Published : 02 Nov 2015 09:23 AM
Last Updated : 02 Nov 2015 09:23 AM

தி இந்து 300-வது ஆண்டை எட்டும்: எழுத்தாளர் பிரபஞ்சன் வாழ்த்து

3வது ஆண்டை எட்டியுள்ள ‘தி இந்து’, 300வது ஆண்டை எட்டும் என்று புதுச்சேரியில் நடைபெற்ற வாசகர் திருவிழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன் தெரிவித்தார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் இரண்டாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாகர்கோவில், கும்பகோணம், மதுரை, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், காரைக்குடி ஆகிய இடங்களைத் தொடர்ந்து, புதுச்சேரியில் நேற்று வாசகர் திருவிழா நடைபெற்றது. புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கம்பன் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:

புதுச்சேரிக்கு தனி பண்பாடு, வாழ்முறை உள்ளது. தமிழ்நாட்டை வேறு நாடு என்றுதான் சிறுவயதில் பார்த்துள்ளேன். ‘தி இந்து’ தற்போது 3வது ஆண்டை தொடங்குகிறது. இது 300வது ஆண்டாக மாறும். புத்தகம், பத்திரிகையை பிரிக்கும்போது கிடைக்கும் வாசனை இ-புக்கில் கிடைக்காது. ‘தி இந்து’ முதல் இதழை பிரித்து படித்து பார்த்தபோது, அதே நிலைதான் இருந்தது. தனி மனிதனை சமூக மனிதனாக மாற்றும் பணி பத்திரிகையுடையது. ‘தி இந்து’ சமூகத்தை, பெண்களை மேன்மைப்படுத்துகிறது. நைட்டி இயல்பான உடையாக இருந்தது. தற்போது, லெக்கின்ஸ் வந்துள்ளது. ஒரு பெண் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை அவர்தான் தீர்மானி்க்க வேண்டும். மற்றவருக்கு உரிமையில்லை. பெண் மீதுள்ள அபிப்ராயத்தை ஒருவர் சொல்வதன் மூலம் அவரின் யோக்கியதையை தெரிந்து கொள்ள முடியும். பெண்ணால் மேதையானோர் வரிசையில் காந்தி, பாரதியார் ஆகியோர் உள்ளனர்.

அண்மையில் நாயை பெண் திருமணம் செய்து கொண்ட மராத்தி கதை உலகளவில் சென்றுள்ளது. நாயை ஒரு பெண் திருமணம் செய்து கொண்டது தொடர்பான செய்தி வெளியாகும். அதில், ‘நாய் திருமணம் செய்து கொண்டதன் அடிப்படையில் அன்பை மாற்றி கொள்ளாது. எதை சமைத்து தந்தாலும் சாப்பிடும். டாஸ்மாக் சென்று குடித்து விட்டு 12 மணிக்கு அடுத்த வீட்டு கதவை தட்டாது’ என நாயை திருமணம் செய்த பெண் கூறுவதாக அமையும். இந்த கதையின் மூலம் இந்திய ஆண்களின் முகம் கிழிந்து தொங்குகிறது.

அந்த காலத்தில் ஆறு வெட்டினார்கள். அதை சாக்கடையாக நாம் மாற்றியுள்ளோம். உதாரணம் கூவம் ஆறு. 36 மைல் ஓடும் கூவம் ஆற்றில், 36000 டன் கழிவுகளை கொட்டியதால் சாக்கடையானது. தலைமை செயலராக இருந்த பச்சையப்பா முதலியார் கூவத்தில் குளித்து விட்டு வந்த கதை தற்போது மாறி விட்டது. தமிழர்கள் அந்த காலத்தில் கடல் வழியை ஆமை மூலம் கண்டுபிடித்தனர். ஆமை செல்லும் வழியே நல்ல வழி. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அத்தனை பேருந்து நிலையங்களும் ஏரிக்குள்தான் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் வாலஜா ஏரி மீண்டு வந்தது பற்றி, ‘தி இந்து’வில் செய்தி வெளியாகியுள்ளது.

இலக்கியவாதிகளுக்கு ‘தி இந்து’ தரும் இடத்தை வேறு எந்த இலக்கிய பத்திரிக்கை கூட தருவதில்லை. வெங்கட சாமிநாதன், லாசரா ஆகிய படைப்பாளிகள் பற்றிய கட்டுரைகள் ‘தி இந்து’வில்தான் வந்துள்ளன. நகுலன் யாரென்று பலருக்கு தெரியாமல் இருந்தது. தற்போது மாறியிருக்கிறது. தமிழகத்தில் எழுத்தாளர்கள் பட்டினியால் சாவதில்லை. புறக்கணிப்பால்தான் சாகிறார்கள்.

நாம் பெரும்பாலும் தமிழை தாண்டி வெளியே போவதில்லை. எல்லாம் தடுமாறி போன சூழலில் தடம் மாறலாம் என்ற சூழலில், இயல்பான அழகான தெளிவான மொழியை ‘தி இந்து’ பேசுகிறது. அனைத்து விஷயத்தை பேச, எழுத நல்ல மொழி பயன்படுத்தி வருகிறார்கள். எப்போதும் மக்களின் ஞானத்தை மேன்மைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

புதுச்சேரியில் நடைபெற்ற வாசகர் விழாவை ‘தி இந்து’ குழுமத்தின் மூத்த பொது மேலாளர் (நிர்வாகம்) வி.பாலசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். மண்டல விற்பனை மேலாளர் நன்றி கூறினார். இந்த நிகழ்வை ஹார்லிக்ஸ் ஓட்ஸ், ஸ்ரீராம்.

'அச்சு ஊடகங்களுக்கு என்றுமே அழிவே இல்லை' - ‘தி இந்து’ ஆசிரியர் கே.அசோகன் பேசியதாவது:

இணையதளம் வழியாக அதிகம் பேர் பத்திரிகைகளை படிப்பதால் அச்சு ஊடகங்களுக்கு எதிர்காலம் இல்லை என்ற ஒரு தவறான கருத்து இருக்கிறது. அச்சு ஊடக காலம் முடிந்து விட்டது என்றும் தவறாக நினைக்கிறார்கள். இது மேற்கத்திய நாடுகளின் பார்வை.

ஆனால் இந்தியாவில் பத்திரிகைகளுக்கு மேலும் மேலுல் வளர்ச்சி ஏற்படுவதே உண்மை. பிராந்திய மொழிகளில் தரமான பத்திரிகைகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ‘தி இந்து’ 2 ஆண்டுகளை முடித்த நிலையில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

அப்துல் கலாம் அவர்களின் ‘என் வாழ்வில் திருக்குறள்’ என்ற அறிவிப்பு வெளியானதுமே, அந்த தொடரை படிக்க அதிகம் குழந்தைகளும், பெரியோர்களும் நாளிதழை கடைக்கு வந்து வாங்கியிருக்கிறார்கள். அப்துல் கலாம் நினைவாக கலாம் புத்தகங்கள் அச்சு ஊடகம் மூலமாகவே அனைவரையும் சென்றடைந்தது. அச்சு ஊடகங்களுக்கு என்றுமே அழிவே இல்லை என்பது தெளிவாகிறது என்றார்.

‘தி இந்து’ என்றால் தித்திக்கும் இந்து: திரைப்பட நடிகர் பார்த்திபன் பாராட்டு

புதுச்சேரி கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்ற ‘தி இந்து’ 2-ம் ஆண்டு வாசகர் திருவிழாவில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:

தமிழ் நாளிதழுக்கு ‘தி இந்து’ என பெயரிட்டுள்ளார்களே என பலர் கூறுகின்றர். நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? ‘தி இந்து’ என்றால் தித்திக்கும் இந்து, தில்லான இந்து, திறமையான இந்து, திகட்டாத இந்து என்பதை தான் ‘தி இந்து’ என பெயரிட்டுள்ளார்கள் என எண்ணுகிறேன். ஆங்கிலேயர் காலத்திலேயே தில்லாக ஆங்கில பத்திரிகை நடத்திய பாரம்பரியமிக்க ‘தி இந்து’ குழுமத்தில் இருந்து தற்போது தமிழிலும் வெளி வந்திருப்பது மிகப்பெரிய சிறப்பு. தற்போதுள்ள சூழலில் நாளிதழ்களை நடுநிலையோடு நடத்துவது சிரமமான காரியம். ஆனாலும், ‘தி இந்து’ நடுநிலை மாறாமல் செயல்படுகிறது.

‘தி இந்து’ நாளிதழின் இணைப்புப் பகுதிகளில் பட்டா மாற்றம், நலம் வாழ, சுற்றுச்சூழல் உள்ளிட்ட தகவல்களை பிழையின்றி தெளிவாக தருகிறது. இதில் வெளிவரும் கருத்துப் பேழை, கருத்தில்லா ஏழைகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.

ஒரு திரைப்படத்துக்கு தலைப்பு எப்படியோ, அதுபோல ஒரு செய்திக்கு தலைப்பு மிக அவசியம். அந்த வகையில் இந்த நாளிதழில் ஊர்வலம், தேசம், சர்வதேசம் என்பது போன்ற தலைப்புகள் தனித்துவம் பெறுகின்றன. குறைகளை சுட்டிக் காட்ட கட்டம் கட்டுவது வாசகர்களை மிகவும் நேசிக்க வைத்துள்ளது. ஒரு திரைப்படத்துக்கு முதலாளிகளாக நான் கருதுவது ரசிகர்களை தான். ரசிகர்களைத் தாண்டி எதுவும் இல்லை. அதுபோல, ‘தி இந்து’ நிர்வாகத்தை பொறுத்தவரை வாசகர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை கவனித்து வருகிறேன். வாசகர்களின் ஆலோசனைகளை ஏற்று அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பதோடு, அவர்களை கொண்டாடும் நாளிதழாக ‘தி இந்து’ விளங்குகிறது என்றார்.

மேடை ஏறிய உள்ளூர் பிரமுகர்கள், வாசகர்கள்...

புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய பேராசிரியர் மு.இளங்கோவன்

‘தி இந்து’ பத்திரிகையை அறிவார்ந்த குழு நடத்துகிறது. பாராட்டுக்கள். செய்திகளை உடனுக்குடன் இணையதளத்தில் அப்டேட் செய்ய வேண்டும். அனைத்து செய்திகளும் சிறப்பாக உள்ளது. தமிழ் மொழி, இனம் வளர்ப்பதற்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

கடலூர் வாசகர் வைத்தியலிங்கம்

‘தி இந்து’ தமிழ் பொக்கிஷம். ‘உங்கள் சாப்பாட்டில் பீப் இருக்கிறதா?’ என்ற கே.கே.மகேஷ் கட்டுரையை ஜெராக்ஸ் எடுத்து பலரிடம் தந்தேன். பெண்கள் படித்து கொண்டிருப்பது தொட வேண்டும். எங்கள் அலுவலக போர்டில் ‘தி இந்து’ கட்டிங் உள்ளது. நடுப்பக்க கட்டுரைகளை 4 பக்கங்களாக்க வேண்டும்.

புதுச்சேரி தமிழ்ச் சங்கம் தலைவர் முனைவர் முத்து

‘தி இந்து’ தொடங்கிய முதல் நாள் இதழில் இருந்து அதன் வாசகனாய் இருப்பதில் பெருமை கொள்கிறேன். தினந்தோறும் 2ம் பக்கத்தில் வரும் ‘அரிய முத்துக்கள் 10’ நன்றாக உள்ளது. எத்தனை முறை படித்தாலும் திகட்டாத தெள்ளமுதாக ‘தி இந்து’ செய்திகளும், கட்டுரைகளும் உள்ளன.

கூட்டேரிப்பட்டு வாசகி பிரேமா

எங்கள் ஊர் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது. இங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இது குறித்து, ‘தி இந்து’ உங்கள் குரலில் புகார் பதிவு செய்தேன். அது பற்றிய செய்தி வந்த பிறகு விபத்து ஏற்படாதவாறு போலீஸார் தடுப்புக் கட்டைகள் வைத்தனர். இதன் மூலம் பலர் விபத்தில் இருந்து தப்பியுள்ளனர்.

ஓய்வு பெற்ற ஆசிரியை மங்கையர்கரசி

நான் ஓய்வு பெற்ற பிறகு நாளிதழ்கள் வாங்குவதை நிறுத்தி இருந்தேன். ஏதேச்சையாக ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று ‘தி இந்து’ இதழை வாங்கி படித்தேன். அதில், பெண் இன்று இணைப்பிதழ் நன்றாக இருந்தது. அது எனக்குள் உற்சாகத்தை ஏற்படுத்தியது. விவாத களம் போன்றவற்றில் என்னையும் எழுத தூண்டியது. தற்போது, தொடர்ந்து ‘தி இந்து’ வாங்கி வருகிறேன். எனது வாசகர் கடிதமும் ‘தி இந்து’வில் வெளியாகிறது.

கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் ஜெயராஜ் குரு

பத்திரிகை சுதந்திரம் ‘தி இந்து’வில் இருக்கிறது. ஜனநாயகத்தன்மையுடன் கூடிய போராட்டக் குணம் உள்ளது. மாட்டுக் கறி விவகாரம், காமராஜர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதே ஏற்பட்டது. அப்போது, ‘மனிதர்களை பற்றி கவலைப்படாமல் மாடு பற்றி கவலைப்படுவதா?’ என கேட்டார். காமராஜர் வழியில் ‘தி இந்து’ இருக்கிறது. அதுபோல, பீகார் தேர்தல் பற்றிய செய்தி குறித்து அங்குள்ள எனது நண்பரிடம் கேட்டபோது அந்த மக்களின் எண்ணத்தை ‘தி இந்து’ சரியாக வெளியிட்டது புரிந்தது.

மங்கலம்பேட்டை அரசு பள்ளி தலைமையாசிரியர் உத்திரபதி

நடுப்பக்க கட்டுரைகள் நன்றாக உள்ளது. பள்ளியில் இறைவணக்கத்தின்போது ‘தி இந்து’ செய்தி மற்றும் கட்டுரை கருத்துகளை மாணவர்களுக்கு கூறுகிறேன். இதனால், அந்த கருத்துகளை கேட்பதற்காகவே சரியான நேரத்துக்கு மாணவர்கள் வருகின்றனர். ‘தி இந்து’ படிக்க தொடங்கிய பிறகு, நான் தலைமை மாணாக்கராக மாறி விட்டேன். வெற்றி கொடி, மாயா பஜார் பெருமையாக உள்ளது.

கண்டமங்கலம் வாசகர் மோகன்

‘தி இந்து’வில் புற்று நோய் பற்றிய கட்டுரையை படித்து நெகிழ்ந்து போனேன். என் மனைவிக்கும் புற்று நோய் என்பதால் எனக்கு அது பற்றிய அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியது. சமஸ் கட்டுரை படிக்கும் என்ற ஆவலை தூண்டுகிறது.

புதுச்சேரி இமாகுலேட் கல்வியியல் கல்லூரி முதல்வர் சக்திவேல்

கல்வி தொடர்பான கட்டுரைகள் நன்றாக உள்ளன. இணைப்பிதழ்கள் அனைத்தும் சமூக பிணைப்பிதழ்கள். அறிவியல் கட்டுரை, எழுத்தாளர்களின் கட்டுரை நன்றாக இருக்கிறது. நான் பெயருக்கு முதல்வராக இல்லாமல் நல்ல கல்லூரி முதல்வராக செயல்பட ‘தி இந்து’வும் ஒரு காரணம்.

புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் ரவிக்குமார்

‘தி இந்து’ ஜனநாயகத்தின் குரலாக விளங்குகிறது. தற்போது, தீபாவளி மலர் முழுவதும் படித்து விட்டேன். அது, ஆவனம் போல பாதுகாக்கப்பட வேண்டியது. பத்து படங்களுடன் புதுச்சேரி பற்றி வெளியாகி உள்ள கட்டுரையும் அருமையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x