Published : 03 Feb 2016 12:35 PM
Last Updated : 03 Feb 2016 12:35 PM

அன்பாசிரியர் 13 - தாமஸ்: பிஞ்சு விரல்களுக்கு கலைத்திறன் புகட்டும் ஓவிய ஆசிரியர்!

ஓவியங்கள் வண்ணங்களின் கலவை மட்டுமல்ல. அவை மானுட எண்ணங்களின் பிம்பம்; உணர்வுகளின் வெளிப்பாடு; உலக மொழி; பேசாத கவிதை!

12 வருட ஆசிரிய வாழ்க்கையில் சுமார் 13 ஆயிரம் பரிசுகள், பெற்றோர்கள் வழங்கிய பாராட்டுப் பத்திரங்கள், மாநில அளவில் 7 பரிசுகள் ஆகிய அனைத்தையும் விட, தேசிய அளவில் தன் மாணவர்களைப் பரிசு பெற வைத்ததே தன் உண்மையான வெற்றி என்கிறார் அன்பாசிரியர் தாமஸ். அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியர் ஆக முடியாவிட்டாலும், தன் மாணவர்களை அரசுப்பணியில் அமர்த்தி இருக்கிறார்.

சென்னை - ராமாபுரத்தின் ராயலா நகரில் தன் வீட்டிலேயே மாலை வேளைகளில் ஓவிய வகுப்பு எடுக்கும் அன்பாசிரியர் தாமஸின் பயணம், இனி அவரின் வார்த்தைகளிலேயே...

"செய்யூர் பக்கத்துல வாழைப்பட்டுதான் எங்க கிராமம். என்னோட அப்பா, ஒரு தெருக்கூத்து கலைஞர். அதனாலேயே என்னமோ சின்ன வயசுலேர்ந்தே ஓவியம் மேல ஆர்வம் அதிகம். படங்கள் நல்லா வரைவேன் அப்படிங்கறதாலேயே பயாலஜி க்ரூப் எடுத்தேன். படத்தை விட, பாடத்து மேல ஆர்வம் வராததால ரொம்ப கம்மியான மார்க்தான் வாங்கினேன். ஓவியம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு என்னோட அண்ணாதான் எனக்குத் தெரியாமலேஓவியக் கல்லூரில சேர ஃபார்ம் வாங்குனாரு.

பள்ளியை முடிக்கற வரைக்கும், எனக்கு நட்ராஜ் பென்சிலை மட்டுந்தான் தெரியும். ஓவியம் வரையறதுக்கு எந்த பயிற்சியும் எடுக்காமத்தான் கல்லூரி தேர்வுல கலந்துகிட்டேன். அரசு ஓவியக் கல்லூரில இடம் கிடைக்கல. தனியார் கல்லூரிதான் கிடைச்சுது. என்னோட மூணு அண்ணாக்களுமே, நான் படிக்கறதுக்கு ரொம்ப ஆதரவா இருந்தாங்க. முதல் ஆண்டுல, வகுப்புலயே கடைசி ரேங்க் வாங்கினேன். கடைசி வருஷம் முதல் ரேங்க். இத ஏன் சொல்றேன்னா எல்லாத்துக்கும் பயிற்சியும், ஈடுபாடும்தான் முக்கியம்.

ஆசிரியராகக் காரணம்?

தொழில்முறை ஓவியரானா எக்கச்சக்கமா சம்பாதிக்கலாமேன்னு நிறைய பேரு கேட்டிருக்காங்க. ஆனா, எனக்கு மத்தவங்களுக்கு கத்துக்கொடுக்கத்தான் விருப்பம். இதுக்கு முக்கியமான காரணம், வெங்கட் சார்தான். எனக்கு வரைய சொல்லிக்கொடுத்த ஆசான் அவர். அவரால்தான் நான் ஆசிரியப்பணிக்கு வந்துருக்கேன்.

ஒரு முறை வெங்கட் சார், வகுப்புல வேப்ப மரத்தை வரைய சொன்னார். முதல் நாள் வரைஞ்சேன், 'சரியில்லை மாத்திட்டு வா'ன்னு சொன்னார். புதுசா வரைஞ்சு அடுத்த நாள் எடுத்துட்டு போனேன். 'இன்னும் சரியா வரல; மாத்திடு'ன்னார். இப்படியே பத்து நாள் போச்சு. எனக்கு ஒண்ணுமே புரில. எதிர்பாராத விதமா படத்தோட ஒரு இடத்துல கைபட்டு, இலை ஒண்ணு பாதி அழிஞ்சிடுச்சு. அதைப் பார்த்தவர், 'சபாஷ் இதுதான் ஓவியம்'னார். அப்போதான் எனக்குப் புரிஞ்சுது. ஆயிரம் ஏடுகள் சொல்ற கருத்தை ஒரு ஓவியம் உணர்த்தணும். 'பசுமை, மகிழ்ச்சின்னு நல்லதை மட்டுமே வரையறது ஓவியம் கிடையாது. மற்றவர்களின் கஷ்டம், வேதனை, வலி நமக்குப் புரியணும். அப்போதான் அவன் கலைஞன்' அப்படிங்கறதை சொல்லாமல் புரிய வச்சவர் வெங்கட் சார்.

இப்போ திங்கள் ஒரு பள்ளி, செவ்வாய் ஒரு பள்ளின்னு தினமும் ஒரு தனியார் பள்ளிக்குப் போய் ஓவியம் சொல்லிக் கொடுக்கறேன். சனி, ஞாயிறுல வீட்டுக்கு வரச்சொல்லி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும் முடியுது. எல்லா நிலைமைல இருக்கற சிறுவர்களும் வீட்டுக்கு வர்றாங்க. வசதியானவங்ககிட்ட மட்டும் ஃபீஸ் வாங்கிக்கறோம். ஓவியம் கத்துக்கற ஆசை இப்போ நிறைய பேருக்கு வந்துருக்கு, ஆனா உண்மையாவே அதுமேல ஈடுபாடோட வர்றவங்க இன்னும் குறைவாதான் இருக்காங்க.

ஒரு காலத்துல, 2 பேண்ட், சட்டையோட கையில பத்து ரூபாயோட வாழ்ந்துருந்துருக்கேன். ஆனா இன்னிக்கு இந்த நிலைமைல இருக்கேன்னா அதுக்கு என்னோட மாணவர்கள்தான் காரணம். எனக்கு என்னுடைய வேலைதான் எனக்கு சாமி. பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கறது மூலமா, 1 லட்சம் கலர் மிக்ஸிங்கை கத்துக்க முடிஞ்சுது.

பரிசுகள், பதக்கங்களைக் குவித்த ஓவிய மாணவர்கள்!

சான்றோன் எனக்கேட்ட ஆசான்

முன்னாடி வேலை பார்த்ததுக்கும், இப்போ பார்க்கறதுக்கும் நிறைய வித்தியாசம் ஏற்பட்டிருக்கு. அப்போ ஒரே பள்ளியில வேலை பார்த்தேன். இப்போ அஞ்சு ஸ்கூல்ல வேலை பாக்கறேன். பிள்ளைகளோட மனநிலையப் புரிஞ்சுகிட்டு, அதுக்கேத்த மாதிரி அவங்கள தயார்படுத்த முடியுது. முன்னாடியெல்லாம் போட்டிகளைப் பத்தி எதுவுமே தெரியாது. 2013-ல் தான், அவற்றைப் பத்தித் தெரிய வந்தது. அதுக்காக மாணவர்களைத் தயார்படுத்த ஆரம்பிச்சேன். கலந்துகிட்ட முதல் வருஷத்துலயே, மாநில அளவில் ஆறுதல் பரிசு வாங்கினோம். 2014-ல் மூன்றாவது பரிசு கிடைச்சுது. 2015-ல் மாநிலத்துலயே முதல் பரிசு. அதுவும் என்னுடைய மாணவர்களே இரண்டு பேர் அதைப் பகிர்ந்துக்கிட்டாங்க.

அந்த மாணவர்கள் சார்பா, எங்களையும் டெல்லிக்கு கூட்டிட்டு போனாங்க. மொத்தம் அஞ்சு நாள் டூர். தாஜ்மகால், செங்கோட்டை, குதுப்மினார், நாடாளுமன்றம்ன்னு டெல்லி முழுக்க சுத்திப் பாத்தோம். பொதுவா ஆசிரியர்கள் மாணவர்களை வெளியே கூட்டிட்டுப் போவாங்க. ஆனா இங்க என் மாணவர்கள் என்னை டெல்லிக்குக் கூட்டிட்டு போனாங்க. ஒரு ஆசிரியருக்கு இதை விடப்பெரிய பெருமை என்ன இருக்க முடியும்?

மாணவர்களை போட்டிகளுக்கு தயார்படுத்துவது பற்றி...

பென்சில் ஷேடிங், க்ரேயான்கள், ஆயில் கலர்கள், வாட்டர் கலர்கள், சார்கோல், வண்ணப்படங்கள்ன்னு எல்லா மாதிரியான படங்களையும் சொல்லிக் கொடுக்கிறோம். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறணும்னா, மாணவர்களுக்கு பொறுமையும் வேணும்; வேகமும் வேணும். அதே போல தரமும், சிந்தனையும் ரொம்ப முக்கியம். இவை எல்லாத்தையும் ஒருங்கிணைச்சாதான் வெற்றி பெற முடியும்.

வெற்றிக் கோப்பைகளுடன் ஓவிய மாணவர்கள்!

ஏழைக் குழந்தைகளுக்கு இந்த மாதிரி போட்டிகள்லாம் சோறு மாதிரி. பெரும்பாலான போட்டி அமைப்பாளர்கள் சைக்கிள், டிவி, ஃப்ரிட்ஜ் மாதிரி வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக் கொடுக்கறாங்க. போட்டிகள், அவங்க திறமையை சரியா வெளிப்படுத்தி, அங்கீகாரத்தையும் அளிக்குது. பரிசா வர்ற பணத்துல ஃபீஸ் கட்டி, பள்ளிக்கு போறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அதனாலயே விடாம போட்டிகள்ல கலந்துக்க ஆரம்பிச்சோம். பொறுமையும், திறமையும் இருக்கறவங்களை சரியா கண்டுபிடிச்சு கூர்தீட்டுனா போதும். அவங்களை எங்கியோ கொண்டு போயிடலாம். அந்த வேலையை முறையா, தொடர்ந்து செய்ய ஆசை.

ஒரு விஷயம் மட்டும் கடைசியா சொல்லிக்கிறேன். ஓவியம் மட்டும் இல்லாம, எந்தப் போட்டிகளா இருந்தாலும், தங்கள் குழந்தைகளை போட்டிகளுக்கு அனுப்பும்போது பெற்றோர்களும் ஆசிரியர்களும் உளவியல் ரீதியா கவனமா இருக்கணும். ஒரு மாணவரை பரிசு என்பது ஊக்கப்படுத்தும் அதேவேளையில், பரிசு கிடைக்காத நிலையில் தன்னம்பிக்கை இழந்திடும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஏற்ற முறையில் அணுகணும்" எனும் அன்பாசிரியர் தாமஸின் தொடர்பு எண்: 84388 82003

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >அன்பாசிரியர் 12 - விஜயலலிதா: பள்ளி பலத்தை 5-ல் இருந்து 246 ஆக உயர்த்திய தனித்துவம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x