

பொள்ளாச்சியில் இருந்து வால் பாறை செல்லும் வழியில், ஆழியாறு அணை அருகே உள்ளன சின்னார் பதி பழங்குடியின குடியிருப்புகள். மலை மலசர் என்று அறியப்படும் 30 குடும்பங்களைச் சேர்ந்தோர் இங்கு வசிக்கின்றனர்.
வன விலங்குகளால் இவர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் ஏராளம். அதுமட்டுமின்றி குடியிருப்பு, மின்சாரம், கல்வி, வேலைவாய்ப்பு என அடிப்படை வசதிகள் இன்றி 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கின்றனர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இவர்களது வீடுகள் சின்னா பின்னமாகி, மரங்களைத் தாங்க வைத்து, அதில் வாழ்ந்து வருகின்றனர். வீடு இடிந்து காயம் அடைந்தவர்கள் பலர். `புல்லில் வேயப்பட்ட குடிசைகளை அமைத் திருந்தோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் தான் அதை அகற்றி, வீடுகளை கட்டிக் கொடுத் தது. ஆனால் அதன் பிறகு யாரும் கவனிக்கவில்லை. பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை’ என்பது இந்த மக்களின் குற்றச்சாட்டு.
மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகி மாயவன் கூறியது:
முதலில் வன விலங்குகளிடம் இருந்து எங்களை காப்பாற்றிக் கொள்ள வீடு வேண்டும். பாதை, கழிப்பிடம், குழந்தைகளுக்கான பால்வாடி, வீடுகளுக்கு மின்சாரம் எனத் தேவைகள் இங்கு அதிகம். அருகே உள்ள சுற்றுலாத் தலமான குரங்கு நீர்வீழ்ச்சியில் வாகன நிறுத்துமிடம் அமைத்து அதில் வரும் வருமானம் மூலம் சின்னார்பதி மக்களின் வசதிகளை மேம்படுத்த வனத்துறை திட்டமிட்டது. அதில் தற்போது ரூ.4 லட்சத்திற்கும் அதிகமான தொகை சேர்ந்துள்ளது. ஆனால் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
அணைப் பகுதி பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளதால் இவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதில் இழுபறி நீடிக்கிறது. இதற்கு ஆட்சியர் மட்டுமே தீர்வு காண முடியும். பொதுப்பணி, வருவாய், வனம், கல்வி, மின்வாரியம் ஆகிய 5 துறைகளை வரவழைத்து பேசி தீர்வு காண்பதாக துணை ஆட்சியர் தெரிவித்தார். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை என்றார்.
ஆனைமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் மற்றும் முதன்மை கூடுதல் வனப் பாதுகாவலர் ராஜீவ் கே.வத்ஸவா கூறுகையில், தற்போது புதிய வன அலுவலர் பொறுப்பேற்றுள்ளார். அவர் மூலம் பழங்குடி மக்களுக்கான தேவைகளை பெற்றுத்தர முயற்சி எடுக்கப்படும்.
இதுதவிர பூனாச்சியில் கடைகள், குரங்கு அருவியில் பார்க்கிங், ஆழியாறு அணைப் பூங்கா கழிப்பிடம் ஆகியவற்றை பராமரிக்கும் பணி இந்த மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்களுக்கு வருவாய் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அவர்களுக்கு நலப் பணிகளை கொண்டு செல்வோம் என்றார்.