Published : 21 Mar 2016 02:33 PM
Last Updated : 21 Mar 2016 02:33 PM

அன்பாசிரியர் 15 - செந்தில்: 15 கிராமங்களின் நம்பிக்கை ஆசான்!

தமிழக தொடக்கக்கல்வித் துறையின் சிறந்த பள்ளிக்கான விருது, நாமக்கல் மாவட்டத்தின் முன்மாதிரி பள்ளிக்கான விருது, தனியார் பள்ளிகளை விட்டுவந்து ஆர்வத்துடன் படிக்கும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆரம்பித்த சில நாட்களில் அட்மிஷன் முடிந்துவிடும் அரசுப்பள்ளி, மாணாக்கர்களை உலக சாதனையாளர் பக்கத்தில் இடம்பெறச் செய்தது, கராத்தே போட்டியில் மாநிலத்தில் முதல் பரிசு பெற்ற பள்ளி, மாவட்ட அளவில் நடைபெறும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான, தகுதித் தேர்வில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக முதலிடம்... இத்தனை பெருமையையும் பெற்ற பள்ளி, நாமக்கல்லைச் சேர்ந்த மலையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் இந்த அத்தியாயத்தின் அன்பாசிரியர் சு.செந்தில்.

புதிய தலைமுறையின் சிறந்த ஆசிரியர் விருது, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சிறந்த ஆசிரியர் விருது, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் நாமக்கல் மாவட்ட முன்மாதிரி ஆசிரியர் விருது உள்ளிட்டவைகளுடன் அடக்கமாகப் புன்னகைக்கிறார்.

தன் பணி குறித்து என்ன சொல்கிறார்?

"சின்ன வயதில் இருந்தே எனக்குக் கற்றுக் கொடுக்கும் ஆர்வம் இருந்தது. பள்ளியில் வகுப்புத் தலைவனாக இருந்ததால், இயல்பாகவே தலைமைப் பண்பு இருந்தது. அதனால் ஆர்வத்துடனேயே ஆசிரியர் பயிற்சிக்கு சேர்ந்தேன். அருகில் டியூஷன் எடுப்பவருடன் இணைந்து பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தேன். அதில் கிடைத்த பணம் படிப்புச்செலவுக்கு உதவியாக இருந்தது.

1996-ல் ஏற்காடு, கரடியூரில் முதல் பணி கிடைத்தது. மலைவாழ் கிராமம், பாதுகாப்பு குறைவு ஆகியவற்றால், பள்ளிக்கு மிகவும் குறைவான மாணவர்களே வந்தனர். மாணவர்களின் வழித்துணைக்கு ஆயாம்மா ஒருவரை ஏற்பாடு செய்தோம். அங்கே இருந்த குழந்தைத் தொழிலாளர்களிடம் பேசி அவர்களையும் படிக்க வைத்தோம்.

அதிர்ச்சியைக் கொடுத்த அரசுப்பள்ளி

1999-ல் மற்றொரு பள்ளிக்கு இடம் மாறுதல் கிடைத்தது. அங்கிருந்து 2000-வது ஆண்டில் மலையம்பாளையம் கிராமத்துக்கு வந்து சேர்ந்தேன். பள்ளியைக் கண்டதும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பள்ளிக்கு வரும் குழந்தைகள், பதிவேட்டைவிட கால்வாசிக்கும் குறைவாக இருந்தனர். ஆதிதிராவிடர்கள் மட்டுமே வசிக்கும் அந்த ஊரில், அனைவருமே வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள விவசாயத் தொழிலாளர்கள். அதனால் அங்கே கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் பின்தங்கி இருந்தது.

பள்ளியின் பழைய ஆவணங்களைப் புரட்டிப் பார்த்தேன். 1975-ல் ஆரம்பிக்கப்பட்ட அத்தொடக்கப் பள்ளியில், 2000 வரை மொத்தம் 258 பேர் படித்திருக்கின்றனர். அதில் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 46 பேர் மட்டுமே. பத்தாவது முடித்தவர்கள் 7 பேர்; ஒருவர் மட்டுமே பட்டப்படிப்பு படித்திருந்தார். 1995-ல் இருந்து, 5 ஆண்டுகளாக அங்கு ஆதிதிராவிட மாணவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்தனர். குழந்தை தொழிலாளர், குழந்தைத் திருமணம், வறுமையால் தற்கொலை, போதிய சுகாதார வசதி இல்லாததால் அதிகமான இறப்பு விகிதம், மூடப்பழக்கங்கள், மது அருந்துவது, புகை பிடிப்பது, இதனால் உடல் ஊனமுற்ற குழந்தைகள் அதிகம் பிறப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் மிகவும் அதிகமாக இருந்தது.

இந்தியாவின் எதிர்காலமான இளைஞர்களின் வளர்ச்சிக்கு வித்திடுவது அவர்களின் தொடக்கக் கல்விதான். அதை, எந்த சமரசமும் இல்லாமல் தரமாகக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். பத்தாம் வகுப்பு முடித்திருந்தவர்களைக் கூப்பிட்டுப் பேசினோம். கல்வியின் முக்கியத்துவத்தை முதலில் அவர்களுக்கு உணர்த்தி, மற்ற பெற்றோர்களின் வீட்டுக்கு அவர்களை அழைத்துச் சென்றோம். விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தினோம்.

மாணவர்களின் பெற்றோர்களைக் கொண்டு சுற்றுச்சூழல் மன்றம் அமைத்தோம். மழை வளம் பெருக, குப்பைகளைப் பிரித்துப் போட, மரக்கன்று நட, ப்ளாஸ்டிக் கழிவுகளைத் தவிர்க்க என அவர்களும் ஆர்வமாய் எங்களுடன் இணைந்தார்கள். உயிர்களைத் துன்புறுத்தக்கூடாது என்ற கொள்கையைக் கொண்டிருக்கிறோம். என்னுடைய 225 மாணவர்களும் புலால் உண்ண மாட்டார்கள்.

மாற்றங்களின் ஆரம்பம்

இப்போது குழந்தை தொழிலாளர் முறை, குழந்தை திருமணம், இடைநிற்றல் முழுவதும் நீக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் மட்டுமே படித்து வந்த நிலை மாறி, தற்போது பிற சாதி மாணவர்களும் இங்கே படிக்கின்றனர். மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கையெழுத்து பயிற்சி, சுற்றுச்சூழல் மற்றும் கல்வி விழிப்புணர்வு, நிலம் நீர், காற்று, மாசுபடுதல், பூமி வெப்பமயமாவதை தடுத்கும் பேரணி, அறிவியல் கண்காட்சி உள்ளிட்டவை தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

தன்னம்பிக்கையை உயர்த்தும் வகையில், தினமும் மாணவர்களுக்கு மேஜிக்குகளை சொல்லிக் கொடுக்கிறோம். வகுப்பு இடைவேளைகளில் புதிர்களைக் கொடுத்து விடுவிக்கச் சொல்வோம். மாணவர்களின் ஐக்யூ வளர்ச்சிக்காக சொல்லகராதிகளை வாசிக்கச் செய்கிறோம். பள்ளியில் தரமான கல்வியுடன், ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சியான கராத்தே, யோகா, சிலம்பு, பரதநாட்டியம், இசை, ஓவியம், ஆங்கிலம், நன்னடத்தை, செஸ், கேரம் போன்றவைகளுக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. உடல்நிலை பாதிக்கப்படும் மாணவர்களுக்கு, அருகில் கிளினிக் வைத்திருக்கும் இரு மருத்துவர்கள் மூலம் மருத்துவ வசதியும் அளிக்கப்படுகிறது.

உள்ளூர்க் குழந்தைகள் மட்டுமே படித்து வந்த பள்ளியில், தற்போது சுற்றியுள்ள 15 கிராமங்களில், சுமார் 15 கி.மீ. தொலைவிலிருந்து வேன், ஆட்டோ வைத்து மாணவர்களை இப்பள்ளிக்கு அனுப்புகின்றனர். 2000-ம் ஆண்டில் 43 மாணவர்கள் மட்டுமே படித்த எங்கள் தொடக்கப் பள்ளியில் இப்போது 225 மாணவர்கள் படிக்கின்றனர். அதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து வந்தவர்கள்" என்கிறார் அன்பாசிரியர் சு.செந்தில்.

இடப்பற்றாக்குறை

"அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளியை விரிவுபடுத்த, நிதி கிடைத்துவிட்டது. ஆனால் கட்டிடம் கட்டத் தேவையான இடம் இல்லை. 80 மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும் பள்ளியில் இப்போது 225 பேர் படிக்கிறார்கள். தொலைக்காட்சி, கணினி உள்ளிட்ட தொழில்நுட்பத்தை மாணவர்களிடையே மேம்படுத்த, இடவசதி இல்லாதது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்தால் அருகில் இருக்கும் நடுநிலைப்பள்ளிக்கு எங்கள் பள்ளியை மாற்றிக் கொள்ள முடியும். அல்லது வேறு எங்காவது பள்ளிக்கு இடம் கிடைத்தாலும் மகிழ்ச்சிதான்!" என்பவரின் கண்களில் பொங்கி வழிகிறது நம்பிக்கையும், உற்சாகமும்!

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

அன்பாசிரியர் செந்தில் அவர்களின் தொடர்பு எண்: 9790411900

முந்தைய அத்தியாயம்: >அன்பாசிரியர் 14 - பார்வதி ஸ்ரீ: இணையத்தில் தமிழ் வளர்க்கும் ஆசிரியர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x