இனி என்னவெல்லாம் நடக்கும்?

இனி என்னவெல்லாம் நடக்கும்?
Updated on
1 min read

பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல், தேசிய அரசியலை அப்படியே புரட்டிப்போட்டுவிடாது என்றாலும், நிச்சயம் சில மாற்றங்களை உருவாக்கும். முக்கியமாக, நரேந்திர மோடி, ராகுல் காந்தி, நிதிஷ் குமார் மூவரிடத்திலும் சில முக்கிய மாற்றங்களை உருவாக்கும். என்னவெல்லாம் நடக்கலாம்?

நிதிஷ் குமார்

நிதிஷின் செல்வாக்கு அதிகரிக்கும். காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளுக்கும் பாஜகவை எதிர்கொள்ளும் குவிமையமாக நிதிஷ் இருப்பார். தேசிய அளவில் நரேந்திர மோடிக்குப் போட்டியாளராக அவர் உருவெடுக்கலாம். எனினும், லாலுவைச் சமாளிப்பது கடினம் என்பதால், தேசிய அரசியலுக்கு ஆசைப்பட்டு இப்போதைக்குத் தன் ஆற்றலை வீணாக்க மாட்டார் என்று நம்பலாம்.

நரேந்திர மோடி

மோடிக்கு எதிரான அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள பிஹார் தேர்தல் வழிவகுத்துவிட்டது. மேலும், அடுத்து தேர்தல்கள் நடக்கும் பல மாநிலங்கள் பாஜக ஆட்சி அமர வாய்ப்பில்லாத மாநிலங்கள் என்பதால், இனி மத்திய அரசில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதே மக்களிடம் பேசப்படும். மேலும், இடையிடையே வரும் தேர்தல் முடிவுகளும் சங்கடத்துக்குள்ளாக்கும். கட்சிக்குள்ளும் இனி அவர் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதற்கான சமிக்ஞைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. எதிர்க் கட்சிகளுக்குப் புத்துயிர் கிடைத்திருப்பதாலும், மாநிலங்களவைப் பெரும்பான்மை இனி இந்த ஆட்சி முடியும் வரை சாத்தியமற்ற கனவு என்பதாலும், ‘நானே ராஜா நானே மந்திரி’ அணுகுமுறை எடுபடாது. எல்லோருடனும் கலந்து பேச வேண்டிய சூழல் உருவாகும்.

ராகுல் காந்தி

அரசியல் அரங்கில் ராகுல் காந்தி மீது நம்பகத்தன்மை அதிகரிக்கும். மோடிக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையில் மாநிலக் கட்சிகள் உதவியுடன் பெரிய அணியை உருவாக்குவார். காங்கிரஸ் வலுவாக இல்லாத மாநிலங்களில் பிஹார் பாணியில் பின்னிருந்து இயக்கும் உத்தியை அவர் தொடரக்கூடும். அதேசமயம், காங்கிரஸ் பிரதான கட்சிகளில் ஒன்றாக இருக்கும் மாநிலங்களில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, மூத்த தலைகளுக்கு விடை கொடுக்கும் வைபவம் தொடரலாம். மேலும், காங்கிரஸின் தலைவராக விரைவில் பதவி உயர்வு பெறவும் இது வழிவகுக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in