Published : 10 Oct 2015 02:46 PM
Last Updated : 10 Oct 2015 02:46 PM

அன்பாசிரியர் 5 - மேக்டலின் பிரேமலதா: மாற்றம்... முன்னேற்றம்... ஆச்சரிய ஆசிரியை!

இரண்டு முறை தொழில்நுட்பக் கல்விக்கான தேசிய விருதுகள், தொடர்ந்து மூன்று முறை மாநில விருதுகள், சிறந்த தொழில்நுட்ப ஆசிரியருக்கான போட்டியின் இறுதியாளர், மெல்லக் கற்போருக்காக எளிமைப்படுத்தப்பட்ட ஆங்கிலக்கல்வித் திட்ட வடிவமைப்பாளர் என்று பல்வேறு அங்கீகாரங்கள் கிடைத்தாலும், புன்னகையை அடையாளமாகக் கொண்டிருக்கிறார் ஆசிரியை மேக்டலின் பிரேமலதா.

ஆசிரியை பிரேமலதாவின் திருவாரூர் மாவட்டம் காரக்கோட்டை கிராமத்தில் இருக்கும் பஞ்சாயத்து ஒன்றிய இடைநிலைப் பள்ளியில் தன் முதல் பணியைத் தொடங்கினார். கன்னியாகுமரியில், நகர்ப்புறத்தில் வளர்ந்து அங்கேயே தன் ஆங்கிலப் பட்டப்படிப்பை முடித்தவருக்கு, கிராமமாக இருந்த காரக்கோட்டை சூழ்நிலையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கிராமத்திலேயே பிறந்து வளரும் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உத்வேகம் மட்டும், அவரின் ஆழ்மனதில் சுழன்று கொண்டே இருந்தது. என்ன செய்தார் அவர்? பிரேமலதாவே சொல்கிறார்.

"செயல்வழிக்கற்றல் தொடங்கப்பட்டிருந்த தருணம் அது. ஒவ்வொரு பாடமும் செய்முறைத் தேர்வுக்கு 40 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வுக்கு 60 மதிப்பெண்களுமாக பிரிக்கப்பட்டிருந்தது. செய்முறைத் தேர்வு, வழக்கமான செய்முறையாக மட்டும் இல்லாமல் சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையிலான கல்வியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன்படி எங்களுடைய ஒவ்வொரு செயல்திட்டத்தையும் சமூகம் சார்ந்த பிரச்சனைக்கான தீர்வை நோக்கி நகரும் திட்டமாகப் பார்த்துக் கொண்டோம்.

காரக்கோட்டை, விவசாயத் தொழிலை மட்டுமே நம்பியிருந்த ஒரு கிராமம். மழைக்காலத்தில் வெள்ளத்தாலும், மழை பொய்க்கும்போதும் விவசாயம் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதனால் தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம், பள்ளியிலேயே வகுப்பறை ஒன்றை தயார் செய்து, ஐம்பது பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளித்தோம். அவர்களில் பலர் இப்போது, மற்றவர்களுக்கு தையல் கற்றுக்கொடுக்கின்றனர்.

இளம் வயதிலேயே படிப்பை விடுத்து குழந்தைத் தொழிலாளர்களாக ஆகும் சிறார்களை மீட்டெடுப்பது குறித்த செயல்திட்டம் அடுத்தது. குழந்தைகளோடு சேர்த்து பெற்றோரும் இதை பயங்கரமாக எதிர்த்தனர். அதற்கான சமுதாய அமைப்பின் அடிநாதத்தையே மாற்ற வேண்டியிருந்தது. ஒவ்வொரு குழுவிலும் நான்கு மாணவர்கள் வீதம், நான்கு குழுக்கள், காரக்கோட்டை கிராமத்தின் ஒவ்வொரு வீதிக்கும் அனுப்பப்பட்டன. அக்குழுக்கள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய தகவலைப் பெற்றுவந்தன. பஞ்சாயத்து தலைவரின் அனுமதியோடு, தெருவில் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தினோம். குழந்தைத் தொழிலாளர்களின் மனநிலை, வேலைப்பளு, வருங்காலம் உள்ளிட்ட பிரச்சனைகளை நாடகமாகவும், பாடல்களாகவும் போட்டோம். அந்த வருடத்தில் மட்டும் ஒன்பது குழந்தைத் தொழிலாளர்கள் எங்களால் மீட்கப்பட்டு, பள்ளியில் சேர்க்கப்பட்டனர்."

மாணவர்களை வைத்தே சமுதாயப் பிரச்சினையைத் தீர்க்க எண்ணிய பிரேமலதா, தனது அடுத்த செயல்திட்டமாக புகையிலைப் பொருட்கள் விழிப்புணர்வைக் கையில் எடுத்தார். பள்ளியில் தினசரி காலை பிரேயரில் மாணவர்களை, "புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்த மாட்டேன்; பெரியவர்கள் கேட்டால் வாங்கித் தர மாட்டேன்!" என்று உறுதிமொழி எடுக்க வைத்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக "குழந்தைக்காக என்னுடைய பழக்கத்தை விட்டுவிடுகிறேன் என்று புகையிலை, புகைப்பழக்கத்தைக் கைவிட்டவர்கள் ஏராளம்" என்று நெகிழ்கிறார் பிரேமலதா.

தாத்தாவுக்கு பேத்தி சொன்ன பாடம்

"புகைக்கு எதிரான செயல்திட்டத்தில் இருந்த ஏழாம்வகுப்பு மாணவியின் தங்கை, எங்கள் பள்ளியிலேயே ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். அவள் ஒருநாள் புகைபிடித்துக் கொண்டிருப்பவரின் அருகில் தன் தாத்தா நிற்பதைப் பார்த்திருக்கிறாள். உடனே, 'தாத்தா என்கூட வா!' என்று தன் மழலைக் குரல் மாறாமல் பலமுறை கூறி, அவரை அந்த இடத்தை விட்டு வரச் செய்திருக்கிறாள். ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியரான அவளின் தாத்தா எங்கள் பள்ளிக்கு வந்து, ''படித்திருந்தும் இதைப்பற்றி எனக்கு சிந்தித்துப் பார்க்கத் தோன்றவில்லை; ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் பேத்திக்கு இத்தகைய எண்ணங்கள் தோன்ற நீங்கள்தான் காரணம்" என்று கண் கலங்கிவிட்டார்.

வகுப்பறையில் இருந்து வாழ்க்கைக்கு...

"கண்பார்வை இல்லாததால் முடங்கிப் போய் விடாமல், முயற்சியுடன் இயங்கி கண்பார்வை அற்றவர்களுக்கு முன்னோடியாக மாறிய ஹெலன் கெல்லரைப் பற்றி வகுப்பெடுத்துக் கொண்டிருந்தேன், வகுப்பில் இருந்து ஒரு குரல் 'ஒரு நிமிஷம் டீச்சர்!' என்றது. நிறுத்தியவுடன், 'எங்க ஊர்ல ரெண்டு பேருக்கு காது கேட்காது; வாய் பேச முடியாது. அவங்க அஞ்சாவதுக்கு மேல படிக்கல. அவங்க இங்க கூட்டிட்டு வரட்டுமா டீச்சர் என்று கேட்டான் ஒரு மாணவன். ஒரு நிமிடம் எனக்குப் பேச்சே வரவில்லை.

வகுப்பறை பாடத்தில் இருந்த மனது, எப்படி அங்கே சென்றிருக்கிறது என்று பாருங்கள். எல்லாமே நம் பாடத்தில் இருக்கிறது; பத்தோடு பதினொன்றாகத் தேர்வுக்கு மட்டுமே அதைப் பார்க்கும் பார்வையை முதலில் மாற்ற வேண்டும். நடைமுறை வாழ்க்கையோடு அதை இணைத்துப் பார்க்க வேண்டும். சொல்ல மறந்துவிட்டேனே, லாவண்யா, ரூபாவது ஆகிய இரண்டு மாற்றுத் திறனாளிப் பெண்களும் இப்போது பத்தாம் வகுப்பை முடித்துவிட்டார்கள்.

அடுத்ததாக 'இயற்கையை காப்போம்' என்ற செயல்திட்டத்தை ஆரம்பித்தோம். 1000 மரக்கன்றுகளை நட்டு, முறையாகப் பராமரிப்பதுதான் இலக்கு. வனத்துறை இலவசமாக அளித்த கன்றுகளை பேருக்காகக் கொடுத்துவிடாமல் விருப்பம், இடவசதி இருக்கிறதா என்று கேட்டு, அடுத்த வருடம் மரக்கன்றுகளை வந்து பார்ப்போம் என்று கூறி, பின்னர் மரக்கன்றுகளை அளித்தோம். இப்போது போய்ப் பார்த்ததில் 80 சதவீதக் கன்றுகள் தழைத்து வளர்ந்து கொண்டிருக்கின்றன.

முழு ஆண்டுத் தேர்வு சமயத்தில் கடுமையான வெப்பம் காரணமாக அம்மை போடுதல் அதிகமாக இருந்தது. நன்றாகப் படிப்பவர்கள் கூட நோயின் காரணமாக தேர்வு எழுத முடியாமல் போனது. இந்த செயல்திட்டத்தின்கீழ், மருத்துவ விழிப்புணர்வு முகாம் ஒன்றை அமைத்து, அம்மை வருவதற்கான காரணம் என்ன, தடுப்பது எப்படி, என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் போன்றவற்றை எங்கள் மாணவர்கள் விளக்கினர். வருடாவருடம் பல மாணவர்களுக்கு வரும் அம்மை நோய், அந்த வருடம் யாருக்கும் வரவில்லை.

இப்போது பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப்பொருட்களின் கழிவுகளைக் கொண்டு பயனுள்ள பொருட்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டோம். கைவினைப் பொருட்கள் அனைத்தையும் கண்காட்சியில் வைத்து அதில் வரும் பணத்தை, அருகிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தின் ஒரு நேர சாப்பாட்டுக்கு உதவலாம் முடிவெடுத்துள்ளோம். இன்னும் நிறைய செய்ய வேண்டும். அதற்கான விதையாக என் மாணவர்கள் முளைத்தெழுவார்கள்!"

| மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் நல் அடையாள அணிவகுப்புத் தொடர் இது. |

முந்தைய அத்தியாயம்:>அன்பாசிரியர் 4 - குருமூர்த்தி: யூடியூபில் களத்தூர் அரசு பள்ளியும் காணொலி வித்தகரும்!


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x