

சென்னை எழும்பூரில் உள்ள கெங்கு ரெட்டி சுரங்கப் பாதையில், அருகில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியிலிருந்து தொடர்ந்து கழிவுநீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சாலையில் வாகனத்தில் செல்வோர் மீதும் கழிவுநீர் விழுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே சுரங்கப் பாதையில் கழிவுநீர் திறந்து விடப்படுவதை தடுக்க வேண்டும்.
- சு.சிற்றரசன், மாங்காடு.
பழுதான சாலையால் அவதி
தியாகராயநகர் ஹபிபுல்லா சாலையில் குடிநீர் வாரியம் சார்பில், பழுது பார்ப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பணி முடிந்த நிலையில் சாலை முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த சாலை போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை. அங்குள்ள வீடுகளில் வசிப்போர், கார்களை சாலைக்கு கொண்டுவர முடியவில்லை. அதனால் அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
- டி.ராஜ்குமார், தியாகராயநகர்.
உளுந்து, துவரம் பருப்பு பற்றாக்குறை
தரமணி கானகம் நியாய விலைக் கடையில் மாதந்தோறும் 10-ம் தேதிக்குள் சென்றால்தான் உளுந்து மற்றும் துவரம் பருப்பு கிடைக்கிறது. மற்ற நாட்களில் கிடைப்பதில்லை. கடைகளுக்கு பருப்பு வகைகள் குறைந்த அளவே ஒதுக்கீடு செய்யப்படுவதால், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்க முடியவில்லை என்று ஊழியர்கள் பதில் அளிக்கின்றனர். எனவே பருப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
- ஆண்ட்ரூ, தரமணி.
தெருவில் நிறுத்தப்படும் வாகனங்கள்
மந்தைவெளி ராமகிருஷ்ணாநகர், 4-வது தெருவில் 3 பள்ளிகள் உள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து செல்கின்றனர். நெரிசல் மிகுந்த இந்த தெருவில் சுற்றுலா நிறுவனங்கள், தங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளன. இதனால் இந்த தெருவில் நெரிசல் மேலும் அதிகமாகிவிட்டது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவித்தும், வாகனங்கள் அகற்றப்படவில்லை. அந்த கார்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.கஜேந்திரன், மந்தைவெளி.
அனகாபுத்தூர் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
காஞ்சிபுரம் மாவட்டம், அனகாபுத்தூர் நகராட்சியில், கரிகாலன் நகரில், வெள்ளத்துக்கு பிறகு, கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது. அனகாபுத்தூர் மாநகராட்சியிடம் முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், கழிவுநீர் இயல்பாக வெளியேறவில்லை. இதனால் இப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. துர்நாற்றமும் வீசுகிறது. எனவே கழிவுநீரை அகற்ற, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.ரமேஷ்பாபு, அனகாபுத்தூர்.
எஸ்கலேட்டர் இயங்கவில்லை
அண்ணாநகர் மேற்கில், எஸ்பிஓஏ பள்ளி அருகில் உள்ள நடை மேம்பாலத்தில் எஸ்கலேட்டர் இயங்கவில்லை. அங்கு இரவு நேரங்களில் மின் விளக்குகளும் எரிவதில்லை. இதனால் சாலையை கடக்க முயலும் குழந்தைகளும், முதியவர்களும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே, எஸ்கலேட்டரை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வாசகர், அண்ணாநகர்.
சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?
மயிலாப்பூரில் பல்வேறு சாலைகளில் நடைபாதைகளை அகலப்படுத்தும் பணிக்காக சாலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளன. இப்பணி முடிக்கப்படாததால், சாலையெங்கும் புழுதி பறக்கிறது. இதனால் சுவாசக் கோளாறும் ஏற்படுகிறது. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
- வாசகர், மயிலாப்பூர்.
குரோம்பேட்டை பகுதியில் எரியாத தெரு விளக்கு
குரோம்பேட்டை இந்திராநகர் 14-வது குறுக்கு தெருவில் தெரு விளக்குகள் எரிவதில்லை. அங்கு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. விளக்குகள் எரியாததால், பலர் நாய்க்கடிக்கு ஆளாகிறார்கள். மேலும் பெண்கள் இரவில் வெளியே செல்ல அச்சமாக உள்ளது. பலமுறை புகார் கொடுத்தும் பலன் இல்லை. அதனால் தெருவிளக்குகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி.ஆர்.பாபு, குரோம்பேட்டை.
அன்புள்ள வாசகர்களே.. ‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்: ‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... 044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம். |