

சென்னையில் கே.கே.நகர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், போரூர், ராமாபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார் கடைகளில் ஆவின் பால் பாக்கெட் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இதுதொடர்பாக ஆவின் நிறுவனத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆவின் பாலை, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்குள் மட்டுமே விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.பி.கோவர்த்தன், கே.கே.நகர்
மாடம்பாக்கத்தில் மாடுகள் தொல்லை
செம்பாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள மாடம்பாக்கம் சாலையில் மாடுகள் அதிக அளவில் படுத்துக் கிடக்கின்றன. சாலையிலேயே அவை சாணமிடுவதால், அதில் வாகனங்கள் வழுக்கி விபத்துக்குள்ளாகின்றன. மாடு வளர்ப்பவர்கள் பால் கறந்த பிறகு, மாடுகளை அவிழ்த்து விட்டுவிடுகின்றனர். இதனால் சாலையிலேயே திரியும் மாடுகள், பொதுமக்களுக்கு பல விதத்தில் இடையூறாக உள்ளன. இதை நகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்.
- வி.பாண்டியன், ராஜகீழ்ப்பாக்கம்
வடமேல்பாக்கத்துக்கு பஸ் வசதி வேண்டும்
மறைமலை நகர் அருகே உள்ள வடமேல்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளன. சுற்றுப்பகுதியில் உள்ள பல கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் அங்கு படிக்கின்றனர். ஆனால், அந்த ஊருக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். செங்கல்பட்டு அல்லது மறைமலை நகரில் இருந்து வடமேல்பாக்கத்துக்கு பேருந்து, சிற்றுந்து இயக்க வேண்டும்.
- வாசகர், சிங்கப்பெருமாள்கோவில்
நூலகத்தில் கழிவறை தேவை
சென்னை ஷெனாய் நகர் நூலகத்தில் உள்ள கழிப்பறையை, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். நூலகத்துக்கு படிக்க வரும் பொதுமக்கள் பயன்படுத்த ஊழியர்கள் அனுமதிப்பதில்லை. அதனால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் அவதிக்கு உள்ளாகின்றனர், எனவே அந்த நூலக கழிவறையை பொதுமக்களும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வாசகி, ஷெனாய் நகர்
நிலத்தடி நீரை வீணாக்கலாமா?
அனகாபுத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர் பகுதியில் பேரூராட்சி சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தில் தினமும் 10 ஆயிரம் லிட்டர் நிலத்தடி நீரை எடுத்து, சுத்திகரித்து, 2 ஆயிரம் லிட்டரை குடிக்கவும், 8 ஆயிரம் லிட்டரை கழிவாக கால்வாய்களிலும் விட்டுவிடுகின்றனர். இதனால் தினமும் 8 ஆயிரம் லிட்டர் நிலத்தடி நீர் வீணாகிறது. அதை வேறு வகையில் பயன்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி.ஆர்.ஸ்ரீதரன், அனகாபுத்தூர்
அரும்பாக்கத்தில் தெரு நாய் தொந்தரவு
எங்கிருந்தோ வந்த தெரு நாய் ஒன்று அரும்பாக்கம் மாங்காளி நகர் 2-வது தெரு பகுதியில் சுற்றி வருகிறது. இது அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களை விரட்டி வருகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுடன் சண்டையிட்டு, அவற்றை கடித்து காயப்படுத்துகிறது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றிவரும் நாயை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி.பகவத், அரும்பாக்கம்
பழுதான மின் கம்பத்தால் அச்சம்
பள்ளிக்கரணை மாணிக்கவாசகர் முதல் தெருவில் உள்ள மின் கம்பம் மிகவும் பழுதடைந்துள்ளது. அதனால் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழலாம் என்று அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக மின் வாரியத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த மின் கம்பத்தை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வாசகர், பள்ளிக்கரணை
கவனிக்கப்படுமா பீர்க்கங்கரணை?
பீர்க்கங்கரணை சக்தி நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மொத்தம் 198 குடும்பங்கள் உள்ளன. இங்கு மோட்டார் பழுது காரணமாக கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இங்கு வசிப்போர் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதிக்கு செல்வதற்காக அமைக்கப்பட்ட சாலை சீரமைக்கப்படவில்லை. தெரு விளக்கும் இல்லை. இப்பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
- சி.எஸ்.செல்வம், பீர்க்கங்கரணை
அன்புள்ள வாசகர்களே.. ‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்: ‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... 044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம். |