நம்மைச் சுற்றி: போலி என்கவுன்ட்டர்

நம்மைச் சுற்றி: போலி என்கவுன்ட்டர்
Updated on
1 min read

அணைக்கும் கை

வடகிழக்கு மாநிலமான அசாம், மேகாலயத்தில் பிப்ரவரி 5-ல் 12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. இதுபோன்ற நிகழ்ச்சிகள் அறிவிக்கப்படும்போது, உல்ஃபா உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் தரப்பிலிருந்து மிரட்டல்கள் எழுவது வழக்கம். அசாமில் 2007-ல் நடந்த 33-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தது உல்ஃபா. ஆனால், இந்த முறை தெற்காசிய விளை யாட்டுப் போட்டிக்கு உல்ஃபா தரப்பிலிருந்து ஆதரவுக் குரல்கள் எழுந்திருப்பது பலரை ஆச்சரியப் படுத்தியிருக்கிறது. “இந்தப் போட்டிக்காக நமது அன்புக்குரிய குவாஹாட்டி மற்றும் ஷில்லாங் நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை மனமார வரவேற்கிறோம்” என்று அந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் அபிஜீத் அஸோம் தெரிவித்திருக்கிறார்.

தொடரும் அவலங்கள்

ரோஹித் வெமுலாவின் தற்கொலை மூலம், உயர் கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கவனத்துக்கு வந்திருக்கும் நிலையில், பிஹாரிலிருந்தும் இதே போன்ற அபயக் குரல்கள் எழுந்திருக்கின்றன. ஒடிஷாவின் புவனேஸ்வரத்தில் உள்ள ராஜதானி பொறியியல் கல்லூரியில் படிக்கும் 60 பிஹார் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகை வழங்கப்படாததால், கல்லூரியி லிருந்தும் விடுதியிலிருந்தும் அம்மாணவர்கள் வெளி யேற்றப்பட்டிருக்கிறார்கள். கல்வி உதவித்தொகையை வழங்குவதில் பிஹார் அரசு காட்டும் அலட்சியமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் ‘தலித் உதவித்தொகை திட்ட’த்தின் கீழ் 2014-ல் இக் கல்லூரியில் சேர்ந்தவர்கள். கல்விக் கட்டணத்தைச் செலுத்திய பின்னர்தான், கல்லூரிக்குள் மீண்டும் நுழைய முடியும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துவிட்டதால், அனைவரும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

போலி என்கவுன்ட்டர்

மணிப்பூரில் போலி என்கவுன்ட்டர் விவகாரம் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகத் தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றன. ‘சஞ்சித் மெய்தேய் (22) என்ற நிராயுதபாணி இளைஞரை காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் அகோய்ஜாம் ஜலாஜித் உத்தரவின்பேரில் சுட்டுக் கொன்றேன்’ என்று தௌனோஜாம் ஹெரோஜித் சிங் என்ற போலீஸ்காரர் இப்போது ஒப்புக்கொண் டிருக்கிறார். 2009 ஜுலை 23-ல் வீதியில் நடந்த அச்சம்பவத்தின்போது வீதியில் குழந்தையுடன் சென்ற ரபீனா என்ற இல்லத்தரசியும் குண்டுபாய்ந்து இறந்திருக்கிறார். மெய்தேயைத் தீவிரவாதி என்று பின்னர் முத்திரை குத்தினர். அவர் மருந்துக் கடையில் மருந்து வாங்கிக்கொண்டிருந்தபோது கொல்லப்பட்டிருக்கிறார். அப்போது உள்துறை அமைச்சகப் பொறுப்பு வகித்த இப்போதைய முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் பதவி விலக வேண்டும் அல்லது சோனியா அவரை விலக்க வேண்டும் என்று மணிப்பூர் மாநில பாஜக தலைவர் தௌனோஜாம் சாவோபா கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in