

ஸ்ரீஅண்ணாஸ்வாமி அய்யங்கார் வித்வத் சபா சார்பில் ஏப்ரல் 2,3,4 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள 71-வது த்ரிமதஸ்த வித்வத் ஸதஸ், ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி கோயில் சன்னிதி தெருவில் உள்ள வானமாமலை மடத்தில் நடைபெற உள்ளது.
சபா காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் 12.30. மணிவரையிலும், மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை மதத்ரய வேதாந்தங்களில் வாக்யார்த்தங்களும், யஜூர், சாம வேதம், திவ்ய பிரபந்தம் மற்றும் ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரங்களில் தேர்வுகளும், மாலை 4.30 மணி முதல் பிரபல வித்வான்களின் உபன்யாஸங்களும் நடைபெறும்.
ஏப்ரல் 3 ம் தேதி ஞாயிறன்று காலை 10 மணிக்கு மன்னார்குடி பெரியவா மஹாமஹோபாத்யாய ஸ்ரீத்யாகராஜமகி என்கிற ராஜூசாஸ்திரிகளின் த்விஸதாப்தி மஹோத்ஸ்வம் (200-வது அவதாரத் திருநாள்) சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் வி.ராமசுப்ரமணியன் தலைமையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 4 மணிக்கு ஸ்ரீ உ.வே. வித்யான் கனபாடி வேதபாஷ்யரத்னம் வடுவூர் தேசிகாச்சாரியார் சுவாமிகளின் ஜ்நாநதீபப்ரகாச என்ற நூலை நீதியரசர் வி.ராமசுப்ரமணியன் வெளியிடுகிறார்
வித்வத் சபை தோற்றம்
மன்னார்குடி ஸ்ரீஅண்ணாஸ்வாமி அய்யங்கார் வித்வத் சபா, காஞ்சி ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசிர்வாதத்தால் 1944 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய மூன்று தத்துவங்களைக் குறித்த ஆய்வுகள் நடைபெற வேண்டும் என்பதற்காக இச்சபை தோற்றுவிக்கப்பட்டது.
சபை தோன்றக் காரணம்
1944 ம் ஆண்டுக்கு முன்னர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மூன்று தத்துவங்களைக் குறித்த விசாரம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் தத்துவ விசார ஸதஸ் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று காஞ்சி மகாபெரியவா ஆர்வம் கொண்டார். ஸ்ரீஅண்ணாஸ்வாமி அய்யங்கார் வித்வத் சபையை மன்னார்குடியில் ஏ.ஸ்ரீநிவாச அய்யங்கார் தலைமையில் தொடங்கி வைத்தார். தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் இத்தகைய மூன்றுத் தத்துவங்களை ஒரே மேடையில் விவாதிக்கும் நிகழ்ச்சி எங்கும் நிகழ்ந்தது இல்லை என்றே சொல்லலாம்.
சபையின் வளர்ச்சி
மூன்று தத்துவங்களையும் விளக்கக் கூடிய அறிஞர்களான போலகம் ராம சாஸ்திரிகள், காஞ்சீபுரம் பிரதிவாதி பயங் கரம் அண்ணங்கராசாரியார், அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாதாசாரியார், மதுராந்தகம் வீரராகவாச்சாரியார் ஆகியோர் இந்த ஸதஸ்களில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சபா தொடங்கப்பட்டு 71 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ஸதஸ் நடைபெற்று வருகிறது. இந்த ஸதஸ்களில் கிருஷ்ண, யஜூர், சாம வேதங்கள், ஸ்ரீபாஷ்யம், வேதாந்தம், உபநிஷத்து, கீதை, வேதம், திவ்ய பிரபந்தம் ஆகியவை குறித்த தத்துவ ஆராய்ச்சியை இதில் கலந்து கொண்ட அறிஞர்கள் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று, அஹோபிலம், வானமாமலை, ஆண்டவன் ஆசிரமம், காஞ்சி சங்கர மடம், மைசூர் மகாராஜா குருவாக ஏற்ற மாத்து வர்களின் உத்திராதி மடம் ஆகியவற்றின் மடாதிபதிகள் ஒரே நேரத்தில் கலந்து கொண்டது இந்தியாவிலேயே இந்த சபா ஸதஸில் மட்டும்தான் எனலாம்.
200-வது அவதாரத் திருநாள்
அப்பய்ய தீட்சிதர் வம்சாவளியான மன்னார்குடி பெரியாவா என்கிற ஸ்ரீத்யாக ராஜமகி என்கிற ராஜூசாஸ்திரிகளின் 200 வது அவதாரத் திருநாள் இவ்வாண்டு ஏப்ரல் 3 ல் கொண்டாடப்பட உள்ளது. இந்நன்னாளில், நீதியரசர் வி.ராமசுப்ர மணியன் தலைமையில் சென்னை சமஸ் கிருத கல்லூரியின் முன்னாள் முதல்வர் திருமுல்லைவாயில் டாக்டர் கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகள், டாக்டர் மணி டிராவிட் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
தேர்வும் தகுதியும்
ஸ்ரீஅண்ணாஸ்வாமி அய்யங்கார் வித்வத் சபையினரால் மதத்ரய வேதாந்தங்களில் வாக்யார்த்தங்களும், கிருஷ்ண, யஜூர், சாம வேதம், திவ்ய பிரபந்தம் மற்றும் ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரங்களில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுகளில் தகுதி பெறுபவர்கள், திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கும் ஆயுட்கால மாதாந்திர உதவித் தொகை பெறவும் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.
சன்மானம்
ஸதஸிலும், தேர்விலும் கலந்து கொள்பவர்களுக்கு சன்மானம், போக்கு வரத்து ஆகியவற்றுடன் மூன்று நாட் களுக்கு உணவு உறைவிடம் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நல்ல காரியத்தை தொடங்கி நடத்தி வைத்தவர் காஞ்சி மகா பெரியவா ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்தான் என மேற்கண்ட விவரங்களை மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்குத் தெரிவித்தார்.