழுங்குபடுத்தி வைக்கச் சொல்வார். அன்று என் முறை. என்னால் மேசையை அசைக்கவே முடியாததால், நாற்காலியில் அமர்ந்துகொண்டே அதைத் துடைத்தேன். இந்த விஷயம் ஆசிரியருக்கு தெரியவர, அவர் அனைத்து வகுப்புகளுக்கும் என்னை இழுத்துச்சென்று அடித்தார். என்னால் மறக்கவே முடியாத தருணம் இது. எனக்கு ஏற்பட்ட வலி, இனி வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது; இதே நாற்காலியில் நான் அமர்ந்து என் மாணவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்று தோன்றியது. அதை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தேன்.

பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு இரண்டு வருடங்கள் தனியார் பள்ளியில் பணியாற்றினேன். 2010-ல் திருவாரூர் மாவட்டம் காளாச்சேரி மேற்கில், அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. மாணவர்களுக்கு விளையாட்டு முறையில், ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கிறேன். ஏதாவது ஒரு மாணவியை நிற்க வைத்து, அவர் என்ன செய்கிறார் என்பதைச் சொல்லச் சொல்லி, கற்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். தினசரி நடவடிக்கைகளையே வினைச்சொற்களாக எழுதி, ஐம்பது ஐம்பதாக பயிற்சி கொடுக்கிறேன். மாணவர்களுக்கு எழுத்துப் பாடமாக சொல்லிக் கொடுப்பதை விட, காட்சி வடிவில் கற்பிப்பது உதவியாக இருக்கிறது.

மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து நான் நிறையக் கற்றுக் கொண்டேன். முன்பெல்லாம் ஆங்கிலத்தில் எழுதவே மாணவர்கள் சிரமப்பட்டனர். ஆனால் இப்போது அவர்களால் நிச்சயம் ஆங்கிலம் பேச முடியும். மாணவர்கள் எல்லோருக்கும் 600 வினைச்சொற்கள் (verbs) தெரியும். பொதுவாக 900 வினைச்சொற்கள் தெரிந்தால் சரளமாக ஆங்கிலம் பேச முடியும் என்று கருதப்படுகிறது. எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பை முடித்துவிட்டு உயர் வகுப்புகளுக்குப் போனவர்கள், அங்கே 6 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

மேடைக்கூச்சம் போக்கிய முகமூடி

போட்டிகளில் கலந்துகொள்ள மாணவர்களிடையே மேடைக் கூச்சத்தை போக்க வேண்டியிருந்தது. அதனால் தன்னம்பிக்கை முகமூடி ஒன்றைத் தயாரித்தோம். முகம் போல மண்ணில் அச்சு செய்து, அதன்மேல் காகிதத்தை அடுக்கி, முகமூடி ஒன்றைத் தயாரித்தோம். அதை அணிந்து கொண்டு உரக்கப் பேசிப்பழகி, மாணவர்கள் மேடை பயத்தை போக்கிக் கொண்டனர். குஜராத்தில் நடந்த தேசிய அளவிலான டிசைன் ஃபார் சேஞ்ச் போட்டியில், மூவாயிரம் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் 2013-ல் இருந்து 2015 வரை தொடர்ந்து மூன்று வருடங்கள் வென்றோம். கழிவறையைப் பயன்படுத்துவது, பால்வாடிப் பள்ளியின் மகத்துவம், தற்கொலைத் தடுத்து நிறுத்துங்கள் உள்ளிட்டவைகளில் களப்பணி செய்து நான்கு விருதுகளை வென்றோம்.

தற்கொலையைத் தடுத்த விழிப்புணர்வு

தெரு நாடகங்கள் நடத்தினோம். தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்களின் குழந்தைகள் ஆதரவற்று, தெருக்களில் நிஜமாகவே பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை நடித்துக் காட்டினோம். இது அவர்களின் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இளைஞர்களின் உதவியோடு பொதுமக்களுக்கு கவுன்சலிங் கொடுத்தோம். ஆண்டுவிழா நாடகங்கள் நடத்தப்பட்டு, அதில் விழிப்புணர்வு குறித்து விளக்கப்பட்டது. கிராமத்தினர் என்பதால் மக்கள் பெரும்பாலும் காட்டு வேலைக்குப் போயிருப்பார்கள். அப்படி அவர்களை பார்க்க முடியாமல் போனால், நேரடியாக வயல்களுக்கே சென்று பேசியிருக்கிறோம்.

எங்கள் மாணவர்கள் மூன்று சமயக் கடவுள்களைப் போலவும் வேடமிட்டு, குரான், பைபிள், கீதையை எடுத்துக் கொண்டு அதில் இருக்கும், 'தற்கொலை செய்யக் கூடாது' என்ற வாக்கியங்களை வீடுவீடாகச் சென்று படித்தனர். மக்களின் மன அழுத்தத்தை போக்கும் விதத்தில் அவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தினோம். பெண்களுக்கு சுயதொழில்களைக் கற்றுக் கொடுத்தோம். மாதமொரு முறை பேரணி நடத்தினோம்.

இந்த கிராமத்தில் சுமார் 1800 பெரியவர்கள் இருக்கிறார்கள். 2011-க்கு முன்பு வரை, தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. நிகழ்ந்த மரணங்களில் பாதிக்கும் மேலானவை தற்கொலையால்தான் ஏற்பட்டன. 2011-ன் பிற்பாதிக்குப் பிறகு, இதுவரை எந்தவொரு தற்கொலையும் நடக்கவில்லை.

தற்கொலையைத் தடுக்கும் எண்ணம்

என் அம்மா, அப்பா இருவரும் நான் சிறுவனாக இருக்கும்போதே இறந்துவிட்டனர். சில நாட்களுக்குப் பிறகு என்னுடைய ஆத்ம நண்பன் ஒருவன் என்னுடன் பேசுவதைத் தவிர்க்க ஆரம்பித்தான். என்னவென்று கேட்டால், பெற்றோர் இல்லாத பையனோடு சேர்ந்தால் கெட்டுப் போய்விடுவாய் என்று அவனின் அம்மா சொன்னதாகச் சொன்னான். அப்போது எனக்கு ஏற்பட்ட காயம் இன்னும்கூட முழுமையாக ஆறவில்லை. இந்த நிலை மற்ற குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்று நினைத்தேன். அதனால்தான் இதில் முழுமூச்சுடன் இறங்கினேன்.

பலம்

நிச்சயமாக என்னுடைய மாணவர்கள்தான். நான் அவர்களிடமிருந்து 80% எதிர்பார்த்தால், 150% வேலை செய்கிறார்கள். என்னுடைய எல்லா வெற்றிகளுக்கும் அவர்கள்தான் காரணம். டெல்லியில் சமூக செயல்பாடுகளில் பள்ளிக் குழந்தைகள் என்ற தலைப்பில், ஸ்பிரிட் ஆஃப் கம்யூனிட்டி விருதுக்காக விண்ணப்பித்தோம். 4970 பள்ளிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், மூன்று பள்ளிகள் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகின.

இறுதிப் போட்டியில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு சிபிஎஸ்சி பள்ளி, கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பன்னாட்டுப் பள்ளியோடு, எங்கள் பள்ளியும் தகுதி பெற்றது. மற்ற இரண்டு பள்ளிகளிலும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ள, எங்கள் பள்ளியிலிருந்து ஏழாவது, எட்டாவது படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மாணவர்களின் செயல்திட்டத்துக்கு 70 மதிப்பெண்களும், நேர்காணலில் 30 மதிப்பெண்களும் வழங்கப்படும். தற்கொலை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை எங்களின் செயல்திட்டமாக ஆவணப்படுத்தி இருந்தோம். அவர்கள் கற்றிருந்த ஆங்கிலம் நேர்காணலுக்கு உதவியது. லீலா, விஷாமுகில், திவ்யா, சேதுபதி ஆகிய நான்கு மாணவர்கள் தைரியத்துடன் நேர்காணலில் கலந்து கொண்டு பேசி, முதல் பரிசையும் பெற்று வந்தனர்.

எதிர்கால திட்டங்கள்

கற்பித்தலோடு, பள்ளியின் சூழலையும் மேம்படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. முதலில் பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும். தண்ணீர் வசதியை அதிகப்படுத்த வேண்டும். முறையான கழிப்பறைகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும். பள்ளியைச் சுற்றிலும் வீடுகள் நிறைந்திருக்கின்றன. சுற்றுச்சுவரின் உயரம் மிகவும் குறைவாக இருப்பதால், மாணவர்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டுகின்றனர். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஆசிரியர்களாலேயே அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை.மாணவிகளின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். சுற்றுச்சுவரை எழுப்பி, பள்ளியின் சுற்றுச்சூழலையும் மாணவர்களின் மனச்சூழலையும் காக்க முன்வரும் கைகளுக்காக காத்திருக்கிறோம்!"

அன்பாசிரியர் ஆனந்த் கற்பிக்கும் பாடங்களின் காணொலி இணைப்பு: >ஆனந்த்

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >அன்பாசிரியர் 16 - சிலம்பரசி: பிளாஸ்டிக் மறுசுழற்சி வித்தகர்!


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x