Published : 25 Nov 2015 09:59 PM
Last Updated : 25 Nov 2015 09:59 PM

அன்பாசிரியர் 8 - நேசமணி: கணினி மூலம் தேர்வும் மதிப்பீடும்!

போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆவதில்லை; யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.

அன்பாசிரியர் நேசமணி, ஆசிரியர் பயிற்சியில் சேர ஆசைப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் போதாததால் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தவர். எதிர்பாராத விதமாக ஆசிரியர் பயிற்சிக்கு இடம் கிடைக்க, பொறியியல் படிப்பைக் கைவிட்டு ஆசிரியரானவர். தொழில்நுட்பத்தின் மேல் தீராத ஆர்வம் கொண்டவர். தகவல் மற்றும் தொலைதொடர்புக்கான தொழில்நுட்ப சாதனையாளர் விருது பெற்றவர். திருப்பூர் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வழங்கிய, 'சாதனை ஆசிரியர்' விருதுக்கு சொந்தக்காரர். செயல்வழிக் கற்றல், கணினிவழிக் கற்றல் என இரண்டையுமே பயன்படுத்திக் கற்பித்தலைச் சிறப்பிக்கும் ஆசிரியர்!

இனி நேசமணியின் சாதனைப் பயணம், அவரின் வார்த்தைகளிலேயே...

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியத்தில் சேனாபதி செட்டிபாளையத்தில் இருந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியரானேன். நான் வேலையில் சேர்ந்தபோது, அப்பள்ளி மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் நினைத்த நேரத்துக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். தண்ணீர் வசதி இல்லாதது பெரும்குறையாக சொல்லப்பட்டது.

பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் எல்லாம் ஒன்றிணைந்து பேசினோம். மாணவர்களிடம் பள்ளிக்கு நேரம் தவறி வருபவர்கள், அடுத்த நாள் தங்களுடைய பெற்றோரைக் கூட்டிவர வேண்டும் என்று அறிவுறுத்தினோம். மாணவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வர ஆரம்பித்தனர். நிதி திரட்டி, தண்ணீர் தொட்டி அமைத்தோம்.

வசமான இணையம்

எனக்கு கணினி மீது ஆர்வம் அதிகம். கணினி கற்க வகுப்பு எதுவும் போகவில்லை. தானாக கற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில், மடிக்கணினி வாங்கினேன். இணைய இணைப்பு வாங்கி, கூகிள், யூடியூப் என்று அடிப்படை விஷயங்களை அறிந்த பிறகு, பாட திட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்புகளைப் பார்க்கத் தொடங்கினேன். மெல்ல மெல்ல இணையம் என் வசமானது. படங்கள், காணொலிகள், அனிமேஷன் உள்ளிட்டவைகளைக் கொண்டு பாடம் கற்பிக்க ஆரம்பித்தேன்.

கணினி வழிக் கற்பித்தலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மெல்ல கற்பவர்கள் அனைவருமே கணினி மீது ஆர்வம் கொண்டவர்களாய் இருந்தனர். கணினியை இயக்கக் கற்றுக் கொண்டவர்கள், அதில் தட்டச்சு செய்யவும் கற்றுக் கொண்டனர். அடுத்த சில நாட்களில், கணினியில் தேர்வு என்று அறிவித்தேன். அதற்கு முன்பு வரை தேர்வு என்றாலே, பெரும்பாலான மாணவர்கள் விடுப்பு எடுக்கவே முயற்சிப்பார்கள். முதலில் ஆங்கிலக் கவிதைகளில் இரண்டு வரிகளையே தவறுகளோடு எழுதியவர்கள், கணினியை இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் படிக்க ஆரம்பித்தனர்.

சிறந்த தொழில்நுட்ப ஆசிரியர்

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னையில் நடத்திய கணினி வழிக் கற்பித்தல் கருத்தரங்கு, எனக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. 2014-ல் ஐ.சி.டி. சிறந்த தொழில்நுட்ப ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர் திலீப்பிடம் இருந்து நிறையக் கற்றுக் கொண்டேன்.

அடுத்த ஆண்டில் முதல் தகுதியுடன் அதே விருதைப் பெற்றேன். தனியார் நிறுவனம் ஸ்பான்சர் செய்த ஸ்மார்ட் கரும்பலகையில் வகுப்புகள் எடுக்கிறோம்.

கணினி வழி மதிப்பீடு

ஒரு கம்பியின் மூலம் கணினியும், ஸ்மார்ட் பலகையும் இணைக்கப்படும். இதனால் கணினியின் முழுக்கட்டுப்பாடும் ஸ்மார்ட் பலகையில் இருக்கும். அதைத் தொட்டு இயக்கி நமக்கு வேண்டிய செயல்களைச் செய்ய முடியும். கணினி மூலம் கற்பித்தலைத் தாண்டி, பாடங்களை மதிப்பீடு செய்ய ஆரம்பித்தேன்.

குறிப்பிட்ட எக்ஸல் பக்கத்தைத் திறந்தவுடன், பெயர் கேட்கும். அதைப்பூர்த்தி செய்தவுடன், பவர் பாயிண்ட் திறக்கும். அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலளித்தால் மட்டுமே, அடுத்த கேள்விக்குச் செல்லும். இதன்மூலம், மாணவர் சரியான விடையைத் தெரிந்துகொள்ளும் வரை, அடுத்த கேள்விக்குச் செல்ல முடியாது. அதே சமயம் முதலில் தெரிவு செய்யப்படும் பதிலில் இருந்துதான் மதிப்பெண் கணக்கிடப்படும். நண்பர் ஒருவர் இதற்கான நிரலை எழுதிக் கொடுத்தார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இத்திட்டம் மிகுந்த பயனை அளித்தது.

புரவலர் திட்டத்தில் எங்கள் புதுமை

அதைத் தொடர்ந்து புரவலர் திட்டத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் நேசமணி. பள்ளி ஆசிரியர்களோடு இணைந்து, ஊரின் முக்கியப் பிரமுகர்களிடம் பேசி, ஆரம்பத்தில் 60 பேராய் இருந்த புரவலர்களின் எண்ணிக்கையை 270 பேராக உயர்த்தியிருக்கிறார்.

இது குறித்துப் பேசியவர், "வட்டித்தொகையை வைத்து, பள்ளி வளாகம் முழுக்கவும் வைஃபை இணைப்பு கொடுத்திருக்கிறோம். தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்கள் அளித்த கொடையின் மூலம், பள்ளிக்கு வட்ட வடிவிலான மேசை, நாற்காலிகள் வாங்கப்பட்டன. வகுப்பறைகள் முழுக்க டைல்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளன. இன்ஃபோசிஸ் நிறுவனம் இரண்டு கணினிகளை அளித்திருக்கிறது. தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்டவைகளைத் தொடங்கியிருக்கிறோம். இதன் மூலம், பள்ளி எப்போதும் சுத்தமாகக் காட்சி அளிக்கும்.

இதனால், எங்களின் சுண்டக்காம்பாளையம் பள்ளி, திருப்பூர் மாவட்டத்தின் 2015-ம் ஆண்டுக்கான சிறந்த நடுநிலைப்பள்ளியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சமூக ஊடகங்களின் பங்கு

"பொறியியல் படித்த என் நண்பர்கள், 'என்ஜினியர் ஆகி நாங்க சாதிக்காததை, நீ என்ஜினியர் ஆகாமயே சாதிச்சுட்டு இருக்க!' என்று கூறுவார்கள்.

பள்ளியில் செயல்படுத்தும் திட்டங்களையும், புது முயற்சிகளையும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வது என் வழக்கம். சமூக ஊடகங்கள் எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கின்றன. இதன் மூலம் நாங்கள் செய்யும் முயற்சிகளை மற்றவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். மற்ற ஆசிரியர்கள் செய்யும் விஷயங்களை நாங்கள் தெரிந்துகொள்கிறோம்!" நிறைவாக சொல்லி முடிக்கிறார் நேசமணி.

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

| மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் நல் அடையாள அணிவகுப்புத் தொடர் இது. |

முந்தைய அத்தியாயம்: >அன்பாசிரியர் 7 - வாசுகி: 'நான் செய்த உதவி' எனும் நெகிழ்வுத் திட்டம்!


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x