Published : 23 Apr 2016 10:55 AM
Last Updated : 23 Apr 2016 10:55 AM

வாக்காளர் வாய்ஸ்: வாக்குக்கு பணமா?

இந்த வாரத்துக்கான தலைப்பு:

வாக்குக்காக பணமோ, ‘பரிசு’ பொருளோ அளிக்க அரசியல் கட்சிகள் தேடி வந்தால்... அவர்களை மக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஓட்டுக்கு ‘லஞ்சம்’ கொடுப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த சாமானிய மனிதர்களால் முடியுமா? அதிலுள்ள பிரச்சினைகள் என்னென்ன? நடைமுறையில் செயல்படுத்தக் கூடிய வகையில் யோசனைகளைச் சொல்லுங்கள்...

கீத்சேத்தி, சைதாப்பேட்டை

வாக்குக்கு பணமோ, பரிசுப் பொருளோ வழங்க வரும் அரசியல் கட்சியினரை நிராகரிப்பதாலோ, புகார் கொடுப்பதாலோ எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. மாறாக, அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு நமது விருப்பம்போல வாக்களிக்க வேண் டும். நாம் யாருக்கு வாக்களித்தோம் என் பது பணம் கொடுத்தவர்களுக்கு கண்டிப் பாக தெரியப்போவதில்லை. எனவே இவ்வாறு செய்தால் எதிர்காலத்தில் பணம் கொடுப்பவர் கள் தாங்கள் பணம் கொடுத்தாலும் மக்கள் ஓட்டு போடமாட்டார்கள் என்பதை உணர்ந்து பணம் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். அதன் பிறகு இதுபோன்ற தவறை கண்டிப்பாக செய்யமாட்டார்கள்.

பெயர் வெளியிட விரும்பாத வாசகர்

கடந்த தேர்தலின்போது அனைத்து பகுதிகளிலும் இரவு நேரங்களில் பணம் விநியோகம் செய்தனர். அதை அனைத்து கட்சிக்காரர்களும் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர். பணம் கொடுப்பதை வாங்கிக் கொள்வோம் என்ற மனநிலையில்தான் இருந் தார்கள். நிறைய பேர் தமக்கு கிடைக்க வில்லையே என்றும் இருந்தனர். இவர்கள் தவிர ஒரு சிலர் காவல்துறையினருக்கு போன் மூலம் புகார் செய்தால், காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து உள்ளூர் காவல் நிலையத்துக்கு இத்தகவலை தெரிவிக்கிறார்கள். உள்ளூர் காவல்துறை யினர் புகார் கொடுத்தவரிடம் போன் செய்து இதுகுறித்து விசாரணை செய்யும் நெருக்குதலை சமாளிக்க வேண்டியுள்ளது. உள்ளூர் காவல்துறையினருக்கும் அரசியல் கட்சியினருக்கும் தொடர்பு இருக்கும் நிலையில் புகார் அளித்தவரின் விவரம் சம்பந்தப்பட்ட கட்சியினருக்கு தெரியும் வாய்ப்பு உள்ளது. எனவே புகார் கொடுப் பவர்களைப் பற்றிய விபரம் உள்ளூர் காவல் துறையினருக்கு தெரியாத அளவுக்கு ரகசியம் காக்கப்பட்டால்தான் பணம் கொடுப்பவர்கள் மீது வாக்காளர்கள் புகார் தெரிவிக்க முன்வருவார்கள்.

மகேந்திரன், போரூர்

வாக்குக்கு பணம் கொடுக்கும் வேட்பா ளர்கள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களல்ல. நம்மைச் சார்ந்தவர் கள்தான். நம் உறவினர்களாக இருப்பார் கள் அல்லது சமூகத்தைச் சேர்ந்தவர் களாக இருப்பார்கள் அல்லது நமது பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார் கள். இவர்களைத்தான் வேட்பாளர் களாக அரசியல் கட்சிகள் அறி விக்கின்றன. வேட்பாளர் களின் நேர்காணலின் போது அரசியல் கட்சிகள் கேட்கும் முதல் கேள்வியே உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும், கட்சிக்கு எவ்வளவு தருவீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். வேட்பாளரின் நேர்மை, நல்லவரா, சேவை செய்யக்கூடியவரா என்றெல்லாம் பார்ப்பதில்லை. ஆகவே இத்தகைய சூழ்நிலையில் வேட்பாளர்கள் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். வேட்பாளர்கள் ஏழை களாக இருந்தாலும் பரவாயில்லை.

பணம் கொடுக்க முடியாதவர்களாக இருந் தாலும் பரவாயில்லை. அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை. நல்லவர்களா, நாண யமானவர்களா, நேர்மையானவர் களா என்பதை அளவுகோலாக வைத்து வாக்களிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கட்சிகளும் நல்ல வேட்பாளர்களாக நிறுத் தும். பணம் கொடுத்தாலும் குற்றவாளி வேட்பாளர்களுக்கு வாக்குகள் கிடைக்காது என்பதால் அவர்கள் போட்டியிட மாட்டார் கள். நல்லவர்கள் நிற்பார்கள். நல்லவர்களே வெற்றி பெறுவார்கள்.

ஆர்.கலா, புரசைவாக்கம்

ஓட்டுப்பதிவு நாள் நெருங்கி யதும் வாக்காளர்களைத் தேடி அரசியல் கட்சியினர் பணம், பொருள் ஆகியவற்றுடன் வருவது வாடிக்கையாகி வருகிறது. பலம் பொருந்தியவர்களாக இருக்கும் அரசியல் கட்சியினரை, தனி மனிதர்களாக யாரும் எதிர்க்க முடியாது. எனவே, அவரவர் வீதியின் நுழைவு வாயிலில் மக்கள் சார்பில், ‘பணம் தந்து எங்களை அவமானப்படுத்த வேண்டாம், உங்களில் ஒருவருக்கு எங்கள் வாக்கு உண்டு’ என்று பேனர் கட்டி வைத்து விட்டால், பணத்துடன் வருபவர்கள், பேனர் கட்டப்பட்ட வீதிகளில் நுழைய தயங்குவர். மேலும், பணம் கொடுக்கும்போது, வீதி களைச் சேர்ந்தவர்கள் நம்மைப் பிடித்து, தேர்தல் அதிகாரிகளிடம் சிக்க வைத்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டு விலகிச் செல்ல வாய்ப்பு உண்டு. இது வாக்காளர் களாகிய நாமே நமக்கு ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய கவுரவ கட்டுப்பாடாக இருக்கும்.

பாலாஜி, சென்னை

ஓட்டுக்கு பணம் வழங்க வருபவர்களை அவர்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்தால் அவர்களை எளிதாக தேர்தல் ஆணையத்திடம் பிடித்துக் கொடுக்க முடியும். இதுதான் சிறந்த வழி. வீடியோ பதிவு இல்லாமல் எந்த ஒரு புகாரும் செல்லுபடியாகாது. வீடியோ பதிவு செய்தால் அவர்கள் தப்பிக்க முடியாது.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒரு கேள்வி வெளியாகும். அதற்கு நீங்கள் பதிவு செய்யும் யோசனைகள் அடுத்த சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். அடுத்த வாரத்துக்கான கேள்வி நாளை ஞாயிற்றுக்கிழமை வெளியாகும். அதற்கான உங்கள் யோசனைகளை கருத்துக்களை ஞாயிறு முதல் வெள்ளி வரை 044-42890002 என்ற எண்ணில் நீங்கள் பதிவு செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x