Published : 16 Oct 2015 02:25 PM
Last Updated : 16 Oct 2015 02:25 PM

தாயக மக்கள் பேரிடர் அச்சம் போக்க அமெரிக்க பணியை உதறிய இளைஞர்!

வெளிநாடுகளில் கை நிறைய சம்பாதித்த பணத்தைக் கொண்டு தாயகம் திரும்பி, தன்னலம் இல்லாமல் சேவை செய்யும் பலரைக் கேள்விப்பட்டிருப்போம்; கண்டும் இருப்போம். ஆனால் அமெரிக்காவில் சர்வதேச ஹோட்டல் ஒன்றில் பொது மேலாளராக புகழுச்சியில் இருந்தவர், அமெரிக்கக் குடியுரிமையைத் தவிர்த்துவிட்டு தான் மேற்கொள்ள வேண்டிய பணிக்காக, நாடு திரும்பி தன் வாழ்க்கையை முதலில் இருந்து தொடங்கியவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அமெரிக்க விடுதியில் மேலாளராகப் பணிபுரிந்து, "பேரிடர் மீட்புத்திறனில் இந்தியா" என்னும் இலக்கை நிறைவேற்ற ஆசைப்பட்டு மனிதாபிமானியாக மாறிய ஹரி பாலாஜிதான் அவர். எதனால் இந்த மாற்றம்? அவரே சொல்கிறார்.

"என் ஊர் சென்னை. இந்தியாவில் என்னுடைய இளங்கலையையும், ஸ்விட்சர்லாந்தில் முதுகலைப் படிப்பையும் முடித்தேன். விடுதி மேலாண்மைப் படிப்பை முதன்மையாகக் கொண்ட பிறகு, இந்தியா, ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா, குவைத் ஆகிய நாடுகளில் உள்ள புகழ்பெற்ற விடுதிகளில் பணியாற்றியிருக்கிறேன். அமெரிக்காவில் விடுதிகளின் திட்ட மேலாண்மையே எனது முக்கியப் பணியாக இருந்தது. புதிதாக ஓர் இடம் விற்கப்படும்போதும், வாங்கப்படும்போதும், அதன் திட்ட அமலாக்கத்துறை சார்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

இரட்டைக் கோபுர தகர்ப்பு

2001 ஆம் ஆண்டு. ஒரு முறை, வேலை காரணமாக நியூயார்க்கை நோக்கி விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. அப்போதுதான் முதல்முறையாக மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவைக் கண்டேன். சில நாட்கள் கழித்து, அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியான லூய்சியானா என்ற இடம், கத்ரீனா என்னும் இயற்கை சூறாவளியால் பாதிக்கப்பட்டது. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட எதிர்பாராத தாக்குதலிலும், இயற்கைப் பேரிடர் அழிவின்போதும் அமெரிக்கா முன்னேற்பாட்டுடன் செயல்பட்டது. பேரிடரின்போது செய்யவேண்டியது பற்றியும், செய்யக்கூடாதது பற்றியும் அமெரிக்க மக்களுக்கு முன்னரே கற்பிக்கப்பட்டிருந்தது. இரட்டைக் கோபுர தகர்ப்புக்கு பின்னர் இது குறித்த விழிப்புணர்வு அதிகமாகத் தொடங்கியிருந்தது.

மாதக்கணக்காக அதே அதிர்ச்சியில் இருந்த என்னை, ஒரு பயிற்சி வகுப்பு மாற்றியது. இரட்டைக் கோபுர இடிப்பின் போது நியூயார்க் மேயராக இருந்த ரூடி க்யூலியானி, 'அந்த கோர சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே, எப்படி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரமுடிந்தது' என்பது குறித்து, ஒரு தன்னம்பிக்கை வகுப்பில் பேசினேன். ஆனால் இந்தியாவிலோ, 2004-ல் ஏற்பட்ட சுனாமிக்குப் பின்னர்தான் பேரிடர் மேலாண்மை அமைப்பு தொடங்கப்பட்டது, பேரிடர் மேலாண்மை சட்டமும் 2005-ல் உருவாக்கப்பட்டது. எனது நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாக இருப்பதை உணர்ந்து, உடனடியாக வேலையை உதறித் தாயகம் திரும்பினேன்.

மீண்டும் படிப்பு

தனது இரண்டாவது பயணம் குறித்து விவரித்தவர், ”சுகாதார நலன் குறித்து குவைத்தில் ஒரு கோர்ஸை முடித்தேன். முறையான கல்வி கற்கவேண்டும் என்பதா; இரண்டாவது முதுகலையாக எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தேன். அதன் ஒரு பங்காக, ''சென்னை மற்றும் பெங்களூரு பகுதிகளில் உள்ள முதன்மை மருத்துவமனைகளில் ஏற்படும் பாதிப்பு'' குறித்தும் ஓர் ஆய்வை மேற்கொண்டேன். அதே நேரத்தில், சென்னை அவசரகால மேலாண்மைத் திட்டத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்க முடிந்தது.

அதுவரையிலும் இந்தியாவில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி, பொதுமக்களை உள்ளடக்காமல் இருந்தது. அவசரகால உதவி மையங்களான மருத்துவ, சுகாதார, காவல், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் ஆகிய துறைகள் தனித்தனியாகவே இயங்கிக் கொண்டிருந்தன. தனித்தனியாகக் கொடுக்கப்படும் பயிற்சி, அவசரகாலங்களில் உதவினாலும், ஒரே கூரையின் கீழ் வேலைபார்த்து, உயிரிழப்பைத் தவிர்க்க ஏதுவாக இல்லாமல் இருந்தது.

பேரிடர் பயிற்சி வகுப்புகள்

பேரிடர் தருணங்களை நேரடியாகக் கண்டு, அது தொடர்பான படிப்பையும் முடித்து, பயிற்சி வகுப்புகளை நடத்த ஆரம்பித்தேன். அதில் பேரிடர் சமயத்தில் ஏற்படும் பாலினப் பிரச்சனைகள், உளவியல் மேலாண்மை குறித்த விஷயங்கள் முக்கியப்பங்கு வகித்தன. மீட்புக்குழுவினர் உடல்ரீதியாகக் காயப்பட்டவர்கள் மீதே கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று தோன்றியது. பேரழிவின் அதிர்ச்சியில் இருந்து உள ரீதியாக மீளாதவர்களுக்கு ஆதரவு, தொழில்முறை ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் அளிக்கப்பட்டது.

பேரிடர் நிகழ்வுக்குப் பின்னர், அங்கே தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயம் இருக்கும் என்பதால், அடையாளம் தெரியாத நபர்கள் முகாம்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் உண்மையாக உதவ நினைப்பவர்களும் உதவமுடியாத சூழ்நிலை உருவானது. அதனால் பதிவு செய்யப்பட்ட சமூக சேவை மையங்கள் மூலம் உதவி பெறப்படும் முறை தொடங்கப்பட்டது. பெற்றோரை இழந்து / பிரிந்து தனியாக வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் இளம் பெண்கள், ஆண்களின் நிலை அபாயகரமானது என்பதை உணர்ந்தேன். அவர்கள் சரியான பாதையில் கொண்டு செல்லப்பட வேண்டியவர்கள் என்றெண்ணி அவர்களுக்கும் ஆலோசனை வகுப்புகளை எடுத்தேன்.

எங்கள் பயிற்சி வகுப்புகளின் மூலம் கவனம் செலுத்தப்படாமல் இருந்த பல முக்கியமான விஷயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. பேரிடர் காலங்களில் கர்ப்பிணிகளாக இருக்கும், 2.5 லிருந்து 4% பெண்களின் பாதுகாப்பான பிரசவத்துக்கு இடமும், பொருட்களும் வழங்கப்படுகின்றன. அவர்களைக் கவனித்துக் கொள்ளப் பயிற்சி பெற்ற பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

முறையான, தனித்தனியான கழிவறைகள், பூட்டுகளோடு வழங்கப்படுகின்றன. 24x7 மின்சாரம், பாதுகாப்பு ஆகியவை இடையறாது வழங்கப்படுகின்றன. சில சமயம் பலதரப்பட்ட வட்டாரங்களில் இருந்து வெவ்வேறு வகையான செய்திகள் பெறப்படுவதன் மூலம், ஊடகங்களில் தவறான செய்திகள் இடம்பெற வாய்ப்புண்டு. அவ்வாறு நடந்து பேரிடரின் வீரியம் அதிகரிக்கப்பட்டுவிடக்கூடாது. அதனால் ஊடகங்களோடு முறையான சந்திப்பை ஏற்படுத்தி அவர்களின் ஆதரவை எப்படிப் பெறுவது என்பது குறித்தும் வகுப்புகள் எடுக்கிறேன்.

முறைப்படுத்தப்பட்ட கல்வி

இயற்கைப் பேரிடர்கள் மட்டுமல்லாமல், தீ விபத்துகள், சாலை விபத்துகள், குடியிருப்பு பகுதிகளில் அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் நடக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்றும் வகுப்புகள் எடுக்கிறோம். பயிற்சி வகுப்புகளை பெரிய நிறுவனங்களில் மட்டுமல்லாமல், கல்வி நிறுவனங்களிலும் நடத்தப்படுகிறது. மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படும் எதுவும் அடுத்த தலைமுறைக்கும் பயனளிக்கும் என்று தீர்க்கமாக நம்புகிறேன். பேரிடர் ஏற்படும் அபாயம் உள்ள இடங்களுக்குச் சென்று அறிக்கைகள் தயாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அதில் அந்த இடத்தின் கட்டுமானம், மக்கள்தொகை, மருத்துவமனைகள், தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள் போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

பயிற்சி வகுப்புகளில், பாலியல் வன்முறைகளைக் கையாள்வது எப்படி என்றும் கற்றுத்தருகிறோம். அதில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண்களின் மனநிலை, அவர்களின் பாதுகாப்பு, ரகசியத்தைப் பேணிக்காப்பது முதலியவை விவாதிக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் பொது சுகாதார மற்றும் தடுப்பு மருந்து இயக்ககம், மருத்துவமனைகளில் அவசர காலத் தேவைகளை பலப்படுத்துவது குறித்த ஆய்வை நிர்ணயித்தது. அதற்கான பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு முழுக்க 32 மாவட்டங்களிலும் எடுத்து முடித்தாயிற்று.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை குறித்த வகுப்புகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம். இந்தியா உலக அரங்கில் பேரிடர் மேலாண்மையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.தீயணைப்பாளர்கள் எப்படி, எப்போதுமே வேகமாகவும், விழிப்பாகவும் இருக்கிறார்கள் என்று பலமுறை யோசித்திருப்போம். ஒவ்வொரு நாளும் அவர்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வதால்தான் இது சாத்தியமாகிறது. அதேபோல பேரிடர் காலங்களில் ஒவ்வொருவரும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் முழுமையான பயிற்சியோடு தயாராகினால் போதும். பேரிடரையும் சிறு துன்பமாய்க் கடக்கலாம்" என்று நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுகிறார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x